December 6, 2025, 9:40 AM
26.8 C
Chennai

வாத்ஸ்யாயனரின் ‘காமசூத்திரம்’! ஒரு விரிவான பார்வை..!

vatsyayana kamasutra pic - 2025

காமத்தை ஒரு சாஸ்திரமாக கணக்கிட்டு அதற்கு சூத்திரங்களை அளித்தவர் வாத்ஸ்யாயனர். அத்தகைய சூத்திரங்கள் நிறைந்த நூலை வாத்ஸ்யாயனரின் எண்ணமறிந்து படித்தவர்கள் எத்தனை பேர்? அதிகம் பேர் இருக்கமாட்டார்கள்.

பூரண பிரம்மச்சாரியாக வாழ்ந்ததாகக் கூறப்படும் வாத்ஸ்யாயனர், ‘காமம்’ என்பதை பற்றி ஆராய்ந்து சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூல் ஒரு இலக்கியமாக நிலைத்து விட்டது.

சாஸ்திரம் என்றால் அதிலுள்ள விஷயங்கள் புதிதாக கற்பனை செய்யப்பட்டவை அல்ல என்று பொருள். அது யாருக்கும் சொந்தமல்ல. தரிசித்தவற்றை தரிசனம் என்பர். வேதாந்தம் ஒரு தரிசனம். சாஸ்திரமும் தரிசிக்கப்பட்டவையே. எனவே அதற்கென்று சொந்தமான படைப்பாளி யாரும் இருக்க மாட்டார்கள்.

ஏனென்றால் சாஸ்திரத்தில் கூறப்பட்டவை அதற்கு முன்பாகவே உலகில் சூட்சுமமாக மறைந்து இருக்கும். நுண்ணறிவும் திறமையும் கொண்ட அறிவாளியால் அவற்றை தரிசிக்க இயலுகிறது. அவ்விதம் தரிசித்தவர்களையே ‘த்ரஷ்டா’ என்கிறோம். தான் தரிசித்த உண்மைகளை சூத்திரங்கள் வடிவில் உலகிற்கு அளித்துள்ளார்கள். சாஸ்திரம் உலகியல் தொடர்புடையதாகவும் இருக்கலாம். ஆன்மிகம் தொடர்புடையதாகவும் இருக்கலாம்.

காமம் லௌகீகமே. ஆனால் உலகியலைக் கடந்த அர்த்தம் அதில் உள்ளது. காமம் என்பது இயற்கையின் ரகசியங்களுள் ஒன்று.

காமம் என்பது மனித வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு பாகம். காமம் என்றால் என்னவென்று அறிந்து கொண்டு அதில் ஈடுபடுபவர் மிகக் குறைவு. மனதினை சுவாதீனத்தில் வைத்துக் கொள்ளும் விதத்தை உபநிஷத்துகள் கூறுகின்றன. மனதின் சக்தி யுக்திகளை பற்றியும் புலனடக்கம் பற்றியும் யோக தரிசனம் தெரிவிக்கிறது. அதே போல் காமசாஸ்திரம் ஆண், பெண் இடையேயான சகஜமான தொடர்பு பற்றி விவரிக்கிறது.

kamasutra3 pic 1 - 2025

ஆண், பெண் தொடர்பினை கீழ்மையாக, மலிவாக விவரிப்பது குற்றம். மனித வாழ்க்கைக்கு அது ஆதாரம். இந்த சம்பந்தத்தைப் பற்றி அறிந்து கொண்டால் வாழ்க்கையின் உண்மை புரியும். காமத்தை முழுமை யாக அடக்கி விட்டேன் என்று யாராவது கூறினால் அது மனசாட்சியற்ற கூற்று.

ஏனென்றால் வயதுடன் சம்பந்தமில்லாமல் காமம் மனித வாழ்க்கையில் நீக்கமற நிறைந்துள்ள ஒரு பாகம். அவர்களின் மனதிற்குள் நாம் புகுந்து பார்க்க முடிந்தால் உண்மை புலப்படும். ஆகையால் காமத்தை அடக்கி விட்டேன் என்று கூறுவதைவிட ஆத்ம நிக்ரஹத்தால் அதனை அடக்குவதற்கு முயற்சி செய்கிறேன் என்று கூறுவது உண்மைக்கு ஓரளவு அருகில் இருக்கும்.

ஆத்ம நிக்ரஹத்தோடு காமத்தை அனுபவிப்பதால் அதற்கும் திருப்தி, மனதிற்கும் சாந்தி. வாழ்க்கையிலும் சுகம் இருக்கும்.

சாமானிய மனிதனுக்கு காமம் பற்றிய அறிவு இல்லாமல் போவதாலேயே காமம் மலிவாக, வெறி பிடித்து அலைகிறது. மருத்துவர்களும் மனோ தத்துவ அறிஞர்களும் கூட இதையே தெரிவிக்கிறார்கள்.

