பரசுராமன் கதை பார் புகழும் கதை! பரசு என்றால் கோடாரி எனப் பொருள்-கையில் கோடாரியோடு சுற்றித் தன் விரோதிகளை வீழ்த்திய மகாவீரன் பரசுராமன்! பீஷ்மரும், துரோணரும் சீடர்கள் பரசுவுக்கு!
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது பரசுராமனின் மந்திரச் சொல். தந்தை சொல் கேட்டுத் தன் தாயையே வெட்டிச் சாய்த்து, அவர்களை உயிர்ப்பித்தவன் பரசுராமன்.
தந்தை தசரதன் சொல் கேட்டு கானகம் சென்ற மற்றொரு ராமன், வில் ஒடித்து சீதையை மணந்து மிதிலையிலிருந்து நாடு திரும்பும்போது ராமனிடம் வீண் வம்பிழுக்கிழுத்து கோடரியைக் காட்டி நிறைய வாங்கிக் கட்டிக் கொள்ளும் பரசுராமனின் பெரிய கதை இராமாயணத்திலும் வருகிறது.. மீண்டும் இதை அசோகவனத்தில் ராவணனிடம் சீதை கூறும் கட்டமும் இராமாயணத்தில் ஒர் சுவை அங்கம்!
மேடை அனுபவம் மிக்க கலைஞர் ஜி.செல்வாவின் அவாண்ட் அமைப்பு, பரசு என்ற தலைப்பில் பரசுராமனை மேடையேற்றுகிறது. எழுத்தாற்றல் படைத்த இளவழகன் முருகன் பரசுவின் எழுத்துப் படைப்பாளி. இசை:அருள்குமார் .இயக்கம்: ஜி.செல்வா. உடை, நடை, நடிப்பு, உச்சரிப்பு அனைத்திலும் அதிக கவனம் காட்டப்பட்டிருக்கும் என நம்பலாம்.
வெள்ளி, சனிகளில் எஸ்பிளனேட் அரங்கில் இடம் பெறும் இந்த அரிய உள்ளூர் தயாரிப்பிற்கு உங்கள் ஆதரவு அவசியம் தேவை. டிக்கெட்டுகள் வேக விற்பனையில்!
– ஏ.பி. ராமன், சிங்கப்பூர்.