இங்கிதம் பழகுவோம்(7) – விருந்தும் கசக்கும்!

பெரும்பாலும் 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே நம் எல்லோருக்குமே ஏதேனும் ஒரு காரணத்தால் உடல் உபாதைகள். தீய பழக்க வழக்கங்கள் இருந்தால் 50 வயதில் வரும் உபாதைகள் 30 வயதிலேயே வந்துவிடும். அவ்வளவுதான்.

உரம் ஏற்றிப் பயிரிடப்படும் காய்கறிகள் உட்பட நாம் சாப்பிடும் அனைத்துப் பொருட்களிலும் இராசயனக் கலப்பிடம். மாசு கலந்த காற்று. தூய்மையில்லாத தண்ணீர். இவற்றுடன் ஏதோ ஒரு காரணத்தால் வீட்டிலும், பணியிடத்திலும், கல்விக்கூடத்திலும் ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸினாலும் இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக், ஷுகர் என வேண்டாத விருந்தாளிகளாய் உடல் உபாதைகள்.

இவற்றைக் கட்டுப்படுத்த உதவும் காரணிகளில் மருந்து மாத்திரைகளை அடுத்து அதிகம் உதவுவது உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும், தேவையான அளவு எடுத்துக்கொள்ளும் உறக்கமும் மட்டுமே.

இந்தக் காரணிகளில் உணவுக்கட்டுப்பாடு என்பதை நம்மில் எத்தனை பேரால் கடைபிடிக்க முடிகிறது.

அலுவலக மீட்டிங், வீட்டு விசேஷ தினங்கள், நண்பர்கள் வீட்டு திருமணம், பிறந்தநாள் பார்ட்டி இப்படி ஏதேனும் ஒரு காரணத்தால் நம் உணவுக்கட்டுப்பாடு கட்டுப்பாட்டை மீறுகிறது.

இந்த சூழலில் வீட்டுக்கு சாப்பிட அழைக்கும் உறவினர்களும் தங்கள் பங்குக்கு நம் கட்டுப்பாட்டில் கை வைக்கிறார்கள்.

‘இன்று ஒருநாள் தானே… ஒன்றும் ஆகாது…’ என்று சொல்லி விருந்தோம்பல் செய்கிறார்கள்.

அவர்களைப் பொருத்தவரை அவர்கள் வீட்டில் சாப்பிடுவது அன்று ஒருநாள்தான். ஆனால் பலநாட்கள் இதுபோல ஏதேனும் ஒரு காரணம். வீட்டை விட்டு வெளியே சாப்பிடும் சூழல்.

விருந்தினர்கள் வீட்டில் நாம் நம் உணவு கட்டுப்பாட்டைச் சொன்னாலோ அல்லது குறைவாக சாப்பிட்டாலோ அவர்கள் சமைத்த சாப்பாட்டை குறை சொல்வதைப் போல எடுத்துக்கொள்கிறார்கள்.

வீட்டுக்கு சாப்பிட அழைப்பவர்கள் சாப்பிட வருபவர்களின் வயது மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற உணவுகளை சமைத்துப் பரிமாறுவதே உண்மையான விருந்தோம்பல்.

விருந்தோம்பல் நம் தமிழர் பண்பாடுதான். ஆனாலும் அதுவும் எல்லை மீறும்போது கசந்துபோவதுதான் உண்மை. இதற்கு மகாபாரதத்தில் அருமையான நிகழ்வு  ஒன்று உள்ளது.

ஒருசமயம் அஸ்தினாபுரத்தில் தர்மபுத்திரர் நிகழ்த்தும் ராஜசூய யாகத்தை ஒட்டி தினந்தோறும் அன்ன தானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சுற்றியுள்ள எல்லா ஊர்களில் இருந்தும் மக்கள் தினந்தோறும் அந்த யாகத்துக்கு வருகை தந்து வயிறார சாப்பிட்டுச் சென்றனர்.

தன் சகோதர்கள் அனைவருக்கும் பிரத்யேகமாக வேலைகளை பிரித்துக் கொடுத்தார் தர்மபுத்திரர்.

நகுல சகாதேவர்களுக்கு யாகத்துக்கு வருபவர்களை வரவேற்கின்ற வேலை.

