தென்காசி: காதலித்து திருமணம் செய்து மகளைக் கொன்ற தந்தை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் நெல்லை
shalom shibha - 2026

உறவினரைக் காதலித்து திருமணம் செய்ததற்காக ஒரு பெண்ணை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் தென்காசி மாவட்டத்தில் நடந்துள்ளது.

ஊத்துமலை அருகே உள்ள தெற்கு காவலாகுறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், மாரிமுத்து.

விவசாய கூலித் தொழிலாளியான அவரது மகள் ஷாலோம் ஷீபா என்பவர் கடந்த இரு வருடங்களாக தனது உறவுக்காரரான முத்துராஜ் என்பவரைக் காதலித்துள்ளார்.

இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வந்ததும் ஷாலோம் ஷீபாவின் தந்தை மாரிமுத்து கடுமையாக எதிர்த்துள்ளார். அதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்களை பெற்றோர் அழைத்துவந்து பிரித்து வைத்திருக்கிறார்கள். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டதுடன், பெற்றோருக்குத் தெரியாமல் வெளியூருக்குச் சென்று வாழ்ந்துள்ளனர்.

இதனிடையே சொந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் கொடை விழாவுக்காக வந்த இருவரும், முத்துராஜின் வீட்டில் தங்கியுள்ளனர்.

தன் பெற்றோரும் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் ஷாலோம் ஷீபா பெற்றோரைப் பார்ப்பதற்காக ஆசையுடன் சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த அவரது தந்தை மாரிமுத்து மகளை வீட்டுக்குள் விடாமல் தடுத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

மகள் காதல் திருமணம் செய்தது பிடிக்காமல் ஆத்திரத்தில் இருந்த மாரிமுத்து அரிவாளை எடுத்து வந்து ஷாலோம் ஷீபாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தாய், தந்தையைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்ற காதல் மனைவி கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் கணவர் முத்துராஜை நிலைகுலைய வைத்துள்ளது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஊத்துமலை போலீஸார், கொலை செய்த மாரிமுத்துவை கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.