விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், கடந்த வார எபிசோடில் போட்டியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்து பேசினார். அப்போது சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
நாளை நமதே படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அதனை நான் தவறவிட்டுவிட்டேன். தற்பொழுது அந்த படத்தின் டைட்டில் உரிமையை நான் வாங்கி வைத்துள்ளேன். ஒருவேளை எதிர்காலத்தில் அதனை ரீமேக் செய்ய நேரிடலாம்.
இதேபோல, தேவர் மகன் படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறேன். அதில் சிவாஜி வேடத்தில் நான்தான் நடிப்பேன். இதுதவிர, நீங்கள் அறியாத ஒரு விஷயம் சொல்கிறேன். நடிகை குஷ்பு என்னுடன் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடித்தபோது, அந்த படத்தில் உதவி இயக்குனராக குஷ்பு பணிபுரிந்தார். உதவி இயக்குனர் வேலையை செய்துகொண்டே அவர் எனக்கு ஜோடியாகவும் படத்தில் நடித்தார். நல்ல திறமைசாலி. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதி, சினிமா தயாரிப்பாளர், நடிகை என பன்முகம் கொண்ட குஷ்பு உதவி இயக்குனராகப் பணிபுரிந்திருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் குஷ்பு சினிமா இயக்கவும் வாய்ப்புள்ளதாக, அவர்கள் குறிப்பிடுகின்றனர்.