காமத்தை காலால் மிதித்து அடக்குவதற்கு முயற்சித்தால் அது வெறியாக மாறுகிறது. காமம் ஒரு இயற்கையான கலை. மற்ற கலைகளை போலவே இதனைக் கூட ஆராதித்து பாலுறவு ரகசியங்களை இயற்கை தர்மங்களாக ஏற்று ஒரு சகஜ தர்மமாக கடைப்பிடிக்க வேண்டும். சகஜ காமம் ஆபாசம் அல்ல. அவமானமும் அல்ல. காமம் முறைப்படுத்தப்பட்டால் சுக, சந்தோஷங்களுக்கு காரணமாகிறது.

kamasutra4 pic - 2025

‘காம்யதே சர்வைரிதி காமம்’ என்று அமரகோசம் விளக்கமளிக்கிறது. ‘அனைவராலும் விரும்பப் படுவது காமம்’ என்பது இதன் பொருள். மானசீக உள்ளத்தின் உணர்ச்சி காரணமாக காமம் ஏற்படுகிறது. இது மானசீக சாத்திரம் மட்டுமல்ல, சரீர சாத்திரமும் கூட. காமம் மனதில் வெளிப்படாமல் இருக்கிறது. இதுவே அனைத்து சிருஷ்டிக்கும் மூலம்.

காமம் ஒரு புருஷார்த்தம். மகிழ்ச்சிக்கு காரணம். வாத்ஸ்யாயனர் காம சாஸ்திரம் எழுதியபோது காமம் என்ற சொல், இன்றைய மலிவான, கீழான பொருளோடு விளங்கவில்லை. காமத்தை ஒரு கலையாகவே ஆராதித்தார்கள், அனுபவித்தார்கள். அது குறித்து பகிரங்கமாகவே சர்ச்சை செய்து வந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.

காலக்கிரமத்தில் காம சாஸ்திரம் ஒரு புரிபடாத ரகசியம் போல் ஆகிவிட்டதால் இன்றைக்கு அது செக்ஸ் என்ற பெயரால் விபரீதமான வெறியாட்டம் ஆடுகிறது. அது இன்றைக்கு பேராசையான தாகமாக மாறிவிட்டது. இயல்பான காமம், தாகம் அல்ல.

“தர்மத்தோடு கூடிய காமம் மோக்ஷத்தை அளிக்கும்” என்கிறார் வாத்ஸ்யாயனர். பாலுறவில் கிடைக்கும் மன மகிழ்ச்சி மானசீக அலைச்சலை அமைதியடையச் செய்கிறது என்கிறார். கண்ணை மறைக்கும் காமம் அனர்த்தத்தை விளைவிக்கும். மனிதன் காம வெறியனாகக் கூடாது. அது காம சாஸ்திரத்தின் உத்தேசம் அல்ல.

kamasutraa women - 2025

பிராய்டு தத்துவம்:-

மனிதனிடம் அவனுக்குப் புரியாத உள்மனச் செயல்கள் உள்ளன என்கிறார் பிராய்டு. அவர் கூறுகிறார், “மனிதன் வெளியே புரியும் செயல்களுக்கு இந்த உள்ளிருக்கும் அலைபாயும் மனதே காரணம். அவனுடைய எண்ணங்களில் கூட அந்த மன அலைச்சல் தாக்கம் ஏற்படுத்துகிறது. உள்மன அலைச்சல்கள், தாமாகவே கூட்டமாக உற்பத்தியாகின்றன. எனவே அவற்றை Unconscious Instincts என்று கூறலாம். இவற்றால் மனிதன் கற்பனையில் சுதந்திரமாக சுற்ற முடிவதில்லை”.

பிராய்டின் இந்த கூற்று மூலம் அதுவரை வழக்கில் இருந்த சித்தாந்தங்கள் தலைகீழாக மாறின. படிப்படியாக சமுதாயம் ஆத்ம பரிசீலனை செய்ய ஆரம்பித்தது. 20ஆம் நூற்றாண்டில் மனித சுபாவத்தின் மேல் நடைபெற்ற ஆராய்ச்சிகளனைத்தின் மீதும் பிராய்டின் முத்திரை விழுந்தது.

“மனிதனின் ஆசைகள் தொடக்கத்தில் மிருகத்தின் குணங்களாக (Animal Instincts) இருக்கும்” என்றார் பிராய்டு. இந்த விருப்பங்கள் மனிதனிடம் காமத்தோடும் மன அழுத்தத்தோடும் கலந்து காணப்படும். இவை பிடிவாதமானவை. சீக்கிரத்தில் திருப்தி அடையமாட்டா. முறைப்படுத்தப்பட்ட சமுதாயம் (Institutionalized), அதாவது நிபந்தனைகளோடு கூடிய உலகம் இந்த விருப்பங்களை அடக்கி வைக்கப் பார்க்கிறது. அதன் விளைவே மனப் போராட்டமாக வெடிக்கிறது.

தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையில் சமரசம் இருந்தால்தான் நாகரீகம் வளரும். உடலியல் சம்பந்தப்படாத நோய்கள் சில உள்ளன. அவை மனதோடு தொடர்புடையவை என்று பிராய்டு வழியாகவே அறியப்பட்டது. மனோதத்துவ மருத்துவ முறை (Psychiatry) வளரத் தொடங்கியது. (ஹிப்னாடிசம்) தன்வயப்படுத்தும் செயற்கை தூக்க நிலை எனப்படும் வசீகர சாஸ்திரம் மூலம் நோயின் அறிகுறிகளை நீக்க இயலும் என்று மருத்துவ விஞ்ஞானம் உணர்ந்தது. மனதை ஆராய்தல் (Psychoanalytism) என்ற முறை பிராய்டிலிருந்து தான் தொடங்கியது. காரணங்கள் புரியாத பல நோய்களுக்கு மனம் தான் மூலஸ்தானம் என்று கண்டறிந்தார். ஹிஸ்டீரியா வியாதிக்கான காரணங்களை பரிசோதித்து பாலுறவுக் கோளாறுகள்தான் (Sexual Disturbance) அதற்கு முக்கிய கரணம் என்று 1892ல் தெளிவுபடுத்தினார்.

