புது தில்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் நீதிமன்றத்தில் விஜயகாந்த் நாளை மறுநாள் ஆஜராகத் தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். பிரதான் எதிர்க்கட்சியான தேமுதிகவினர், அதிமுகவிற்கு எதிராகவும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் என்ன பேசினாலும் அவதூறு வழக்குகள் போடப்பட்டன. விஜயகாந்த் சட்டமன்றப் படிக்கட்டுகள் ஏறியதை விட ஊர் ஊராகப் போய் நீதிமன்றப் படிக்கட்டுகளிலேயே அதிகம் ஏறினார். விஜயகாந்த். செல்லும் இடங்களில் சில நேரம் கலவரங்களும் வெடித்தன. அதுவும் நீதிமன்ற வளாகத்திலேயே. இதற்கு ஆளும் கட்சி வழக்கறிஞர்களே தூண்டுதலாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இதற்கு முடிவு கட்டும் விதமாக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, தேமுதிக எம்எல்ஏக்கள் பார்த்திபன், வெங்கடேஷ், பார்த்தசாரதி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தங்கள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. விஜயகாந்த் சார்பில் அவதூறு சட்டப் பிரவுக்கு எதிராக மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் திங்கள்கிழமை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், விஜயகாந்த் மீது தமிழக அரசு உள்பட பல்வேறு தரப்பினர் 14 நீதிமன்றங்களில் தொடுத்த அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், பிரேமலதா மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்கவும் இடைக்கால தடை விதித்தது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்கில் வரும் புதன்கிழமை ஆஜராவதில் இருந்தும் விஜயகாந்த்துக்கு உச்சநிதிமன்றம் விலக்கு அளித்தது. மேலும், அவதூறு வழக்குகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