அர்ஜூனனுக்கு யாகசாலையை பாதுகாக்கும் பொறுப்பு.

போஜனப் பிரியரான பீமனிடம் யாகத்துக்கு வருகின்றவர்களுக்கு வயிராற சாப்பாடு பரிமாறி உபசரிக்க வேண்டும் என்ற பணி.

ஒருசில தினங்களில் யாகத்தில் கலந்து கொண்டு உணவு உண்போர் கூட்டம் குறைந்து கொண்டே வந்தது. காரணம் புரியாமல் அனைவரும் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில், புல்லாங்குழலுடன் கண்ணன் அவ்விடம் வந்து சேர, தர்மபுத்திரர்  தன் சோகத்தை அவனிடம் கொட்டித் தீர்த்தார்.

அதற்குள் பீமன் ஒரு தட்டில் 3 டம்ளர் பாலுடன் வந்து, ஒரு டம்ளர் பாலை எடுத்து கண்ணனிடம் நீட்டி குடிக்கச் சொல்லி உபசரித்தார். கண்ணனும் ஆனந்தமாக அருந்தினார்.

உடனடியாக பீமன் மற்றொரு டம்ளர் பாலை கொடுத்து பருகச் சொன்னார். வயிறு நிரம்பி விட்டது. போதும் என்று கண்ணன் மறுத்தாலும், பீமன் தொடர்ந்து வற்புறுத்தியதால் அந்த பாலையும் பருகினார் கண்ணன்.

அதற்குள் மூன்றாவது டம்ளர் பாலை கொடுத்து அருந்தச் சொல்லி பிடிவாதமாக வற்புறுத்தத்  தொடங்கினார் பீமன்.

அப்போது  பீமனுக்கு ஒரு அவசர வேலையைச் செய்யச் சொல்லி பணிந்தார் கண்ணன். அதாவது, கந்தமாதன மலைக்குச் சென்று அங்கு தவம் செய்து கொண்டிருக்கும் தங்கநிற முனிவரை சந்திப்பது தான் கண்ணன் பீமனுக்கு இட்ட அந்த அவசர வேலை.

‘சரி… அவரிடம் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று வினவினார் பீமன்.

‘ஒன்றும் குறிப்பாகச் சொல்ல வேண்டாம். கண்ணன் அனுப்பினான் என்று மட்டும் சொல். ஆனால் அம்முனிவரை மிக மிக நெருக்கத்தில் பார்க்க வேண்டும் என்பது தான் முக்கியம்’ என்றார் கண்ணன்.

குழப்பமாய் பார்த்துக் கொண்டிருந்த தர்மபுத்திரரிடம் கண்ணன் சொன்னார்…உன் யாகசாலையில் உணவு உண்போர் குறைந்து போனதுக்கும், பீமனை நான் கந்தமாதன மலைக்கு அனுப்பியதற்கும் ஒரு தொடர்பு உள்ளது என்று இரகசியமாக சில விஷயங்களைச் சொல்ல, குழப்பம் தீர்ந்து ஆச்சர்யத்தில் கண்களை விரித்தார் தர்மபுத்திரர்.

இதற்குள் பீமன் கந்தமாதன  மலையை அடைந்தார். தங்கநிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த முனிவரை சந்தித்தார். அவர் உதடுகள் மட்டும் கருத்திருந்தன. இம்மலையில் தங்கிச் செல்ல வந்தாயா? என்று முனிவர் வினவ,  ‘இல்லை ஸ்வாமி, கண்ணன் சொன்னதால் தங்களை தரிசிக்கவே வந்தேன்…’ என்று பதிலுரைத்த பீமன் கண்ணன் சொன்னபடி அம்முனிவரை வணங்க மிக அருகில் நெருங்கிச் செல்ல முயன்றார். ஆனால் பீமனுக்கு அவரை நெருங்க இயலாத அளவுக்கு துர்நாற்றம். அந்த நாற்றம் முனிவரின் வாயில் இருந்து வந்தது. ஆனாலும் மூக்கை இறுக்கிப் பிடித்தபடி முனிவரை மிக அருகில் நெருங்கி முகத்தை உற்று நோக்கினார். என்ன ஆச்சர்யம். கருத்திருந்த முனிவரின் வாய் பொன்னிறமானது.

