
உதகை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில், அதிமுக எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
தமிழக அரசின் திட்டமான, மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் விழா உதகையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 154 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, ஒரு லட்சம் பேருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசு முழுவேகத்துடன் செயல்படும். அதற்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்று கூறினார்.