அதன் பின் பிராய்டு வெளியிட்ட ‘கனவுகளின் ரகசியம்’ என்ற நூல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு கனவுக்கும் ஏதோ காரணம் இருந்தே தீரும் என்றார் பிராய்டு. மனிதனை ஆணாகவும் பெண்ணாகவும் வேறுபடுத்தினாலும் ஒவ்வொரு மனிதனிலும் ஆண் பெண் அம்சங்கள் இரண்டும் சேர்ந்தே இருக்கும் என்றார். இவ்வாறு காம இச்சை மனிதனில் பிறப்பு முதலே இருக்கிறது என்று விளக்கினார்.

பிராய்டுக்கு 1600 ஆண்டுகளுக்கு முன்பே வாத்ஸ்யாயனர் இதே கருத்துக்களை கூறியுள்ளார்.

காம சூத்திரங்கள் (1-2-1)ல் தர்மம், அர்த்தம், காமம் இவை பரஸ்பரம் ஒன்றையொன்று ஆதாரப்பட்டு இருக்கும் என்றும், இம்மூன்று புருஷார்த்தங்களையும் அடைவதற்கு ஒவ்வொரு மனிதனும் முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறினார் வாத்ஸ்யாயனர். இம்மூன்றும் ஒன்றுக்குகொன்று வேறுபட்டு விரோதம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். சூத்திரம் (1-2-11).

அவர் மேலும் கூறுகிறார், “ஜீவாத்மாவுடன் மனம் இணைந்திருக்கிறது. புலன்கள் மனதின் ஆதீனத்தில் இருந்து கொண்டு தம் வேலைகளை செய்து வருகின்றன. இவ்விதம் புலன்களின் வழியாக பல விஷயங்களை ஜீவாத்மா அனுபவித்தபடி சுகமும் ஆனந்தமும் பெறுகிறது. அந்த சுகம், ஆனந்தம் இவற்றையே ‘காமம்’ என்கிறோம். எனவே பிறப்பிலிருந்தே காமம் ஜீவனோடு இணைந்திருக்கிறதென்று தெரிய வருகிறது. ஜீவாத்மாவுக்கு மனம் பிரதிநிதி. ஜீவாத்மாவிற்காக மனதே வேலைகளைச் செய்கிறது. அதனால் காமம் மனதில்தான் பிறக்கிறது. மனதிலிருந்து பிறந்தவனாதலால் ஜீவன், ‘மனிதன்’ என்று காரணப் பெயர் கொண்டுள்ளன. இது சாமானிய காமத்தைப் பற்றியது”.

வாத்ஸ்யாயனர் விசேஷ காமத்தைப் பற்றிக் கூட கூறியுள்ளார். பரஸ்பரம் காதலினால் பெரும் சுகமே காமம் என்கிறார் வாத்ஸ்யாயனர். காமச் செயல் வெறியாக மாறக் கூடாது. அது ஆபத்தை விளைவிக்கக் கூடியது (சூ-1-2-47).

“ஆனால் ‘தவறு’ என்று நினைத்து காமத்தை விலக்கக் கூடாது. சம்போக சுகத்தை வெறுக்கும் மனிதன் மனிதனே அல்ல” என்கிறார்.

தவறு என்பது ஏதோ கொஞ்சம் எல்லா சுகங்களிலும் இருக்கிறது. தவறில்லாத, குறைபாடில்லாத சுகம் படைப்பிலேயே இல்லை. எனவே தோஷத்தை சரி செய்தபடி சுகத்தை அனுபவிப்பது மனிதனின் கடமை. ஒவ்வொரு மனிதனும் தர்மம், அர்த்தம், காமம் மூன்றையும் தவறாமல் ஏற்க வேண்டும். இவை புருஷார்த்தங்களாதலால் இக, பர சுகங்களுக்கு இவையே மார்க்கங்கள்.

ஜே கிருஷ்ணமூர்த்தி

ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறும் பிரேம தத்துவம்:-

காமத்தில் வெறி என்ற தோஷத்தை நீக்குவதற்கு ‘ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி’ கூறியுள்ள பிரேம தத்துவம் சிறந்த வழி. பிரேம தத்துவம் இருக்குமிடத்தில் வெறி, தீவிரம் இருக்காது. காமத்திற்கான தூண்டுதலைப் பற்றிய புரிதல் அவசியம். பிரேம தத்துவம் இல்லாவிடில் காமம் மாற்றுப் பிரயோக முறைகளுக்கு வழிவகுக்கும்.

பிரேம தத்துவம் மனதிலிருந்து கோணல் வழிகளைத் துடைத்து விடுகிறது. பிரேம தத்துவம் இருந்தால் பரஸ்பர அசௌகரியங்களை சகித்துக்கொள்வதில்லை. அதனால் பிரேம தத்துவ பாவனை கட்டாயம் காமத்தில் வெளிப்பட வேண்டும். அப்படிப்பட்ட காமம் என்றைக்குமே குற்றமாகாது.

