
சங்கொலியில் இருந்து லட்சியத்தை நோக்கி…
தெலுங்கில் : பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்
அண்மையில் தெலுங்கு மாநிலத்தில் ஹைந்தவ சங்கராவம் என, ‘ஹிந்து சங்கராவம்’ என்ற பெயரில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு, ஹிந்துக்களின் ஒற்றுமையை அறிவித்தார்கள். அதில் பங்குகொண்ட பேச்சாளர்களும் பிரமுகர்களும் அற்புதமான கருத்துக்களைப் பகிர்ந்தார்கள். அதனை ஒரு வெற்றிகரமான, மகிழ்வான நிகழ்வாக வர்ணிக்கலாம்.
இதன் பின்னணியில் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, ஆலயங்களின் நிர்வாகம் அரசாங்கத்தின் கைகளுக்கு ஏன் சென்றது? அந்த நேரத்தில் அரசாங்கம் அன்றி வேறு யாரும் கோவில்களை நிர்வாகம் செய்ய இயலாமல் போனார்களா? மீண்டும் அந்தக் குறைகள் எதுவும் எழாமல் தனியார் அமைப்புகள் நிர்வாகம் செய்ய இயலுமா?
அபரிமிதமான செல்வமும், சொத்துக்களும் கொண்ட நம் கோவில்களை, ‘சனாதன போர்டு’ ஒன்று ஏற்பட்டு சரியாக நிர்வாகம் செய்யக் கூடிய நிலை உள்ளதா? ஊழல் காரர்கள் நெருங்கமுடியாமல், பல்வேறு சம்பிரதாயங்களைச் சேர்ந்தவர்கள், கருத்து வேறுபாடுகள் இன்றி, இணக்கத்தோடும், சிநேகத்தோடும் நடத்த இயலுமா? அரசியல் தலையீடு இல்லாமல் தொடர இயலுமா? இவற்றுக்குத் தெளிவான பதிலை ஏற்படுத்திக் கொண்டு திட்டப்படி நடத்த வேண்டும்.
அரசாங்க நிர்வாகத்தில் கோவில் ஒழுங்கு முறை மிகவும் சேதமடைந்தது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. பிற மதத்தவர் ஊழியர்களாகவும் வியாபாரிகளாகவும் சேர்வது விரும்பத்தகாத செயல். அதோடு பிற மதத்தவருக்கு ஹிந்து மதத்தின் மீதும், ஹிந்து தெய்வங்களின் மீதும் நம்பிக்கை இருக்காது என்பதோடு, வெறுப்பும், மதம் மாற்றும் சுபாவமும் இயல்பாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
அப்படிப்பட்டவர்களின் கையில் கொடுக்கப்படும் கோவில் நிர்வாக முறைகள் குழப்பத்தில் ஆழும் என்பதில் சந்தேகம் இல்லை. அளவுக்கதிகமான அரசியல் தலையீடும், கோவில் நிதிகளின் வெளியேற்றமும் எண்ணிலடங்காதவை. ஆலயங்களின் வளர்ச்சிக்கும், ஹிந்து தர்மத்திற்கும் அன்றி பிற மதத்தவருக்காகவும், வேறு பல செயல்பாடுகளுக்காகவும் கோவில் வருமானத்தைப் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே.
அரசாங்கம் மாறும் போதெல்லாம் கோவில் நடைமுறைகளில் ஏற்ற இறக்கங்களும், மாற்றங்களும் ஏற்பட்டு ஆலய அமைப்பு சேதமடைகிறது. அதே போல், மாநிலங்களில் ஹிந்து எதிர்ப்பு அரசுகள் அமைந்தால், ஆலயங்களின் நிலைமை மேலும் மோசமாகிறது. கோவில்களின் நல்லது கெட்டதுகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதோடு, புதுப்புது தொல்லைகளை உருவாக்குவார்கள்.
இந்தப் பின்னணியில் மிகவும் கவனமாக ‘சனாதன போர்டை’ உருவாக்கி, நடத்துவது என்பது சிக்கலான செயலே. தன்னலமின்மை, நிர்வாகத் திறன், கடவுள் பக்தி, உள்ளத் தூய்மை எல்லாம் நிறைந்த, ஆலய வரலாறு, ஆகம முறைகள் எல்லாம் தெரிந்த, திடமான குழுக்கள் உருவாக வேண்டும்.
பிற மதத்தவர் தம் மத போர்டுகளை ஏற்படுத்திக் கொண்டு, சுயமாக நிர்வாகம் செய்து கொண்டு, தம் மத நிலையங்களின் வருமானத்தைத் தம் மத வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். அத்தகைய ஒன்றுபட்ட உணர்வு இந்து மதத்தவருக்கு சாத்தியமா?
ஜாதிச் செருக்கு, மடாதிபதிகளின் மோதல்கள், சைவ, வைணவர்களின் வேறுபட்ட கருத்துகள் போன்றவை ஆழமாக வேர்விட்ட நிலையில், ஒன்றுபட்ட கூட்டு இலட்சியத்திற்காக கருத்தொற்றுமையும், சமரசமும் காட்டுவதில் இந்துக்கள் ஒன்றுபடுவர்களா?
பரஸ்பரம் வேறுபட்ட கருத்துகள், அதிகார மோகம், ஊழல் மனப்பான்மை போன்றவை எங்கு பார்த்தாலும் இருக்கத்தான் செய்யும் என்ற விட்டேத்தியான இயல்பில் உள்ளது ஹைந்தவ அமைப்பு. ஆனால், சாமானியர்களிடம் நம்பிக்கையும் ஒற்றுமையும் துளிர்விட்டு வருகிறது.
ஹிந்துக்களின் ஒற்றுமையை சகித்துக் கொள்ள விரும்பாத விரோத சக்திகள் மதவாரியாகவும், அரசியல் வாரியாகவும் சிதைப்பதற்குத் தயாராக உள்ளன. அவர்களின் தீய வியூகங்களில் இருந்தும் இந்த ஆலயப் பேரமைப்பு காப்பாபற்றப்பட வேண்டும்.
ஒரு பெரிய சுமையை ஒரு தோளில் இருந்து வேறொரு தோளுக்கு மாற்ற வேண்டி வரும்போது, நடுவில் நழுவி விழாமல், புதிய தோள் திடமாகவும், நிலையாகவும் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் அல்லவா?
சில மாநிலங்களில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் நடக்கும் கோவில்கள் சரியாக நடக்கின்றனவா? நன்கு கற்றறிந்து, புரிதலோடு, முழுமையாக ஹிந்துமதப் பிரிவுகளை அரவணைத்துக் கொண்டு, அந்தந்த ஆகம சம்பிரதாய பாரம்பரியங்களைச் சிதறாமல் முன்னெடுக்கும் பலமான அமைப்பு ஏற்பட வேண்டும். சுயநலனை ஒதுக்கி, பரந்த உள்ளத்தோடு சேவை புரியும் அறிஞர்கள் ஒன்றிணைய வேண்டும்.
ஹிந்து ஆலயங்கள் தூய்மையாகவும், குறைகளின்றியும், சூரிய, சந்திரன் இருக்கும் காலம் வரை க்ஷேமமாகவும், மேன்மையடையும் காலம் விரைவில் வர வேண்டும் என்று பரமேஸ்வரனை பிரார்த்தனை செய்வோம்.
(source – தலையங்கம், ருஷிபீடம், பிப்ரவரி, 2025)