
பிராமண அர்ச்சகர்களை அப்புறப்படுத்தவேண்டும் என்பதுதான் உண்மையான நோக்கம். அதை அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்குகிறேன் என்ற போர்வையில் நடத்தியிருக்கிறார்கள். இது ஆகம மீறல். அப்பட்டமான அராஜகம்.
அதே நேரம் இது முதல் ஆகம மீறல் அல்ல. பிற அனைத்து ஆகம மீறல்களும் நடந்து முடித்துவிட்ட சூழலில் இது இறுதி ஆணீயாக அடிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு மன்னரிடமிருந்து அவருடைய ராஜ்ஜியம் பறிக்கப்பட்ட போதும் அவர் கண்ணீர் உகுத்திருப்பார். ஒரு தேவரடியாரை இழிவுபடுத்தி கோவிலில் இருந்து அகற்றியபோது அவரும் இப்படித்தான் கண்ணீர் உகுத்திருப்பார். மங்கள வாத்தியம் இசைப்பவர் தொடங்கி தீப்பந்தம் ஏந்துபவர் வரையில் அத்தனைப் பேரும் தமது மரபார்ந்த உரிமை பறிக்கப்பட்டபோது இதுபோலவே கண்ணீர் உகுத்திருப்பார்கள். அத்தனை பேரின் கண்ணீரையும் கண்டும் காணாமல் போன பக்தர் சமூகம் அர்ச்சகரின் இறுதிக் கண்ணீரையும் அப்படியே எளிதில் புறமொதுக்கிவிட்டுச் செல்லும்.
இது தவிர்க்க முடியாத விதி.ஆனால், ஒரு மன்னரிடமிருந்து ராஜ்ஜியம் பறிக்கப்பட்டதென்பது சர்வாதிகாரத்தில் இருந்து மக்களாட்சிக்கான நகர்வுக்கு அடிப்படை என்பதால் அதைத் தயக்கத்துடன் ஏற்றுக் கொள்ளலாம். ஒரு மன்னர் அந்த அதிகாரம் கைவிட்டுப் போன பின்னரும் பிற வலிமைகளின் மூலம் தன் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ளமுடிந்தவரும் கூட.
தீப்பந்தம் ஏந்துபவர் போன்ற பிற கோவில் குடிகளின் உரிமைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதைக்கூட புதிய வேலை வாய்ப்புகளுக்கான விடுதலை என்று எடுத்துக்கொள்ளலாம்.
அர்ச்சக குலத்துக்கு நடக்கும் இந்த அநீதி என்பது எந்த ஒன்றுடனும் ஒப்பிட்டுச் சொல்லமுடியாத கொடூரம்.
யார் காரணம்?

கிறிஸ்தவ, இஸ்லாமிய, கம்யூனிஸ, போலி திராவிட, இந்து சீர்திருத்தவாதிகள், பக்தர்கள் என அனைவருக்குமே அவரவர் அளவுக்கு இதில் பங்கு உண்டு என்றாலும் ஒருவகையில் நவீன கால மாற்றமே. உலகில் புதிய மதிப்பீடுகள் உருவாகும்போது பழையவை ஓரங்கட்டத்தான் படும். பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பானதுதான்.
இதை எதிர்த்துப் போராடலாமா?
நிச்சயம் போராடத்தான் வேண்டும். ஆனால், இந்த இறுதி ஆகம மீறலை எதிர்த்து மட்டுமல்ல; பிற அனைத்து மீறல்களையும் எதிர்த்தும் போராட வேண்டும். அன்றாட பூஜைகள், திருவிழாக்கள், சொத்து நிர்வாகம், பணியாளர் பாதுகாப்பு தொடங்கி ஒவ்வொரு ஆலயத்திலும் என்னென்ன ஆகம நடைமுறைகள் விதிக்கப்பட்டனவோ அவை அனைத்தையும் மீட்டெடுக்கும் பெரும் போரின் முதல் முரசறைதலாக இந்தப் போராட்டம் இருக்கவேண்டும். இந்த உரிமைக் கொடியே அனைத்து ஆகம மீட்புப் போராட்டங்களின் முன்னணியில் பறக்கவேண்டும்.