பிரேம தத்துவப் புரிதலில் சௌந்தர்யம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அழகு என்றால் ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறுவது உருவ அழகு அல்ல. ரசனை பற்றியோ, நடவடிக்கை பற்றியோ கூட அல்ல. சௌந்தர்யம் என்பது ஒரு நிலை (ஸ்திதி) என்றார் அவர். அந்த நிலையில் மனதில் ‘நான்’ என்ற கேந்திர ஸ்தானம் இருக்காது. சரளம், கபடமின்மை, எளிமை என்ற உணர்ச்சிகளில் மனம் மூழ்கியிருக்கும் என்றார். ஆடம்பரமற்ற எளிமையே முக்கிய அம்சம். இந்த ஆடம்பரமற்ற தன்மை பயிற்சியாலோ, புலனடக்கத்தாலோ வந்ததாக இருக்கக் கூடாது என்றார். எளிமை என்பது சுயநலத்தை தியாகம் செய்வதே. பிரேம பாவனை மூலம் மட்டுமே இந்த ஆடம்பரமற்ற தன்மை சாத்தியமாகும். பிரேம பாவனை அற்ற நாகரீகம் உயிர்ப்போடு இருக்காது. செயற்கையாக, இயந்திரத்தனமாக இருக்கும். நிர்மலமான மனதிலேயே பிரேம பாவனை துலங்கும். சௌந்தர்யம் என்பதை ஒப்பு நோக்குவதன் மூலம் அறிய முடியாது. தீவிரமான உணர்ச்சியோடு உடலைத் திருப்தி படுத்தும் மோக விருப்பங்களில் பிரேம தத்துவம் ஈடுபடாது. மோக விருப்பங்களற்ற ஆழ்ந்த உணர்ச்சியில் பிரேம தத்துவம் வெளிப்படும், சௌந்தர்யமும் புரிய வரும்.

kamasutra2 pic - 2025

சிருங்காரம்:-

காமம் என்றால் இச்சை. இந்த கலைக்கு பரமார்த்தம் சிருங்கார ரசம். சிருங்கார ரசத்திற்கு ஆதாரம் காமக்கலை. நவரசங்களில், சிருங்காரம் உத்தமமானது, பிரதானமானது. இந்த சிருஷ்டி முழுவதும் சிருங்கார தேவதையின் பிரசாதம். நம் அன்றாட வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத பந்தம் கொண்ட இந்த ரசத்தை அதற்குரிய கௌரவத்தோடு தான் பார்க்க வேண்டுமே தவிர கீழ்த்தரமாக நினைக்கக் கூடாது. அயர்ந்து சோர்ந்து வீடு திரும்புவருக்கு சிருங்காரம் ஒரு பன்னீர்த் தூறல்.

கணவன் மனைவி உறவில் காதலோடு கூடிய அத்வைத தன்வயத்தன்மை இணைந்துள்ளது. ஆனால் ஆசாரக்காரர்கள், அதன்மேல் தேவையற்ற அபவித்திர தன்மையை பூசி, அசிங்கப்படுத்தி விட்டார்கள். இல்லாவிடில் கணவன் மனைவியிடையேயான சம்யோகம், ஏதோ மகா பாபமான செயல் என்பது போல், அதன்பின் ஸ்நானம் போன்ற பிராயச்சித்தங்களை செய்ய வேண்டும் என்ற சடங்குகளை அதன் மேல் ஏன் சுமத்தினார்கள்?

இப்படிப்பட்ட ஆசாரக்காரர்கள் இருக்கும்வரை சம்சாரத்தில் காதல் இருக்காது. உலகை மறந்த அலௌகிக ஆனந்தமும் இருக்காது. சம்சாரத்தில் சிருங்காரமும் இருக்காது, சுவாரஸ்யமும் இருக்காது. வெறும் இயந்திரத்தனமான சம்சார வாழ்க்கையில் சுகமோ சாந்தியோ ஏற்படாது. சிருங்காரத்தை காதலோடு சௌம்யமாக அன்றாட வாழ்க்கைக்குத் திருப்பினால் தான் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். உணர்ச்சிகள் நிறைந்த அன்றாட வாழ்க்கைக்கு உலகை மறந்த ஒரு ஆனந்தம் கிடைக்கும்.

சிருஷ்டிக்குக் காரணமான பரமாத்மா திவ்ய சௌந்தர்யம் ஒளிரும் ஒரு ஜோதி. அந்த சௌந்தர்ய ஜோதி லஹரியே இந்த சர்வ சிருஷ்டியும். சௌந்தர்யத்திற்கு மறுபெயர் சிருங்காரம். அந்த சிருங்காரத்திற்கு வெளிப்படை வடிவமே காமக்கலை. இவற்றின் வெளிப்படும் உருவங்கள் பிரகிருதியும், புருஷனும்.

பரமாத்மா நிர்குணமாக இருக்கும்வரை இந்த சிருஷ்டி நிகழாது. இந்த சிருஷ்டிக்காகவே பரமாத்மா புருஷனாக ஆனான். அவனிடமிருக்கும் மாயை பிரிந்து பிரக்ருதியானது. பிரகிருதி இல்லாமல் புருஷன் இல்லை. பிரகிருதி சைதன்யம். புருஷன் அதற்கு ஆதாரம். அந்த பிரகிருதி புருஷர்களின் சம்யோகமே இந்த படைப்பு. சைதன்ய ரூபமான பிரக்ருதியே சௌந்தர்யத்தின் அதிதேவதை. அந்த அதிதேவதையின் வர பிரசாதமே இந்த சிருஷ்டி அனைத்தும்.