‘கண்ணா…என் தெய்வமே… என் வாய் நாற்றத்தை என்னாலேயே சகிக்க முடியாமல் இத்தனை நாட்கள் வாழ்ந்து கொண்டிருந்தேன்…இப்போது கருத்த வாயும் பொன்னிறமாயிற்று…துர்நாற்றமும் போய்விட்டது…நன்றி கண்ணா!’ என்று நன்றிப் பெருக்கில் கண்ணீர் விட்டார் முனிவர்.

குழப்பமாய் நின்றிருந்த பீமனிடம் சொல்லத் தொடங்கினார் முனிவர்.

‘நான் செய்த பாவத்தினால் தான் இத்தனை காலங்கள் என் வாய் கறுத்திருந்தது…கறுத்த வாயைத் திறந்து பேசினால் துர்நாற்றமும் வந்து கொண்டிருந்தது. கண்ணனிடம் என் நிலை எப்போது சரியாகும் என்று கேட்டேன். பீமன் வந்து சந்திக்கும் போது சரியாகும் என்று சொன்னார். இன்று நீ வந்து என்னை சந்தித்து எனக்கு பாவ விமோசனம் கொடுத்து விட்டாய்..’

பீமனுக்கு ஆச்சர்யம் விலகாமல் கேட்டார்… ‘அப்படி என்ன பாவம் செய்தீர்கள் முனிவரே?

முனிவர் தொடர்ந்தார்.

‘தானத்தில் தலை சிறந்தது அன்னதானம். பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்ததால் என் உடல் பொன்னிறம் பெற்றது.

ஆனாலும் என் ஆர்வக் கோளாறால் வயிறு புடைக்க உண்டவர்களை கஷ்டப்படுத்தி இன்னும் சாப்பிடுங்கள், இன்னும் சாப்பிடுங்கள் என்று வடையையும், பாயசத்தையும் அவர்களை உபசரித்துக் கொண்டே இருந்தேன்.

வயிறார சாப்பாடு போட்டு உபசரிப்பது மாபெரும் புண்ணியம்.

அதே சமயம் வயிறார உண்டவர்களை மேலும் மேலும் சாப்பிடு, சாப்பிடு என வற்புறுத்துவது மாபெரும் பாவச் செயல். ஒருவரின் உடலுக்கு ஆரோக்கியக் கேடு விளைவித்தால் அது பாவம் தானே?

மேலும் அளவுக்கு மீறி பரிமாறுபவர்களுக்கும், உணவை சாப்பிட முடியாமல் மீதம் வைப்பவர்களுக்கும் அந்த பாவத்தில் பங்கு வரும் தானே?

அது மட்டுமில்லாமல் உணவை உற்பத்தி செய்கின்ற விவசயிகளுக்கு நாம் செய்கின்ற துரோகம் தானே இச்செயல்?

இவை அத்தனைக்கும் காரணமான அதிகப்பிரசங்கித்தனமாய் உபசரித்த வாய் மட்டும் கறுத்து போய், அதிலிருந்து துர்நாற்றமும் வீசத் தொடங்கியது. உன்னால் அந்த தண்டனையில் இருந்து மீண்டேன்…நன்றி பீமா…’

பீமனுக்கு தன் தவறு புரிந்தது. தன் கடுமையான உபசாரத்தினால்தான் யாகத்தில் சாப்பிட வருகின்ற கூட்டம் குறைந்து போனது என்பதை உணர்ந்து முனிவரிடம் விடைபெற்று கண்ணனை சந்தித்து மன்னிப்புக் கூறி பணிந்து நின்றார் பீமன்.

எல்லாமே ஒரு அளவோடு இருந்தால்தான் நல்லது. விருந்தோம்பலும் அது போல தான். அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் தான். விருந்தோம்பலும் கசந்து போகும் என்பதை இக்கதை விளக்குகிறதல்லவா?

– காம்கேர் கே. புவனேஸ்வரி

கட்டுரையாளர் குறித்து…
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO

காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/
http://compcaresoftware.com/

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.