கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இலங்கையில் அதிபர் மைத்ரீபால சிறீசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்து வருகின்றன.
இருப்பினும், அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் தோல்வி அடைந்தன. அதிலிருந்து இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ராஜபட்ச தலைமையிலான எஸ்எல்பிபி கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இதற்கு அதிபர் மைத்ரீபால சிறீசேன கட்சியும் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருந்தது. இதனால் இந்த விவகாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 225 உறுப்பினர்களில் 113 பேரின் ஆதரவு இருந்தால் போதுமானது. பிரதமர் ரணில் விக்ரமசிஙவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 உறுப்பினர்கள் ஆதரவு இருந்த நிலையில், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தங்களின் ஆதரவை ரணிலுக்கு வழங்குவதாக அறிவித்தது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ரணில் வெற்றி பெறுவார் என்பது உறுதியானது.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று இரவு 10 மணிக்கு நடைபெற்றது. இதில் 122 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். 76 பேர் மட்டுமே தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் 76 எம்பிக்கள் பங்கேற்கவில்லை. எனவே, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்விடைந்தது.