விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள்:
(சம்ஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழி முறைகள்)
தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
TEAM BUILDING
குழுவில் யார் உள்ளார்கள்?
அரசியல் கட்சிகளிலும் சரி அரசாங்கத்திலும் சரி பல ரகசிய கூட்டங்கள் நடத்தி வருவார்கள். தேர்தலின்போது என்றால் கூறவே தேவையில்லை. பல முக்கியமான ரகசிய கருத்துக்களின் மீது விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும். அவ்வாறு விவாதித்த விஷயங்களில் நான்கு சுவர்களை தாண்டக் கூடாதவையும் இருக்கும். குடும்பத்தினர் காதில் கூட விழக்கூடாத திட்டங்கள் பல இருக்கும். அவ்வாறு ரகசியத்தை கவனமாக பாதுகாப்பவர்களே குழுவில் (Team) அங்கத்தினர்களாக இருக்க வேண்டும்.
அரசியல் கட்சியில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் உறுப்பினர்கள் இருப்பார்கள். நிறுவனங்களில் நூற்றுக்கணக்கில் மெம்பர்கள் இருப்பார்கள். இவர்கள் அத்தனை பேருமே உட்கார்ந்து ஆலோசனை செய்ய மாட்டார்கள் அல்லவா? இவர்களில் முக்கியமானவர்கள் மூலக் குழுவாக (Core Team) அமைந்து நியமப்படி கலந்து பேசுவார்கள். ஆலோசிப்பார்கள்.
இது விஷயம் குறித்து ஸ்ரீராமன் பரதனிடம் இவ்வாறு கூறுகிறான்:
ஸ்லோகம்:
மந்த்ரிபிஸ்த்வம் யதோத்திஷ்டை: சதுர்பி: த்ரிபிரேவ வா !
கச்சித்ஸம சமஸ்தை: வ்யஸ்தைஸ்ச மந்த்ரம் மந்த்ரயசே மித: !!
— வால்மீகி இராமாயணம், அயோத்தியா காண்டம் -100/71
பொருள்:
நீ நல்ல அறிவும் நற்குணங்களும் கொண்ட மூன்று அல்லது நான்கு அமைச்சர்கள் சேர்ந்தோ, தனித்தனியாகவோ, ரகசியமாகவோ ஆலோசனை செய்கிறாய் அல்லவா?
“தலைவன் தன் குழுவோடு சேர்ந்து வடிவமைத்த உபாயங்கள் பிறர் யாருக்கும் தெரிந்து விடாமல் கவனம் வகிக்க வேண்டும்” என்கிறான் ஸ்ரீராமன் பரதனிடம். அதனை வால்மீகி இவ்வாறு விவரிக்கிறார்:
ஸ்லோகம்:
கச்சின்ன தர்கைர்யுகத்யா வா யேசாப்ய பரிகீர்த்திதா: !
த்வயா வா த்வதமாத்யைர்வா புத்யதே தாத மந்த்ரிதம் !!
—ராமாயணம், அயோத்தியா காண்டம் – 100/21
பொருள்:
ஓ பரதா! உன் ஆலோசனைகளையும், உன் அமைச்சர்கள் கூறிய ஆலோசனைகளையும் பிறர் யூகித்தோ, யுக்தியாலோ, பிற உபாயங்களாலோ அறியவில்லை அல்லவா?
**
உஷ்…! ரகசியம்:
நம் ரகசியமான ஆலோசனைகளை அறிவதற்குப் பலர் முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். பகை நாடுகள் என்ன செய்யப் போகின்றன? பகை நாட்டை ஆள்பவர்கள் அந்தரங்கத்தில் என்ன நினைக்கிறார்கள்? என்று அறிவதற்கு அரசாளுபவன் முயற்சிக்க வேண்டும்.
வணிகக் குழுவினர் அமர்ந்து வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதித்த பின் எடுத்த முடிவுகள் போட்டியாளர்களுக்கு (கமர்ஷியல் கம்பெடிட்டர்ஸ்) தெரிந்து விடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தற்போது உள்ள வணிக உலகில் ஒப்பந்தத்தின் மதிப்பு என்ன? (காண்ட்ராக்ட் கொடேஷன்ஸ்) என்ற செய்தியை போட்டியாளர்களுக்கு ரகசியமாக தெரிவிக்கும் (லீக் செய்யும்) துரோகிகளுக்குக் குறைவில்லை. அவர்களிடமிருந்து ரகசியங்களை விலைக்கு வாங்கும் நிறுவனங்கள்கூட உள்ளன என்பது சிலருக்கு வியப்பை அளிக்கும். இவ்வாறு இரகசியங்களை வரவழைப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் திறமை தலைவனுக்கு இருக்க வேண்டும்.
