டி20 உலகக் கோப்பை -சூப்பர் 8 ஆட்டங்கள் – 19 ஜூன் மற்றும் 20 ஜூன் 2024
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தென் ஆப்பிரிக்க vs அமெரிக்கா
முதல் சூப்பர் எட்டு ஆட்டம் 19ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா (194/4), அமெரிக்க (176/6) அணிகளுக்கிடையில் நார்த் சவுண்ட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த தென் ஆப்பிர்க்க அணியின் க்விண்டன் டி காக் (40 பந்துகளில் 74 ரன், 7 ஃபோர், 5 சிக்சர்), எய்டன் மர்கரம் (32 பந்துகளில் 46 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), கிளாசன் (22 பந்துகளில் 36 ரன், 3 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (16 பந்துகளில் 20 ரன், 2 ஃபோர்) ஆகியோர் சிறப்பாக ஆட அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 194 ரன் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய அமெரிக்க அணியில் அன்றிஸ் கௌஸ் (47 பந்துகளில் 80 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்), ஹர்மீத் சிங் (22 பந்துகளில் 38 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்), ஸ்டீவன் டைலர் (14 பந்துகளில் 24 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) என சிறப்பாக ஆடியபோதும் 20 ஓவர்களில் அமெரிக்க அணியால் 6 விக்கட் இழப்பிற்கு 176 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 18 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கு இந்தியத் தீவுகள் vs இங்கிலாந்து
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் மேற்கு இந்தியத்தீவுகள், இங்கிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாடிய மேற்கு இந்தியத்தீவுகள் அணியின் ஜான்சன் சார்லஸ் (34 பந்துகளில் 38 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் (32 பந்துகளில் 36 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), ரோவ்மன் போவல் (17 பந்துகளில் 36 ரன், 5 சிக்சர்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (15 பந்துகளில் 28 ரன்), ப்ராண்டன் கிங் (13 பந்துகளில் 23 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியில் பில் சால்ட் (47 பந்துகளில் 87 ரன், 7 ஃபோர், 5 சிக்சர்), ஜானி பெயர்ஸ்டோ (26 பந்துகளில் 48 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), ஜாஸ் பட்லர் (22 பந்துகளில் 25 ரன், 2 ஃபோர்), மொயின் அலி (10 பந்துகளில் 13 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி 17.3 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 181 ரன் அடித்து அணியை 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர்.
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான்
இன்று 20.06.2024 அன்று பிரிட்ஜ் டவுனில் நடந்த இந்தியா, ஆஃப்கானிஸ்தான் இடையேயான ஆட்டம் மிக முக்கியமாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்திய மேற்கு இந்தியத்தீவுகளில் ஆடும் முதல் ஆட்டம் இது. டாஸ் வென்று முதலில் மட்டையாட இந்திய அணி தீர்மானித்தது.
மூன்றாவது ஓவர் முடிவில் ரோஹித் ஷர்மா (13 பந்துகளில் 8 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரிஷப் பந்த் (11 பந்துகளில் 20 ரன், 4 ஃபோர்) விராட் கோலியுடன் (24 பந்துகளில் 24 ரன், 1 சிக்சர்) இணைந்து 7ஆவது ஓவர் வரை தாக்குப்பிடித்தார். அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் (28 பந்துகளில் 53 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்), ஷிவம் துபே (7 பந்துகளில் 10 ரன், 1 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (24 பந்துகளில் 32 ரன், 3 ஃபொர், 2 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஷீத் கான் 3 விக்கட் எடுத்தார்.
இரண்டாவதாக ஆடவந்த ஆஃப்கானிஸ்தான் அணியில் எவரும் நிலைத்து ஆடவில்லை. முதல் ஐந்து ஓவருக்குள் மூன்று விக்கட் விழுந்துவிட்டது. பும்ரா இரண்டு விக்கட்டுகளையும் அக்சர் படேல் ஒரு விக்கட்டையும் எடுத்தார். இறுதியில் பும்ராவின் பந்து வீச்சு 4 ஓவர், ஒரு மெய்டன், 7 ரன் 3 விக்கட் என இருந்தது. தனது கடைசி இரண்டு ஓவர்களில் அர்ஷதீப் சிங் மூன்று விக்கட்டுகளை எடுத்தார். குல்தீப் யாதவ் 2 விக்கட்டுகளியும், ஜதேஜா, அக்சர் படேல் இருவரும் தலா ஒரு விக்கட் எடுத்தனர். இருப்பினும் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர் வரை விளையாடியது; 134 ரன் களுக்கு அனைத்துவிக்கட்டுகளையும் இழந்து 47 ரன் களில் தோல்வியடைந்தது.
சூப்பர் 8 இல் புள்ளிகள் அட்டவணை 21.06.2024 வரை
குரூப் 1 | குரூப் 2 | |
A | இந்தியா 2 | அமெரிக்கா 0 |
B | ஆஸ்திரேலியா | இங்கிலாந்து 2 |
C | ஆஃப்கானிஸ்தான் 0 | மேற்கு இந்தியத் தீவுகள் 0 |
D | வங்கதேசம் | தென் ஆப்பிரிக்கா 2 |