யார் முக்கியமாக முன்கை எடுக்கவேண்டும்?
இந்துத்துவ சக்திகள் அனைவரும் களமிறங்கியாகவேண்டும். ஒரு பிராமணர் தனது ஸ்வதர்மத்தை மிகச் சிறப்புடன் பின்பற்றும்போதுதான் அவர் உன்னத பிராமணராக மட்டுமல்ல; உன்னத இந்துவாகவும் ஆகிறார். அதற்கான வசதி வாய்ப்பை உருவாக்கித் தரும்போதுதான் இந்துத்துவம் தன் கடமையைச் சரியாகச் செய்கிறது என்று அர்த்தம்.
ஆகம விதிப்படியான அர்ச்சக குலத்துக்கே முழு உரிமை என்பது கம்பீரமாக, நெஞ்சை நிமிர்த்தி ஆம் அதுதான் எங்கள் மரபு, எங்கள் உரிமை என்று செய்துதரப்படவேண்டிய விஷயம்.
அந்த அர்ச்சக குலத்தினர் நாங்கள் ஒரு தப்பும் செய்யவில்லையே… நாங்கள் அழியும் நிலையில் இருக்கும் உயிரினம்… நாங்கள் நிராதரவானவர்கள்… எங்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்றெல்லாம் கேட்கும் நிலைக்குத் தள்ளியிருப்பது இந்துத்துவத்துக்கு கெளரவமல்ல.
மன்னர் தொடங்கி தீப்பந்தம் ஏந்துபவர் வரை அனைவரையுமே ஓரங்கட்டியாகிவிட்டது. ஆகம அர்ச்சக மரபு மட்டும் நீடித்து வரவேண்டுமா என்ற கேள்வியில் ஒரு நியாயமும் கிடையாது. அர்ச்சக மரபைக் காப்பாற்றுவதில் தொடங்கி ஆகம மரபை முழுமையாக மீட்டெடுக்கவேண்டும் என்பதுதான் உண்மையான இலக்காக இருக்கவேண்டும்.
இதனால் இந்து ஒற்றுமைக்கு பங்கம் வருமோ என்று நினைக்கவேண்டாம். உண்மையான இந்து பக்தருக்கு இதில் தெளிவான பார்வை இருக்கிறது. ஆகம அர்ச்சக மரபு தொடரவேண்டும் என்பதை அந்த எளிய பக்தர் விரும்பவே செய்கிறார். ஒருவகையில் அர்ச்சகருக்கு மட்டுமல்ல எளிய பக்தருக்கு நன்மை செய்வதாக இருந்தாலும் இந்த மரபைக் காப்பாற்றத்தான் வேண்டும்.
ஓர் இந்துக் கோவிலில் அனைத்து இந்துவுக்கும் அர்ச்சகராக உரிமை இல்லையா… வாரிசுரிமை என்ற அடிப்படையே தவறு அல்லவா என்ற கேள்விகளைக் கொஞ்சம் பொறுமையாகக் கையாளவேண்டும். ஏனென்றால் இது வெறும் வாரிசுரிமை மட்டுமே அல்ல. பாரம்பரிய அர்ச்சகர் மட்டுமல்ல அவருடைய ஒட்டுமொத்த குடும்பமுமே அந்தப் புனிதப் பணிக்குத் தேவையான நியமங்களை, விதிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள். அரசால் நியமிக்கப்படும் அர்ச்சகர் விஷயத்தில் அப்படியான பொறுப்பும் விதிமுறையும் அவருடைய குடும்பத்துக்கு விதிக்கப்படமுடியாது. எனவே பாரம்பரிய அர்ச்சக மரபென்பது அந்தப் புனிதப் பணியைத் திறம்படச் செய்யத் தேவையான வழிமுறையும் கூட.
