
சென்னை:
ஒருதலைக் காதலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினியின் உடல் நேற்று பொதுமக்கள் அஞ்சலியை அடுத்து தகனம் செய்யப் பட்டது. அவரைக் கொன்ற அழகேசன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்த அழகேசனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி மோகனா உத்தரவிட்டதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மோகன், சங்கரி தம்பதியின் மகள் அஸ்வினி, சென்னை கேகே நகரில் உள்ள கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டின் அருகே வசித்த அழகேசன் என்ற இளைஞர் இவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அஸ்வினி இவரின் தொந்தரவு தாங்காமல், மதுரவாயல் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எச்சரிக்கை செய்து அனுப்பினர் போலீஸார். இதனால் ஆத்திரமடைந்த அழகேசன், அஸ்வினியை கொலை செய்யும் நோக்கில் கையில் கத்தியுடன் அஸ்வினி பயிலும் கல்லூரிக்கு வந்தான்.
அஸ்வினி கல்லூரி முடிந்து வி.டி.லோகநாதன் தெருவில் வந்த போது அழகேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்வினியின் கழுத்தை அறுத்து கொலை செய்தான். இதைக் கண்டு அலறிய கல்லூரி மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அழகேசனை மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து கல்லூரி மாணவர்களிடம் இருந்து அழகேசனை மீட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த அழகேசனை போலீசார் நேற்று மதியம் 1.30 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்று சைதாப்பேட்டையில் உள்ள 18வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மோகனா கல்லூரி மாணவியை கொலை செய்த அழகேசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்தார். மீண்டும் அவனை 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அழகேசனை காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று காலை கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடலைப் பெற மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸாருக்கு எதிராகவும், அழகேசன் குடும்பத்துக்கு எதிராகவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘அழகேசனை மக்கள் முன்னிலையில் தூக்கில் போட வேண்டும். இது குற்றம் செய்யும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும். அஸ்வினிக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. அழகேசன் குடும்பத்தினர் நேரில் வந்து எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று அவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து, கே.கே.நகர் ஆய்வாளர் பாலமுரளி, கீழ்ப்பாக்கம் ஆய்வாளர் பாலன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித் தர சட்டரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை ஏற்றுக்கொண்ட உறவினர்கள், போராட்டத்தைக் கைவிட்டனர்.
பின்னர் அஸ்வினியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அஸ்வினியின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுக் செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், பகுதி மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட என நூற்றுக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.