நம் அன்றாட வாழ்வோடு பிரிக்க முடியாத பந்தம் கொண்டது சிருங்கார ரசம். இந்த சிருங்கார ரசப் பிரவாஹ ரூபமே இந்த முழு பிரகிருதியும் அல்லவா?

அப்படிப்பட்ட பிரகிருதியின் பாகமே அல்லவா நாமும்! சௌந்தர்ய ஆராதனையே சிருங்கார ரசத்தின் தொடக்கம். அதன் பலனே உண்மையான ஆனந்தம். எனவே தான் ‘அழகே ஆனந்தம். ஆனந்தமே வாழ்வின் சுவை’ என்றார்கள்.

அத்தகைய சிருங்கார ரசத்தை அதற்குரிய கௌரவத்துடன் ஏற்று அனுபவிக்க வேண்டுமேயல்லாது அதற்கு கீழ்மையான உருவத்தை அளிக்கலாகாது. இயற்கையின் அணுஅணுவிலும் சிருங்காரம் பிரதிபலிக்கிறது.

kamasutra idols picture - 2025

புருஷார்த்தங்கள்:-

வாத்ஸ்யாயனர் புருஷார்த்தங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறார். காமத்தை புருஷார்த்தங்களிலும் ஒன்றாகப் போற்றுகிறார்கள் பெரியோர். மீண்டும் அதனை உள் விரோதிகளான அரிஷட் வர்க்கத்திலும் ஒன்றாக கணக்கிட்டுள்ளார்கள். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் இவை புருஷார்த்தங்கள்.

தர்மம் என்றால் வேதம் கூறும் விதிகள், நற்செயல்கள், மதிப்பு, நீதி போன்றவை. மனதை மலரச் செய்வதே தர்மம். சுயநலம் நீங்கும் போது மனோவிகாசம் ஏற்படுகிறது. இது தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் உலகமனைத்திற்கும் பொதுவானதாக உள்ளது. அது மட்டுமல்ல. கால, தேச, சூழ்நிலைகளுக்கு ஏற்ப தர்மம் மாறுதலுக்கு உட்பட்டது. அது சுயநலமற்று, மனோ விகாசத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.

அர்த்தம் என்றால், பொருள், புலன்களின் பிரயோஜனம், ராஜ நீதி, தனம் போன்றவை.
காமம் என்றால் இச்சை.
மோக்ஷம் என்றால் பிறவித் தளையிலிருந்து விமுக்தி.

புருஷார்த்தங்கள் புருஷ பிரயோஜனத்திற்காக ஏற்பட்டவை. புருஷன் என்றால் ஆண் என்றில்லாமல், மனிதன் என்னும் பொருளில் கவனித்தால் கருத்தொற்றுமை ஏற்படும். அதாவது மனிதனின் வாழ்க்கை முறைக்கு பயன்படுவது இந்த நான்கு புருஷார்த்தங்களும் என்பது இதன் கருத்து.

புருஷார்த்தங்கள் என்பவை மனிதன் முயற்சித்துப் பெறவேண்டியவை. மனிதன் அவற்றை அனுசரித்துப் பலனடைய வேண்டும். இல்லறத்தானுக்காகவே புருஷார்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இல்லறத்தானாக இருக்கும் வரை அவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

“பரஸ்பர விருத்தானம் தேஷாஞ்ச சமுபாஜனம்” – (மனு ஸ்ம்ருதி -7-152)
தர்ம, அர்த்த, காமங்களுக்குள் பரஸ்பர விரோதம் அவ்வப்போது ஏற்படுகிறது. அப்படிப்பட்ட விரோதங்களை அனுமதிக்காமல் அந்த புருஷார்த்தங்களை சம்பாதிக்கும் உபாயத்தை ஆலோசிக்க வேண்டும்.

பரஸ்பரம் விரோதமாக உள்ள தர்ம, அர்த்த, காமங்களை மனிதன் எவ்விதம் சமமாக அனுபவிப்பது? இந்தக் கேள்விக்கு மகாபாரதம் பதிலளிக்கிறது.

“இல்லறத்தில் மனைவி, தர்மத்தை விடாமல் அனுசரித்தால், வாழ்க்கையில் தர்மார்த்த காமங்கள் மூன்றும் பரஸ்பர விரோதமில்லாமல் ஒரேயிடத்தில் நிலைத்திருக்கும். எனவே அப்படிப்பட்ட மனைவியின் மூலமாகவே தர்மத்தை நிர்வகித்து, அர்த்தத்தை சேகரித்து, காமத்தை அனுபவித்து புருஷன் உய்விக்கப்படுகிறான்” -(மகாபாரதம், ஆரண்ய பர்வம்).

தர்மார்த்த காமங்களை சமமாகவே பார்க்க வேண்டும். வேறு வேறாகக் காணக் கூடாது. வெறும் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்தாமல் அவற்றுக்குள் போராட்டம் ஏற்படாமல் முயன்று சாதித்துக்கொள்ள வேண்டும்.

kamasutra kama sutra - 2025

காமம் :-

தர்மமும் அர்த்தமும் தனி மனிதனுக்குமட்டுமின்றி குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் கூட விஸ்தரிக்கிறது. ஆனால் காமம், முழுவதும் தனி மனிதன் சம்பந்தப்பட்டது.

