ஆதார் முறை அனைத்து நாடுகளுக்கும் ஏற்றது என்றும், இந்த முறையில் தனிநபர் தகவல்கள் திருடுபோகும் வாய்ப்பு இல்லை என்றும் சான்று அளித்திருக்கிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவுனர் பில் கேட்ஸ்.
ஆதார் முறையை பிற நாடுகளுக்கும் எடுத்துச் செல்வதற்காக உலக வங்கிக்கு தங்கள் அறக்கட்டளை மூலம் நிதியுதவி அளித்திருப்பதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆதார் அடையாள அட்டை முறையின் வடிவமைப்பாளர் என்று கூறப்படும் நந்தன் நிலேகனி இதில் உலக வங்கிக்கு உதவி வருவதாகக் கூறிய பில்கேட்ஸ், ஆதார் தொழில்நுட்பத்தால் தனிப்பட்ட உரிமைகளுக்கும், விவரங்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
ஆதார் மூலம் கிடைக்கும் பயன்கள் ஏராளம் எனக் குறிப்பிட்டுள்ள பில்கேட்ஸ், பிற நாடுகள் ஆதார் நடைமுறையை அப்படியே பின்பற்றுவதற்கு உகந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பதில் அது பங்கு வகிக்கிறது. ஆதார் முறையால், நாட்டில் குடிமக்களின் அரசாளுமைத் தரத்தில் அது பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, ஆதார் நடைமுறையை பிற நாடுகளும் ஏற்கலாம் என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.