-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2022 – இரண்டாவது அரையிறுதி ஆட்டம்
இறுதிவரை போராடிய மொராக்கோ.. இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டைனாவுடன் மோதும் பிரான்சு
உலகக்கோப்பை கால்பந்துத் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இனி இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியுடன் பிரான்சு அணி விளையடும்.
தோஹாவில் நடந்த இந்த அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்து மொராக்கோ அணி விளையாடியது. இந்த போட்டியில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் பிரான்ஸ் களமிறங்கிறது.
பிரான்சு அணி ஆரம்பமே அதிரடியாகத் தொடங்கியது. இந்த உலகக்கோப்பையில் தன்னை எதிர்த்து ஆடிய எந்த எதிரணியையும் மொராக்கோ அணி ஒரு கூட கோல் அடிக்கவிடவில்லை. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் பிரான்சு அணி, ஆட்டம் தொடங்கிய 5ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து அசத்தியது. பிரான்ஸ் அணியின் “தியோ ஹெர்னாண்டஸ்” முதல் கோலை அடித்து அணிக்கு ஒரு முன்னிலையை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அணியின் அட்டாக் மேலும் அதிகரித்தது. பெரும்பாலும் பிரான்ஸ் அணி வீரர்களே பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனிடையே கோல் கம்பத்திற்கு வெளியே அடித்ததன் காரணமாக 17ஆவது நிமிடத்தில் “ஜூருட்”-க்கு கோல் அடிக்கக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். அதேபோல் 36ஆவது நிமிடத்தில் “செளமேனி”-யின் அபார ஆட்டத்தால் மீண்டும் ஜீரூட்-க்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதையும் அவர் வீணடித்தார்.
44ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணியின் “எல்-யாமிக்” அந்தரத்தில் ஒரு குட்டிக்கரணம் அடித்து கோல் அடிக்க முயன்றார். ஆனால் அது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. இதனைத் தொடர்ந்து மொராக்கோ அணி அட்டாக்கில் பாய தொடங்கியது. ஒவ்வொரு முறையும் ரைட் விங்கில் மொராக்கோ பாய்ந்த போது, கார்னர் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தது. அதில் கோல் அடிக்க எடுத்த வாய்ப்பு, கடைசி நொடியில் பிரான்ஸ் கோல்கீப்பர் லூரிஸ் தடுத்தார். தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியின் முன்னிலையுடன் முடிவுக்கு வந்தது.
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் ரசிகர்களின் கரகோஷத்தோடு மொராக்கோ அணி களமிறங்கியது. இரண்டாம் பாதி தொடங்கிய நிமிடம் முதலே, மொராக்கோ அணி அட்டாக் மேல் அட்டாக் செய்தது. கிட்டத்தட்ட எந்த நேரத்திலும் மொராக்கோ அணிக்கு கோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக 79ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் எம்பாப்பே 5 வீரர்களுக்கு நடுவே கொடுத்த மேஜிக்கல் பாஸை வாங்கி, இளம் வீரர் முவானி கோல் அடித்தார்.
இந்த கோல் மூலம் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின்னர் மொராக்கோ அணி வீரர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இருப்பினும் இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தில் மொராக்கோ அணி பந்தை கோல் லைனில் வரை எடுத்து சென்றது. ஆனால் பிரான்ஸ் அணி தடுத்து நிறுத்தியது.
பிரான்ஸ் இந்த வெற்றியின் மூலம் ஃபிஃபா உலகக்க்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் வலிமையான அர்ஜென்டினா அணியை எதிர்த்து நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி விளையாட உள்ளது. நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே நேரடியாக மோத உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி வரும் 18ஆம் தேதி நடக்க உள்ளது.