மீடூ என்ற இயக்கத்தில் உடன்பாடு இல்லை என்கிறார்கள் பலர். இதில் பலர் உடன்பட்டு உறவு வைத்துக் கொண்டு திடீரென்று புறட்சியாளர் ஆகிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்!
சம்பவம் நடந்த காலத்தில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்பதும், இன்று புகார் தெரிவிப்பவர்கள் யாரும் அதை நிரூபிக்கப் போவதில்லை என்றும், நிரூபிக்கும் தேவையும் இல்லை என்பதால் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்பதும் அவர்களின் வாதமாக இருக்கிறது!
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் சீசனை பயன்படுத்தி இதில் பலர் குளிர் காய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மீடூ போன்ற மூவ்மென்ட்கள், பெண்களைக் கொச்சைப்படுத்தி விவாதப் பொருள் ஆக்குமே தவிர, இதனால் பெண்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும், அரசியல் ரீதியாக யாரை வேண்டுமானாலும் இவ்வாறு குற்றம் சாட்ட முடியும் என்பதும், பொய்ப் பிரசார இயக்கங்களுக்கு இது அல்வா சாப்பிடுவது மாதிரி என்பதும் சுட்டிக் காட்டப் படுகிறது.
ஆளுநரை சாய்ப்பதற்கு பாலியல் ரீதியான கருத்தியல் தாக்குதலைத் தொடுத்துள்ள அரசியல் கட்சிகள், அடுத்து இதே போல், #மீடூ போன்ற இயக்கங்களைப் பயன்படுத்தி, அடுத்துள்ள காய் நகர்த்தலை அரசியல் ரீதியாக முன்வைப்பர் என்று பலரும் எச்சரிக்கிறார்கள்!
இதனிடையே, இந்தக் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப்! முன்னரேயே கூட டிரம்ப் மீது இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளை சிலர் முன் வைத்தனர். அது பிரசாரக் களத்தில் பிரச்னையைக் கிளப்பியது!
இதை மனத்தில் கொண்டு தானோ என்னவோ, #MeToo மூலம் பாலியல் புகார் கூறுபவர்கள் வலுவான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும் என்று மெலனியா டிரம்ப் உறுதியிட்டுக் கூறுகிறார்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மெலானியா, கடந்த வாரம் கென்யாவில் ஏபிசி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”#மீடூ இயக்கப் பெண்களை நான் ஆதரிக்கிறேன். அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களை நாம் அரவணைக்க வேண்டும். அதே நேரத்தில் புகார் கூறும் பெண்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். நீங்கள் வெறுமனே, ‘நான் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டேன்’, ‘அவர் அதைச் செய்துவிட்டார்’ என்று கூறக் கூடாது. ஏனெனில் ஊடகங்கள் சில நேரங்களில் சில சம்பவங்களை அவர்களுக்கு ஏற்றவாறு சித்திரித்து விடுவர். அது சரியல்ல” என்று கூறியுள்ளார்.




