
புது தில்லி:
45 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு இன்று தில்லியில் தொடங்குகிறது.
சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் நாடுகள், எரிபொருளுக்கு பதிலாக சூரிய ஒளியை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று, பருவநிலை உச்சி மாநாட்டில் கருத்து முன்வைக்கப் பட்டது. இதில் ஏற்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய, ஐரோப்பிய நாடுகள் சில ஒன்றிணைந்து சூரியசக்தி கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
இந்தக் கூட்டமைப்பின் மாநாடு இன்று இந்தியத் தலைநகர் தில்லியில் தொடங்குகிறது. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாரங்களில் 40 சதவீதம் என்ற அளவை 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மற்ற நாடுகளும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை மேம்படுத்துதல் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன உள்ளிட்ட 45 நாட்டுத் தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது.