காமத்திற்கு ‘சம்போக இச்சை’ என்பது உட்பொருள். இந்த இச்சைக்கு சிருங்காரம் என்பது அலங்காரம். இந்த அலங்காரமே காமத்தின் கலை வடிவம். இதற்கு ஆதாரம் சௌந்தர்ய ஆராதனை. காம அனுபவத்திற்குப் பிறகே மோட்சத்திற்கு அருகதை என்பது புருஷார்த்தங்களின் நோக்கமாகத் தென்படுகிறது.

இந்த சிருங்கார அனுபவமான நுகர்வு, ஒத்துக் கொள்ளப்படாமல் கீழ்மையாகப் பார்க்கப்படுவதற்கு காரணங்கள் இரண்டு.

1.சிருங்கார ரஸ அனுபவத்தை உணரத் தெரியாமல், காமக் கலையின் உட்பொருளை புரிந்து கொள்ளாமல், சௌந்தர்ய வழிபாட்டின் நோக்கம் தெரியாமல், சம்போக இச்சையின் ரசமய பரவசத்தைப் புரிந்து கொள்ளாமல், அதன்மூலம் கிடைக்கும் ஆனந்த பரம உச்ச அனுபவத்தை அடைய இயலாமல், சம்போக இச்சையை ஒரு மனோ விகாரமாகக் கணக்கிட்டுள்ளார்கள் சிலர். அவர்களால் காமக் கலையின் அங்கங்கள் நசிந்து, ரஸானுபவம் குறைந்து, சௌந்தர்ய ஆராதனை காணாமல் போய்விட்டது. அதனால் இவை அனைத்தின் கூட்டு வடிவமான பிரேமை, ஆகாச தீபம் போல் கிடைத்தற்கரிதாகி விட்டது. அப்படிப்பட்ட காமம் புருஷார்த்தம் ஆகாது. அது மனோவிகார வடிவவமான (Passion) மிருக சுபாவமான இயற்கை (Animal Instincts) மட்டுமே.

சிருங்கார ரசத்தை கீழ்மையாகப் பார்ப்பதற்கு மற்றுமொரு காரணமும் உள்ளது. ‘சந்தான யஞமேவ சம்சாரம்’ என்று எங்கிருந்தோ ஒரு நீதியைக் கொண்டுவந்து, கணவன் மனைவி, காதலன் காதலிகளின் ஏகாந்த சேவையை வைதீக சம்பிரதாயம் என்று கூறி, அது ஏதோ வேறு வழியின்று செய்வது போல் அதில் இயந்திரத்தனமான பாவனையைப் புகுத்தி ரஸானுபூதியை அவமதித்து, அலட்சியபடுத்தி விட்டார்கள். ஆனந்தத்தை அசட்டை செய்து, புறக்கணித்து விட்டார்கள்.

சிருங்கார ரஸாநுபூதியை ஆபாசமாக்கிய மேற்சொன்ன இந்த இரண்டு காரணங்களால், காமம் புருஷார்த்த நோக்கத்தை நிறைவேற்ற இயலாமல் போகிறது.

புருஷார்த்த காமம் மிக உயர்ந்தது. அது வாழ்க்கையின் ஆனந்தத்திற்காக ஏற்பட்டது.

மனிதனின் வாழ்க்கை இலட்சியங்கள் மூன்று. அதில் எந்த ஒன்றும் மற்றதை விடக் குறைவும் அல்ல, உயர்ந்ததும் அல்ல.

kamasutra leaf picture - 2025

அவையாவன, 1.வெளி உலக வாழ்க்கைத் தேவைகள். புலன்களின் விருப்பம்.

2.ரசனைகளைப் பற்றிய அறிவு, அழகியல் பற்றிய தெளிவு.

  1. தத்துவ விசாரணை.

இவற்றை சாதிப்பதற்காகவே புருஷார்த்தங்கள் ஏற்பட்டன. இவை யல்லாதவை புருஷார்த்தங்கள் அல்ல. அது உட்பகையாகிய அரிஷட்வர்கத்தில் சேருவதாகிறது.

காதல்:-

உண்மையில் திருமணம் என்றால் என்ன? இளைஞனுக்கும் யுவதிக்கும் இடையில் ஏற்படும் பிரேம அனுபந்த வடிவமே திருமணம் என்னும் அமைப்பு. சம்பிரதாயத்தின்படி ஏற்படும் காதல் உறவே விவாஹ பந்தம். பிரேம அனுபந்தமில்லாத சம்பிரதாயக் கட்டுப்பாடு பெயருக்கு மட்டுமே திருமணம் என்றழைக்கப்படும். வாழ்க்கை முழுவதும் இறுதிவரை இரு ஜீவன்களிடையே சம்சார அனுபந்தத்திற்கான சங்கேதமே திருமணம் என்னும் அமைப்பு.

விவாஹ பந்தத்திற்கு சூத்திரம் மாங்கல்ய ரூபத்திலுள்ள பிரேமை. மாங்கல்யம் வெளியே தெரியும் சூத்திரம். அது சமுதாயத்திற்காக. கண்ணிற்குத் தெரியாத சூத்திரம் காதல். அது தனி மனிதனுக்கானது. காதல் என்றால் இருவர் கூடுவது மட்டுமன்று. பிரேமை என்பது ஒரு தத்துவம். அது மனம் சம்பந்தப்பட்டது, மானஸீகமானது.

