
அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே மூன்றாம் பருவப் பாடப் புத்தகங்களை வழங்கப் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அரையாண்டுத் தேர்வு முடிவுற்ற நிலையில், விடுமுறை முடிந்து ஜனவரி 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கின்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவப் பாடப் புத்தகங்களை ஜனவரி 3ஆம் தேதி அன்றே வழங்க வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மூன்றாம் பருவப் பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலமாக அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புத்தகங்களைப் பெற்றுப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.