முன்னோர்கள் வகுத்தது என்பதற்காக அனைத்தையும் அப்படியே பின்பற்றவேண்டுமா. பாட்டன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணியைக் குடிக்கவேண்டுமா என்ற கேள்விகள் மிகவும் தவறு. அந்த முன்னோர்கள் வகுத்த வாழிவியலைப் பின்பற்றியபோதுதான் பாரதம் அனைத்துத் துறைகளிலும் உலகின் உன்னத நிலையில் இருந்தது என்பதை மறக்கவேண்டாம்.
இந்த நேர்மறையான காரணங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால் இந்து விரோத சக்திகள் விரும்பும் செயல் இது என்பதால் இதை எப்பாடு பட்டாவது தடுத்தாகவேண்டும் என்ற அரசியல் புரிதலாவது அவசியம் வேண்டும்.

சல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டபோது பாரம்பரியத்தைக் காக்கும் நோக்கில் எப்படி ஒரு மிகப் பெரிய போராட்டம் எழுந்ததோ அதுபோல் இந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றவும் மக்கள் எழுச்சி உருவாகவேண்டும். சபரிமலையில் குறிப்பிட்ட வயதுப் பெண்கள் நுழைவுக்கு எதிராக ஒரு இயக்கம் நடந்ததுபோல் கோவில் கருவறையின் புனிதம் சார்ந்தும் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்படவேண்டும்.
பிற ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபட்டுக் கொள்ளலாம். சபரிமலையில் அது கூடாது. ஆகமங்களை அடிப்படையாகக் கொள்ளாத நவீனக் கோவில்களில் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம். ஆனால், ஆகமங்கள் உள்ள கோவிலில் அதுவே நடைமுறைப்படுத்தப்படவேண்டும். பிற இடங்களில் எந்தக் கொடி வேணுமானாலும் பறந்துகொள்ளலாம். தில்லி செங்கோட்டையில் பாரத தேசியக் கொடிதான் பறக்கவேண்டும் என்பது போன்ற விஷயம் இது.
மத்திய பாஜக அரசுக்கு மாநில திமுகவுடனான நல்லுறவைப் பெற பிராமண அர்ச்சக குலத்தை(யும்] பலிகொடுக்கலாம் என்று வேறொரு அரசியல் கணக்குப் போட்டால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்து மத நலனை மட்டுமல்ல இந்திய அரசின் நலனையும் சேர்ந்தே இழக்க நேரிடும்.
எதிர்த்தரப்பு மிகத் தெளிவாக டபுள் கேம் ஆடி இரண்டையும் நம்மிடமிருந்து பறிக்கும். சிறிய உதாரணம் வேண்டுமா… அர்ச்சகர் விஷயத்தில் நீங்கள் செய்வதற்கு ஆதரவு தருகிறோம். ஜெய் ஹிந்த் என்று ஜவஹிருல்லாவையோ ஸ்டாலினையோ ஒரே ஒரு முறை சட்டசபையில் முழங்கச் சொல்லிப் பாருங்கள். நீங்கள் எந்த அளவுக்கு ஏமாற்றப்படுகிறீர்கள் என்பது தெரியவரும். நீ தோற்றால் உன் நாட்டை எனக்கு எழுதிக் கொடு. நான் தோற்றால் என் வீட்டை உனக்கு எழுதித் தருகிறேன் என்பதுபோன்ற சமநிலையற்ற அரசியல் சூதாட்டம் இது. நம் தரப்பு இழப்பு மட்டுமே அதிகமாக இருக்கும்.
எதிரிகள் தமது இலக்கில் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள். நம் உடம்பெல்லாம் கத்திகளைச் சொருகித்தான் வருகிறார்கள். கவசமாக இருந்து காக்கவேண்டிய இந்துத்துவர்களும் தம் பங்குக்கு ஒரு கத்தியை எடுத்து எதிரிகளிடம் கொடுக்க வேண்டாம்.
தெய்வத்தை வெளியேற்றிவிட்டு கோவிலைக் காப்பாற்ற முடியுமா என்ன?
- பி.ஆர்.மகாதேவன்