
நாளைக்கே- “மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை”-
“தமிழகம் தொடர்பான பிரச்னைகளில் உச்சநீதி மன்றம் தாமாக முன்வந்து (Suo Motto) ஏதேனும் எடுத்தால் அதற்குத் தமிழக அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும்”-
“ஆளுநர் என்பவர் எவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் மசோதாக்களில் கை எழுத்துப் போட மட்டுமே அதிகாரம் உள்ளவரோ அதே போன்று உச்சநீதி மன்றமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கும் அதிகாரம் மட்டுமே கொண்டது”-
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது எவ்வளவு கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டோ சிவில் குற்றச்சாட்டோ பதிவானாலும் அதன் மீது தீர்ப்பளிக்கும் உரிமை சபாநாயகருக்கு மட்டுமே உள்ளது – கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதி மன்றம் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகளில் தலையிட முடியாது – சபாநாயகர் கூறும் தீர்ப்பே இறுதியானது”…
இப்படி விதம் விதமாக தீர்மானங்களை போட்டு – அதற்கு ஆளுநரும் கையெழுத்துப் போட்டு – உச்ச நீதிமன்ற நீதிபதிக்கே அனுப்பினாலும் அனுப்புவார்கள்!
உடனே உச்சநீதிமன்றம் தலையிட்டு இப்படி எல்லாம் தீர்மானம் போட மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?- என்று அட்டர்னி ஜெனரலிடம் கருத்துக் கேட்கும்!
அட்டர்னி ஜெனரல் – “இந்த மாதிரி எல்லாம் தீர்மானம் போட அதிகாரம் ஏதும் மாநில அரசுக்கு இல்லை”- என்று கருத்து தெரிவிப்பார்.
உடனே மாநில அரசு – “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் என்பதே ஆகப் பெரிய உரிமைகளும் அதிகாரங்களும் பெற்ற அமைப்பு. அதன் முடிவுகளுக்கு இசைவு தெரிவிப்பதை தவிர உச்சநீதி மன்றத்துக்கு வேறு வழியில்லை!”
“ஆளுநர் என்பவர் மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு கை எழுத்துப் போட்டு அனுப்பும் போஸ்ட் மேன் என்றால் அதன் மீது ஒப்புதல் முத்திரை குத்தும் போஸ்ட் மாஸ்டர் போன்றதுதான் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா நீதிமன்றமும்!”- இப்படி ஒரு வாதத்தை “மக்கள் ஜனநாயக” வக்கீல்களை நியமித்து மாநில அரசு முன்வைக்கும்!
இதைக் கேட்டுவிட்டு உச்சநீதி மன்ற நீதிபதிகள் கொண்ட “பெஞ்ச்” ஒன்று அமைக்கப்படும்.
” மாநில அரசுக்கு இப்படி எல்லாம் தீர்மானம் இயற்ற அதிகாரம் இல்லை – தனது அதிகார வரம்பை மாநில அரசு மீறியுள்ளது”- என்று பெஞ்ச் நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள்.
அதிலும் 3 பேர் இப்படி- 2 பேர் வேறு மாதிரி என்று தீர்ப்பளிப்பார்கள்.
இப்படியே மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்.
நாமும் பொழுது போவதற்கு சுவாரஸ்யமாக இதை எல்லாம் வேடிக்கை பார்ப்போம்!
கருத்து: முரளி சீதாராமன்