பூ பரிமளிப்பது போல் காதல், பிரேமையை அளிக்கும். மலரின் மணம் கண்ணுக்குப் புலப்படாது. அனுபூதியை மட்டுமே அளிக்க வல்லது. பூவின் நிறம், வடிவம் மட்டுமின்றி மணமும் ஆகர்ஷணத்தை அளிக்கக் கூடியது. அது வெறும் ஈர்ப்பு அல்ல. அது வெளியில் புலப்படாத அனுபந்தம். பிரேமைக்கு அளவுகோல் இல்லை. பிரேமை என்றால் காமம் அல்ல. ஆனால் பிரேமை காமத்திற்கு மென்மையை அளிக்கக் கூடியது. பிரேமை மனதின் நேர்த்தியை நுண்மையாக்கி துயிலெழுப்புகிறது.

ஜீவன்முக்திக்காக மனிதப் பிறவி எடுத்துள்ளோம். எனவே அந்த லட்சியத்தை மறக்காமல், உலக வாழ்க்கையை நடத்த வேண்டும். உலக வாழ்க்கையில் சுக போகங்கள் விருந்தாளி போன்றவை. அதிதிகளை கௌரவிப்பது போலவே அவற்றை ஆதரிக்க வேண்டும். அப்போது அதிதி அனுபவிக்கும் திருப்தி, நமக்கு, ‘சுகீபவ’ என்ற ஆசிகளாக பலனளிக்கும். அவ்விதம் அவற்றை அனுபவித்தபடியே லட்சியத்தைச் சென்று சேர வேண்டும்.

அனுபவம் எப்போதும் புலன்கள் வழியாகவே நிகழும். புலன்களின் மூலம் மனதைச் சென்றடைகிறது. மானசீக சந்தோஷமே புலன்களின் சௌக்கியம். புலன்கள் உபகரணங்கள். மனம் அதிஷ்டானம் அதாவது மூலம். இந்திரியங்கள் இல்லாவிடில் மனம் செயலற்றதாகிறது. மனதை அடக்கும் சாதனை செய்தால் புலன்கள் சுயேச்சையாக செயல்பட முடியாது. மனோ நிக்ரஹத்தின் மூலம் புலன்கள் அத்துமீறாமல் முறையாக வேலை செய்யும். அப்போதே மானசீக ஆனந்தம் கிடைக்கும்.

அரிஷ்ட்வர்கத்திலுள்ள காமம்:-

உட்பகைகள் உள்ளிருந்து புலன்களின் வழியே வெளியே வரும் அலைகளை போன்றவை. அவை காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் என்ற ஆறு. உண்மையில் இந்த விரோதிகள் ஆறு அல்ல. மூன்றே. முதல் மூன்றான காமம், குரோதம், லோபம் இவையே உட்பகைகள். பின்னுள்ள மூன்றும் முதல் மூன்றின் மறு உருவங்கள். முதல் மூன்றும் தீவிரமடையும் போது மற்ற மூன்றாக உருவெடுக்கின்றன. அப்போது அவை மேலும் அபாயகரமான விரோதிகளாக மாறுகின்றன.

இன்னும் கொஞ்சம் ஆழமாக உண்மையிடம் சென்றால், முதல் மூன்றும் கூட ஒன்றிலிருந்து மற்றது சிறிது சிறிதாகப் பற்றிக் கொண்டு தகிக்கின்றது.

முதலில் மனதிலிருந்து வெளியில் வரும் எண்ண அலை காமம். காமம் என்றால் விருப்பம். அது வேண்டும் இது வேண்டும் என்னும் ஆசை.

சம்போக இச்சை கூட அப்படிப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று. இது மனிதனின் வீழ்ச்சிக்கு முதல் படி. ஒரு முறை கோரிக்கை மனதில் பிரவேசித்த உடனே அது உள்ளே துளைத்துக் கொண்டே இருக்கும். அதாவது மத்து போல் கடைந்து கொண்டே இருக்கும். இந்தக் கடைதலே மன்மதனின் செயல்பாடு. இந்த கிளர்ச்சியின் விளைவே குரோதம்.

தனக்கு கிடைக்காததை இன்னொருவர் அடையக் கூடாது என்ற குரோதம். காம விருப்பம் தீராததால் துக்கமாகி, பின் அது குரோதமாக வளருகிறது. அது அதோடு நிற்காது. விருப்பம் தீர்ந்து தேவையானதை அடைந்தாலும், அதனை வேறொருவர் எந்த நிலையிலும் பெற்றுவிடக் கூடாதென்ற லோபம் அதாவது கஞ்சத்தனம் பெறுகிறது. அத்தனையும் தனக்கே கிடைக்க வேண்டும் என்பதே லோப குணம்.

மோகம்:-

இந்த காம, குரோத, லோபங்களே தீவிர நிலையில் விகாரமான வடிவெடுக்கையில் மோகம், மதம், மாத்சர்யங்களாக விளைவு பெறுகின்றன. காமம் எதிர்ப்பைச் சந்தித்தால் மோகமாக மாறுகிறது. காமம் வெறும் கோரிக்கை நிலையிலேயே இருக்கும். ஆனால் அது முதிர்ந்து மோகமாக மாறினால் மனம் மறைந்து போய்விடும். எந்த சந்தர்பத்திலானாலும் தன் ஆசை தீரவேண்டும் என்ற பிடிவாதம் ஏற்படும். அது தீராவிடில் அந்த ஆசை வேறெவருக்கும் வரக் கூடாது. ஒரு வேளை வந்தாலும் அந்த ஆசை தீரக் கூடாது என்ற எண்ணம் ஏற்படும். இது தான் குரோதமாக வளர்ந்து, பின் மதம் பிடிக்கும் நிலைக்குச் செல்கிறது. தன் ஆசை தீர்ந்த போது அடைந்த பலன் வேறெவருக்கும் இருக்கக் கூடாது என்பதே லோபம். ஒருவேளை யாராவது அந்த பலனைப் பெற்று விட்டால் அவரை நாசம் செய்யும் முயற்சியே லோபம் முதிர்ந்த வடிவமான மாத்சர்யம். மாத்சர்யம் என்பது அசூயையோடு கூடிய பகை. இம்மூன்று உட்பகைகள் அவனுக்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கும் விரோதிகளே என்பதை உணர வேண்டும்.

