
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த முடியாது என மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகளால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றி, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று, திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட 3 பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் பொழுது சுங்கக் கட்டணம் கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால், உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என இப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மறுத்து வருகின்றனர். இது தொடர்பாக, அவ்வப்போது சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு., போராட்டம் நடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.
இதனால், கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுங்கச்சாவடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்த அவசியம் இல்லை என தற்காலிகமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது மீண்டும் திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் ஆகிய பகுதி வாகனங்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக் கட்டணம் செலுத்தச் சொல்லி வலியுறுத்தியதால் 4 நாட்களுக்கு முன் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சனிக்கிழமை நேற்று, தொடர்கதையாக உள்ள சுங்கச்சாவடி கட்டணத்திற்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் எனக் கோரி, சுங்கச்சாவடி முன்பு திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் சுங்கச் சாவடியில் உள்ள அனைத்து வாகனங்கள் செல்லும் பாதையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், சுங்கச்சாவடி வழியாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, செங்கோட்டை, தென்காசி, சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், கேரளா ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. அவசர ஊர்திகளும் அந்தப் பகுதி வழியே செல்ல முடியாமல் தவித்தன.
மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது தொடர் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டம் நடத்தியவர்கள் உறுதிபடக் கூறினர்.