தேசிய கல்விக் கொள்கை – 2020 இணையவழி கருத்தரங்கம் அக்டோபர் 5 – அக்டோபர் 9 வரை நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கை – 2020 இணையவழி கருத்தரங்கை பேராசிரியர் E. பாலகுருசாமி (முன்னாள் துணைவேந்தர். அண்ணா பல்கலைக்கழகம்) தொடங்கி வைத்தார்.
இந்தக் கருத்தரங்கில் பேராசிரியர்கள், பள்ளி முதல்வர் மற்றும் கல்வியாளர்கள் பலர் தேசிய கல்விக் கொள்கை 2020 சிறப்பம்சங்கள் பற்றி பேசினர்.
நிறைவு நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் தேசிய கல்விக் கொள்கையினால் உலக அளவில் இந்தியாவை பற்றிய பார்வை எப்படி மாறுபடும் என்று பேசினார். தெலங்காணா மேதகு ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு தேசிய கல்விக் கொள்கையினால் இந்தியா எவ்வளவு முன்னேறும் என்று சிறப்புரை ஆற்றினார்.
பேராசிரியர் E. பாலகுருசாமி தொடக்க உரை நிகழ்த்தினார். கல்லூரி படிப்பை முடித்த இளைஞர்கள், பண்பாளராகவும், படைப்பாளராகவும் இருக்க வேண்டும், பட்டம் மட்டும் வைத்து இருந்தால் போதாது. அவர்களுடைய சிந்தனை நன்கு வளர வேண்டும். நமது நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தி மிக அதிகம். அவர்களின் ஆற்றலை வளர்க்கும் விதமாக, தேசிய கல்வி கொள்கை திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
Human Development Index தரவரிசையில் நாம் 13வது இடத்தில் இருக்கின்றோம். ஆராய்ச்சில் நமது நாட்டின் பங்கு வெறும் 4% மட்டுமே, அதனாலேயே, நமது பல்கலைக்கழகங்கள் உலக தர வரிசையில் வருவதில்லை. நமது நாடு பல்வேறு துறைகளிலும் மிளிர, தேசிய கல்விக் கொள்கை ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றது.
ஒவ்வொரு பருவத்திலும், மாணவர்களுக்கு ஏற்ற வகையில், கல்வியை கற்க, தேசிய கல்விக் கொள்கையில், நிறைய நல்ல திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆசிரியர்கள் – மாணவர்களின் சிந்தனைத் திறனை, நன்கு உயர்த்தும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது… என்றார் பாலகுருசாமி.
மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் பேசியபோது…
“துடிப்பு மிக்க இந்தியாவை, தேசிய கல்வி கொள்கை மாற்றும்” என பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார். 6 சதவீத GDP கல்வித் துறைக்கு, இந்த தேசிய கல்விக் கொள்கையில் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நமது மாணவர்களின் திறனை மேம்படுத்த, இந்த கல்வி கொள்கை உதவி புரியும்.
இந்தியாவில் வேலை பார்ப்பவர்கள், அதற்கு உண்டான முறையான படிப்பை படித்தவர்கள், வெறும் 25 சதவீதம் மட்டுமே. நமது நாட்டில் இளைஞர் சக்தி மிகவும் அதிகம். ஆனால், அவர்கள் செய்யும் தொழிலில், திறமை பெற்று இருப்பது குறைந்த சதவீதமே. இந்த கல்விக் கொள்கையின் மூலம், அந்த சதவீதம் மேலும் உயரக் கூடும்.
2030 க்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்றுக்கு மேற்பட்ட, பல்துறை பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும் என இந்த புதிய கல்விக் கொள்கை கட்டாயப்படுத்துகிறது. எல்லாத் துறைகளுக்கும் இடையே, எல்லா துறையிலும் பகிர்மானம் இருக்கும். ஆராய்ச்சிக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை, இந்த கல்விக் கொள்கை தருகின்றது.
மாணவர்கள் எந்த வருடம் வரையில், என்ன படித்து இருக்கிறார்களோ, அந்த வருடம் வரையில், அவர்களுக்கு உண்டான வேலை வாய்ப்பும், அங்கீகாரமும் கிடைக்க இந்த கல்விக் கொள்கை வழி வகை செய்கின்றது. வெளிநாடுகளில் இருப்பது போல, ஒரு இயற்பியல் மாணவர், அவருக்கு விருப்பம் இருப்பின், இசையையும் ஒரு படமாக எடுத்து படிக்கலாம். ஒரே நேரத்தில், பல படிப்புகளை படிக்க, தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வழிவகை செய்கின்றது.
உலகின் முதல் சிறந்த 100 பல்கலைக் கழகங்கள், நமது நாட்டில் செயல்பட வழிவகை செய்யும். இதன் மூலம் நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும் தங்கள் தரத்தை உயர்த்த முயற்சி செய்யும்
கல்விக் கொள்கை, முழுமையாக நிறைவேற்றப் பட்டால், நமது நாடு அறிவிலும், ஆற்றலிலும், வளர்ச்சியிலும், அனைத்து துறையிலும், மாணவர்கள் முன்னேறுவர்… என்றார்.
தெலங்காணா ஆளுநர் டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் பேசியபோது…
தேசிய கல்வி கொள்கை மூலம், நமது மாணவர்களின் தரத்தை, உலக அளவில் எடுத்துச் செல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த காலத்திற்கு ஏற்ப, சமுதாயத்திற்கு ஏற்ப, சரியான நேரத்தில், சரியான தருணத்தில், சரியான நபர்களால், லட்சக்கணக்கான மக்களிடம் கருத்துக்களை கேட்டு, மிகப் பெரிய வல்லுநர் குழுவால், வடிவமைக்கப்பட்டதே தேசிய கல்வி கொள்கை.
நமது நாடு, இளைய சமுதாயம் அதிகம் உள்ள நாடு. இளைஞர்களின் வாழ்விற்கு ஒளியேற்றும் வகையில், உருவாக்கப்பட்டதே தேசிய கல்வி கொள்கை. தாய்மொழி கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. 2035க்குள் உயர் கல்வி 50% அடையும் என கூறியிருப்பது, மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றது.
அனைவருக்கும் வேண்டிய கல்விக் கொள்கை இது. நமது நாட்டிற்கு நிச்சயம் நல் வழியை ஏற்படுத்தும். தெலுங்கானாவில் மாணவர்கள் பல மொழிகளை கற்றுக் கொள்கிறார்கள். அதன் மூலம், அவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று பணிபுரிய நல்ல வாய்ப்பு ஏற்படுகின்றது.
நமது நாட்டின் பெருமைகளை, நமது குழந்தைகள் தெரிந்து கொள்ள, தேசிய கல்வி கொள்கை, நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றது. இதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்… என்று பேசினார்.