இதன் மூலம் அனைத்திற்கும் மூலம் காமம் என்று தெரிகிறதல்லவா? பின் காமம் என்பது குற்றம் இல்லையா? என்று கேட்கலாம். காமம் வெறியாக மாறாத வரை தோஷம் அல்ல. காமம் வெறியாகும் போது மோகமாகிறது. காமம் மோகமாக மாறாதவரை நல்லதே.

புருஷார்த்தமான காமம் மோகமல்ல, மோகமாக ஆகாது கூட. புருஷார்த்த காமம் சுக, சந்தோஷங்களுக்கு பாதுகாப்பு. புருஷார்த்த காமம் மனோ நிக்ரஹ எல்லையோடு நின்று விடும். மோகமாக மாறும்போது காமம் மனதின் கட்டுப்பாட்டை மீறுகிறது. புலன்களின் ஆதிக்கம் பெருகுகிறது. அப்போது அது நிச்சயம் குற்றமே. அப்படிப் பட்ட காமம் எதிரியே.

kamasutra vatsyayanaa
kamasutra vatsyayanaa

யோக வாசிஷ்டம்:-

யோக வாசிஷ்டம் மோகமே அகங்காரத்திற்கு மூலம் என்று கூறுகிறது. மூடத்தனம் அல்லது அக்ஞானத்தால்தான் இது நிரம்பப் பரவுகிறது. மோக ரூபமான அகம்பாவம் பல வித உடல், மன விகாரங்களுக்குக் காரணமாகிறது. இந்த விகாரங்களால் மனம் மூர்க்கமாகிறது.

யோக வாசிஷ்டம் வைராக்கிய பிரகரணத்தில் மனதை வீதி நாயோடு ஒப்பிடுகிறார். வீதி நாய் வீணாக சஞ்சலத்தோடு வீடு வீடாக அலைகிறது. மனம் கூட தன் விருப்பங்களைத் தொடர்ந்து அங்குமிங்குமாக அலைந்து கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட மனதை பேய் என்கிறார். உட்பகைகளுக்கு அடிபணிவது இப்படிப்பட்ட மனப்பேய் தான். இந்த மனதிற்கு தாகம் அதிகமாக இருக்கும். அது தீராதது. எத்தகைய உத்தமனையும் இந்த தாகம் ஒரே கணத்தில் துச்சமானவனாகச் செய்து விடக் கூடியது. இந்த தாகத்திற்கு மூலம் மூடத்தனம் அல்லது அஞ்ஞானம்.

இந்த தாகத்தை அடைந்த உட்புலன்கள் கட்டுப்பாடற்று நடந்து கொள்கிறது. மோகமாக மாறிய காமம் பேய் போன்றது. அது மனிதனை தன் வசமிழக்கச் செய்கிறது. அது வரை நிதானமாக இருந்த நதி மழைக்காலம் வந்தவுடன் கரையுடைத்து ஓடுவது போல களங்கமடைகிறது. யௌவனப் பருவம் இத்தகையதே என்கிறார். யௌவனம் மோகத்தாலும், மதத்தாலும், களங்கமடைந்து விடுகிறது. பால்யத்தை யௌவனம் விழுங்கி விடுகிறது. யௌவனத்தை வயோதிகம் வந்து சூழ்கிறது. வயோதிகத்தில் விருப்பங்கள் நசிப்பதில்லை ஆனாலும் சக்தி நசிக்கிறது. இவ்விதம் தன் உண்மை சொரூபத்தையோ, கடமையையோ அறியாமல் அலையும் மனிதனை இறுதியில் மரணம் விழுங்கி விடுகிறது. இது யோக வாசிஷ்டம் வைராக்ய பிரகணத்தில் ஸ்ரீ ராமர் கூறும் மனித வாழ்வின் சாராம்சம்.

எனவே குற்றம் காமத்துடையது அல்ல. அதனைப் புருஷார்த்தமாக பாவித்து நலன் பெறுவதோ அல்லது மோகமாக மாற்றி அழிந்து போவதோ நம் கையில் தான் உள்ளது.

இதற்கு கட்டுப்பாடு தேவை. ஒருமித்த மனதோடு கூடிய தீக்ஷை தேவை. அது கிடைக்கப் பெற்றால் கடமையைச் செய்து வாழ்க்கையின் பலனை அடையலாம். ஆணும் பெண்ணும் இல்லாமல் சிருஷ்டி இல்லை.

தெலுங்கில் – கே. வேங்கட சுப்ரமணிய சாஸ்திரி.
தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்.
(Source: ருஷீபீடம் விசிஷ்ட சஞ்சிகை -2009)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories