ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! ரணில் மீண்டும் பிரதமர்?!

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றது. இதை அடுத்து ரணில் மீண்டும் பிரதமர் ஆவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபட்ச வெளிநடப்பு செய்ததை அடுத்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜபட்சவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதை அடுத்து ரணிலுக்கு வாய்ப்பு கூடியுள்ளது.

கடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது. ரணில் விக்ரமசிங்க கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவையில் பங்கேற்றனர். அப்போது அதிபர் சிறீசேனாவால் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபட்ச அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.

இந்நிலையில், எதிர்க்கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாக அணி மாறினர். ரணிலுக்கு 120 உறுப்பினர் ஆதரவு ஏற்கெனவே இருந்தது. இதனால் ராஜபட்சவின் ஆதரவாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிராக கூச்சல், குழப்பம் எழுப்பினர்.

இதை அடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்க உத்தரவிட்ட சபாநாயகர், ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார். இதை அடுத்து ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமர் பதவி ஏற்பார் எனத் தெரிகிறது.