செங்கோட்டை அருகே ரயிலில் அடிபட்டு புலி உயிரிழப்பு; மக்கள் அச்சம்!

சற்றுமுன் தமிழகம் நெல்லை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே விரைவு ரயிலில் புலி அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடி நோக்கிச் செல்லும் விரைவு ரயில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதையில், ஆரியங்காவை அடுத்து, பகவதிபுரம் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த வழியாக செங்கோட்டைக்கு வந்தபோது, ரயிலில் புலி ஒன்று அடிபட்டு சிக்கி தண்டவாளத்தின் அருகிலேயே உயிரிழந்து கிடந்தது.

இந்தச் சம்பவம் அதிகாலை வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதும், தென்காசி மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்து போன புலியை மருத்துவப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்று, பரிசோதனை செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே ஆரியங்காவு பகுதியில் சுற்றுலாவுக்கு வந்திருந்த சிலரும், ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து வந்திருந்த பக்தர்கள் ஓரிருவரும் தாங்கள் புலி நடமாட்டத்தைக் கண்டதாக தெரிவித்திருந்தனர். அருகில் உள்ள தமிழக – கேரள எல்லைப் பகுதி கிராம மக்களும் புலி நடமாட்டம் குறித்து அச்சம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ரயிலில் அடிபட்டு புலி ஒன்று உயிரிழந்த சம்பவத்தால், அந்தப் புகார்கள் உண்மையாகியுள்ளது. மேலும், தற்போது ஆரியங்காவு – பகவதிபுரம் உள்ளடக்கிய வனப்பகுதியில் புலிகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் கிராமத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam