பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் முதல் ஹிந்து பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கிருஷ்ண குமாரி கோலி (39). இவர் திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
பேநசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் அவர் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமாரி கோலி, சிந்து மாகாண சிறுபான்மையினர் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.
அவர் மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது பெண்களுக்கும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று கூறப்படுகிறது.
சிந்து மாகாணத்தில் தாகர்பர்கர் மாவட்டட்த்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமாரி கோலி. 1979 பிப்ரவரியில் பிறந்தவர். இவரும், இவரது குடும்பத்தினரும் நிலச்சுவான்தார் வைத்திருந்த தனிச் சிறையில் 3 ஆண்டுகள் இருந்தனர். கிருஷ்ண குமாரி 16 வயதில் லால்சந்த் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். சகோதரருடன் சமூக ஆர்வலராக பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இணைந்தார்.
கோலியுடன், நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேரும் திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.