அமெரிக்க ஹெச்-1பி விசா கட்டணம் இரு மடங்கு அதிகரிப்பு: மசோதாவில் கையெழுத்திட்டார் ஒபாமா

வாஷிங்டன்:
அமெரிக்க ஹெச்-1பி விசா கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவில் ஒபாமா கையெழுத்திட்டார்.

அமெரிக்காவில் ஹெச்-1பி மற்றும் எல்-1 வகையிலான நுழைவு இசைவு (விசா) பெற்றுப் பணிபுரியும் ஊழியர்களைக் கொண்ட இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் 4,000 டாலர் (சுமார் ரூ.2.65 லட்சம்) கூடுதல் கட்டணம் செலுத்த வகைசெய்யும் சட்ட மசோதாவில் அந்நாட்டு அதிபர் ஒபாமா சனிக்கிழமை கையெழுத்திட்டார். இதனால், ஹெச்-1 பி விசாவுக்கு இதுவரை சுமார் ரூ.1.32 லட்சம் வரை கட்டணம் செலுத்தி வந்த மேற்குறிப்பிட்ட இந்திய நிறுவனங்கள், இனி ரூ.5.30 லட்சம் முதல் ரூ.6.63 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், அது தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தக மையக் கட்டடங்கள் மீது கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும், மறுவாழ்வுக்கான சிகிச்சை அளிக்கவும் ஏதுவாக நிதி திரட்டும் வகையில், சிறப்புச் சட்டம் ஒன்றை கடந்த 2009-ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு இயற்றியது. இதன்படி, ஹெச்-1பி மற்றும் எல்-1 வகையிலான விசாக்களைப் பெற்று பணிபுரியும் 50 சதவீத ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், அமெரிக்க அரசுக்கு கூடுதல் சிறப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் தாக்கம், பெரும்பாலும் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்துவதாக அமைந்தது.

இந்தச் சூழலில், அத்திட்டம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அதனை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, இந்தச் சட்ட மசோதாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டிருப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தக் கூடுதல் கட்டண நடைமுறை அமலுக்கு வரும் என அந்நாட்டு விசா துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.