14 வயது சிறுமியை கட்டாயக் கல்யாணம் செய்த 32 வயது ஆட்டோ ஓட்டுநர் நண்பருடன் கைது

உள்ளூர் செய்திகள்

சேலம்: சேலம் மாவட்டத்தில் 14 வயதுச் சிறுமியை கட்டாயக் கல்யாணம் செய்த ஆட்டோ ஓட்டுநர், அவரது திருமணத்துக்கு உதவிய நண்பர் ஒருவருடன் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வீராணம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகனுக்கு, சேலம் பொன்னம்மாபேட்டையை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் வசிக்கும் காய்கறி வியாபாரம் செய்யும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மோகன் அடிக்கடி அவரது வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். அப்போது அப்பெண்ணின் மகளான 5 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த 14 வயதுச் சிறுமியை தனக்கு கல்யாணம் செய்து தருமாறு மோகன் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணும் சம்மதித்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தனது மகளை அழைத்துக்கொண்டு அந்தப் பெண் சேலம் அருகில் உள்ள அதிகாரப்பட்டிக்கு சென்றார். அப்போது, அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் மாப்பிள்ளை கோலத்தில் மோகனும், அவரது நண்பரும் இருந்துள்ளனர். அங்கே கோவிலில் வைத்து மோகனுக்கும் அந்தச் சிறுமிக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் குறித்து இரு வீட்டாரின் தரப்பில் உறவினர்கள் எவருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லையாம். பின்னர் மோகன் அந்தச் சிறுமியை அழைத்துக் கொண்டு பெரிய வீராணம் பகுதிக்கு வந்து குடியேறினார். இந்நிலையில், சிறுமியை மோகன் திருமணம் செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சேலத்தில் உள்ள அன்பு இல்ல நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர். அவர்களின் புகாரின் பேரில், சேலம் காவல் ஆணையர் அமல்ராஜ் இதுகுறித்து விசாரிக்க அம்மாபேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் விசாரணையில் குழந்தை திருமணம் நடந்துள்ளது உறுதியானது. இதையடுத்து 14 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்துக்காக ஆட்டோ டிரைவர் மோகனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து சிறுமியை மீட்டனர். இதை அறிந்து, சிறுமியின் தாயார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.