மாலத்தீவில் புதிய அதிபராகப் பதவி ஏற்கவிருக்கும் இப்ராஹிம் சோலிஹின் பதவிஏற்பு விழாவுக்கு வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.
இதை அடுத்து இப்ராஹிம் சோலிஹ் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் மாலத்தீவுக்கு செல்கிறார்.
மாலத்தீவின் முந்தைய ஆட்சியில் சீன ஆதிக்கம் காரணமாக, இந்தியாவுடனான நட்பில் மாலத்தீவு சுணக்கம் காட்டியது. இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இப்ராஹிம் சோலிஹ் வெற்றி பெற்றதும், பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது தமது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு இப்ராஹிம் விடுத்த வேண்டுகோளை மோடி ஏற்றார். தெற்காசிய நாடுகளில் மாலத்தீவுக்கு மட்டுமே பிரதமர் மோடி இது வரை சென்றதில்லை; அடுத்த வாரம் அங்கும் அவர் செல்ல இருக்கிறார்.




