
விருதுநகர் அருகே கள்ளத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததாக போலீஸ் ஒருவரை கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் இரு சக்கர வாகனத்தில் வருவதாக விருதுநகர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சாத்தூர்- விருதுநகர் 4 வழிச் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர்.
இந்நிலையில், பட்டம்புதூர் பகுதியில் மது போதையில் இருவர் சந்தேகப்படும்படி உள்ளதாக கிராம மக்கள் வச்சகாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் அங்கு சென்றனர். போலீசைக் கண்டதும், ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தப்பியுள்ளார்.
மற்றொருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர், கூமாபட்டியைச் சேர்ந்த தனுஷ்கொடி எனவும், விருதுநகர் ஆயுதப்படையில் காவலராக பணி புரிவதும் தெரிய வந்தது. மேலும், அவரிடமிருந்து கள்ளத் துப்பாக்கி மற்றும் 5 குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
எனவே, அவரிடம் மேலும் போலீசார் விசாரணை நடத்தினர்.அதில், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை, சிறைக்கு அழைத்து செல்லும் போது, தனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், நகைகளை விற்க வேண்டும் என சுரேஷ் அழைத்ததால் சென்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தப்பியோடிய சுரேசையைம் போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து பூசாரிப்பட்டியைச் சேர்ந்த இராமசாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.