
#சாதிகள்_உள்ளதடி_பாப்பா #திரௌபதி #2014_ஜனவரி_மாதம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு கொடுக்கப்படுகிறது. பாலகிருஷ்ணன் என்பவர் தன் மனைவியை அவளது விருப்பத்திற்கு எதிராகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் அவர்கள் பெற்றோர் வீட்டில் வைத்திருப்பதாகவும், அவளை மீட்டுத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கிறார்.
ராயபுரம் துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த திருமணப் பதிவு பத்திரம் ஒன்றைத் திருமணத்திற்கு அத்தாட்சியாகக் கொடுக்கிறார். அதை ஏற்ற நீதிமன்றமும், அந்தப் பெண்ணை நீதிமன்றத்திற்குக் கூட்டி வர வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறது.
அந்தப் பெண் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து அந்தப் பையனைத் தனக்குத் தெரியும், ஆனால் திருமணம் நடக்கவில்லை எனச் சொல்கிறார். தீவிரமான விசாரணைக்குப் பின், பாலகிருஷ்ணன் கொடுத்த திருமணப் பதிவு பத்திரத்தின் மீது நீதிபதிகளுக்குச் சந்தேகம் வருகிறது.
சென்னை ராயபுரம் துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட திருமணப்பதிவு பத்திரங்களை வைத்துப் பல இளைஞர்கள், தங்கள் மனைவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆட்கொணர்வு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்திருப்பதாகவும், அதன் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்றும் சிபிசிஐடிக்கு உத்தர விடுகின்றனர். விசாரணையில் தெரிய வந்தவை பின்வருமாறு.
2013 ஆம் வருடத்தில் மட்டும், 120 வக்கீல்கள் 1559 திருமணங்களை, குறளகம் கட்டிடத்திலுள்ள வடசென்னை துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தியிருக்கிறார்கள். அதே வருடம், ராயபுரம் துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 48 வக்கீல்கள், 1937 திருமணங்களை நடத்தி இருப்பதும் தெரிய வருகிறது. மணமக்கள் இல்லாமல் திருமணத்தைப் பதிவு செய்யச் சொல்லி வக்கீல்கள் துணை சார்பதிவாளரை மிரட்டுவதும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டு அதுவும் இந்த வழக்கின் போது நீதிபதிகள் பார்வைக்கு ஒப்படைக்கப்பட்டது.
வழக்கின் முடிவு என்ன ஆனது, சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்ட அந்த வக்கீல்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது, அந்தப் பொய்யான திருமண பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதா, இல்லையா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை விரைவில் கிடைக்கும்.
ஆனால் அந்தப் பொய்யான திருமணப் பதிவு பத்திரங்களை வைத்து எத்தனை குடும்பங்கள் மிரட்டப்பட்டன, அவர்கள் எவ்வளவு துயரத்தை அனுபவித்தனர், எவ்வளவு இளம் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்பது பற்றி எல்லாம் பொதுவெளியில் இதுவரை யாரும் பேசியதில்லை என்பது மட்டுமே மிகவும் கசப்பான உண்மை.
- Selfie செய்திகள்