கோல்கத்தா:
தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் விரக்தியில் இருந்த 23 வயது இளம் பெங்காலி டிவி., நடிகை மௌமிதா சாஹா, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்காலி டிவி., ஒன்றில் தொகுப்பாளினியாக பணி செய்தவர் நடிகை மௌமிதா சாஹா. அவர் நேற்று கோல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தெற்கு கோல்கத்தாவில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த சாஹாவினை அவரது பெற்றோர்கள் வழக்கம் போல் செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, விவரம் கேட்டுள்ளனர். அதனால் அவர் வீட்டில் சென்று பார்த்தபோது, சாஹா வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, மௌமிதா உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கடந்த சில நாட்களாக சினிமா துறையில் நடிக்க முயற்சி செய்து வந்துள்ளார் சாஹா. ஆனால், வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் விரக்தியில் இருந்துள்ளார். எனவே இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறினர்.
மேலும் இவரது மரணம் தற்கொலை தானா என்று ஆய்வு செய்ய, அவரது கைபேசி அழைப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டதற்கான தடயங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்றும், கடிதங்கள் ஏதும் கிடைக்கின்றதா என்றும் ஆய்வு செய்து வருவதாகக் கூறினர்.