
நின்று நிதானமாக மழை பெய்துகொண்டிருந்தது. அவசரமாக ஒரு அலுவலக வேலையாக வெளியே செல்ல வேண்டிய சூழல். மழையில் என்னுடைய காரை எடுக்க வேண்டாம் என கால் டாக்ஸி புக் செய்தேன். மழை காரணமாக கட்டணம் அதிகம் என்றாலும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார்.
வழக்கம்போல பேச்சுக்கொடுத்தேன். மழையில் காரை ஓட்டுவதே சிரமாக இருக்க, விடாமல் நான் தொடங்கி வைத்த பேச்சை தொடர்ந்தார்.
2015 வருட மழையில் வீடு, தொழில் இரண்டையும் இழந்து தற்சமயம் கல்டாக்ஸி டிரைவராக பணிபுரிகிறார். சொந்த கார். காருக்கான மாதாந்திர கடன் கட்டணம், டீசல் போக தினமும் 1000 கிடைக்குமாம். திருமணம் ஆகி ஐந்து வயதில் ஒரு குழந்தை. புரிந்துகொண்ட மனைவி.
எந்த இடத்திலும் அவரது குரலில் சோகமோ, எதிர்மறை எண்ணங்களோ வெளிப்படவில்லை.
மழை, அதன் தாக்கம் இப்படியே பேச்சு சென்று கொண்டிருந்தது. ‘அந்த மழைல நான் அடிபட்டப்பதான் என் நட்புகள் உறவுகளின் சுயநலத்த புரிந்துகொள்ள முடிஞ்சுது மேடம்… நான் எல்லாருக்கும் அப்பப்ப என்னால் ஆன உதவி செஞ்சிருக்கேன்… என்கிட்ட கடன் வாங்கினவங்க எல்லாரும் நான் வாங்கல… அப்பவே கொடுத்துட்டேன்… இப்பவே தந்துட்டேன்னு ஒரே பொய்களை அடுக்கினாங்க… என்னோட இரும்புக்கடை தொழில்ல 10 இலட்சம் லாசாயிடுச்சு… என்ன பண்ணர்துனு தெரியாம இப்படி கார் ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்…’
‘அப்படியா… நல்ல முடிவு பண்ணீங்க…’
‘என்ன படிச்சிருக்கீங்க…’
‘5-வதுதான் மேடம்… ஆனால் எனக்கு பிரெயின் ஜாஸ்தி மேடம்…’
படிக்காவிட்டாலும் தனக்கு உலக அறிவும் அனுபவமும் அதிகம் என்பதை ‘பிரெயின் ஜாஸ்தி’ என சொன்ன அவரது வெகுளித்தனத்தை ரசித்தேன்.
‘அதனால்தான் கடன்தொல்லை அது இதுன்னு காரணத்தைச் சொல்லி தவறான முடிவை எடுக்காம உழைச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டீங்க… பிழைக்க ஆயிரம் வழி இருக்குன்னு நிரூபிச்சுட்டீங்க… நீங்க சொன்ன மாதிரி உங்களுக்கு பிரெயின் ஜாஸ்திதான்’ என்று அவருடைய பாஷையிலேயே அவருக்கு பதிலளித்தேன்.
‘யாரையும் நம்பக் கூடாது மேடம்… நாம நல்லா இருக்குற வரைக்கும்தான் மேடம் நட்பும், உறவும்… கொஞ்சம் சரிஞ்சிட்டோம்னா…’
‘சரிதான்..’
‘ஆனா ஒண்ணு மேடம், இப்ப எனக்கு 40 வயசு. இன்னும் 10 வருஷம் கழிச்சு இப்படி கீழே விழுந்திருந்தா எந்திருக்கிறதே கஷ்டமாகிப் போயிருக்கும்… இப்பவே விழுந்ததுனால கடனை கஷ்டப்பட்டு அடச்சு பழைய நிலைக்கு இன்னும் ஐந்தாறு வருஷத்துல எந்திருச்சுடுவேன்… கடவுள் புண்ணியத்துல நஷ்டமும் கஷ்டமும் என் கைகால் உடம்பு நல்லா இருக்கும்போதே ஏற்பட்டுடிச்சு…’
அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் தன்னம்பிக்கை இழைந்தோடியது.
இதற்குள் கார் ஒரு பள்ளத்தில் மாட்டிக்கொள்ள… ‘கடவுளே, என்ன செலவு வைக்கப் போவுதோ…’ என சொன்னபடி ஏதேதோ முயற்சி செய்து காரை ஸ்டார்ட் செய்துவிட்டார்.
நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் கொடுக்க வேண்டிய கட்டணத்துக்கு மேல் சற்று அதிகமாக பணம் கொடுத்தேன்.
‘வேணாம் மேடம்…’ என்று அவர் தன் தொழில் தர்மத்தை நிலைநிறுத்த ‘பரவாயில்லை… வாங்கிக்கொள்ளுங்கள்… தவறில்லை’ என்று சொல்லி இறங்கினேன்.
நாம் யாருக்கும் நேரடியாக உதவி செய்ய முடியாத நிலையில் இருந்தாலும், தன்னம்பிக்கையோடு வாழ்பவர்களை உற்சாகப்படுத்தினாலே அவர்கள் தங்களை தாங்களே உயர்த்திக்கொள்வார்கள்.
வெளியில் நிதானமான மழை, மனதில் இதமான சுகம்!
(விகடகவி APP பத்திரிகையில் 27-12-2017 இதழில் வெளியான கட்டுரை)
– காம்கேர் கே. புவனேஸ்வரி
கட்டுரையாளர் குறித்து…

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்
ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/
http://compcaresoftware.com/