ஜனநாயகத்தில் பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை பதவி பிரமாண உறுதிமொழி ஏற்பது என்பது தேசத்தின் ரகசியங்களை பாதுகாப்பதற்காகவே!
இந்திய அரசியல் சட்டத்தின் மூன்றாவது அத்தியாயத்தில் பதவிப் பிரமாண உறுதிமொழி குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. நம் அமைச்சர்கள் இவ்வாறு உறுதிமொழி ஏற்பார்கள்…
“பிரதம மந்திரியாக (மத்திய அமைச்சராக) என் கவனத்திற்கு வந்த அல்லது என் பார்வைக்கு வந்த எந்த விஷயத்தையும் என் அதிகாரத்தின் கடமைக்காக மட்டுமே தவிர நேரடியாகவோ மறைமுகமாகவோ யார் ஒருவருக்கும் அல்லது பலருக்கும் வெளியிட மாட்டேன் என்று கடவுள் சாட்சியாக உறுதி அளிக்கிறேன்!”
நாட்டின் பாதுகாப்புக்கும், ஆட்சி அமைப்புக்கும் தொடர்பான ரகசியங்களை நாம் தேர்ந்தெடுத்த அரசாளுபவர் மட்டுமே அறிவர். அவற்றை தேசபக்தர்களான தலைவர்கள் எப்போதுமே வெளியில் சொல்லமாட்டார்கள்.
‘மந்த்ரம்’ என்றால் ரகசியமான ஆலோசனை என்று பொருள். இந்த ரகசியங்கள் வெளியே கசியாமல் எப்படிப்பட்ட இடங்களில் இந்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது குறித்து அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் அற்புதமாக விவரித்துள்ளார். தற்போது மறைவான சிசிடிவி கேமராக்கள், ஒலிப்பதிவு சாதனங்கள் துணையோடு தேச துரோகிகள் பணிபுரியும் இந்நாட்களில் அரசாளுபவர் இன்னும் எத்தனை கவனமாக இருக்கவேண்டுமோ… யோசித்துப் பாருங்கள்!
சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே சாணக்கியர் என்ன கூறினார் என்று பார்ப்போம்…!
“அரசாளுபவர் ஆலோசனை செய்யும் இடம் எல்லா பக்கமும் மூடப்பட்டிருக்க வேண்டும். செய்திகள் வெளியே செல்லாமல் கட்டு திட்டம் செய்ய வேண்டும். பறவைகளோ பிற விலங்குகளோ கூட அவ்விடத்தில் இருக்கக்கூடாது. ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தக் குழுவில் உறுப்பினராக அனுமதிக்க வேண்டும். இந்த ரகசிய கூட்டத்தில் பங்கு கொண்டு வெளியில் சென்றபின் அவர்களின் முக அசைவுகளைக் கொண்டு பிறர் (தற்போது மீடியா), அரசாட்சியோடு தொடர்பில்லாத வெற்று ஆர்வலர்கள், தேசத்துரோகிகள் பலரும் கிரஹித்து அறிந்து விடாத வண்ணம் கவனமாக இருக்கவேண்டும். கூட்டத்தில் பங்கு கொண்டவர்கள் தவறுதலாகவோ, மது மயக்கத்திலோ, தூக்கக் கலக்கத்திலோ ரகசியத்தை வெளியிட்டு விடுவார்களோ… என்னவோ? அந்த விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும்” என்கிறார்.
ரகசியத்தை வெளியிட்டவருக்கு சாணக்கியர் விதிக்கும் தண்டனை என்ன தெரியுமா? மரண தண்டனையே!
(ஆச்சாரிய சாணக்கியர் கலியுகம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு, தற்போதைய கணக்குப்படி கிமு 16வது நூற்றாண்டில் பிறந்தார். இந்த வரலாற்று உண்மையை பிரபல வரலாற்றாசிரியர் திரு கோட்ட வெங்கடாசலம் நிரூபித்துள்ளார்)
சான்றோரின் வழிகாட்டல்:
மார்க்கதரிசிகளான தலைவர்கள் தாம் அறிந்த தேசப் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களை தம்மிடமே வைத்துக் கொள்வார்கள். என்றுமே வெளிப்படுத்தமாட்டார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் முன்னாள் பிரதமர் பிவி நரசிம்மராவு அவர்களின் வாழ்வில் காணக் கிடைக்கிறது. 1995 ம் ஆண்டில் போக்ரான் அணு சோதனை ஏற்பாடுகள் முழுமை அடைந்த பின் திடீரென்று அந்த சோதனை நிறுத்தப்பட்டது. எத்தகைய அழுத்தம் காரணமாக அந்த பரிசோதனை பாதியில் நின்றுவிட்டது என்பதற்கான காரணங்கள் பிவி நரசிம்மராவுக்குத் தெரியும். ஒரு பேட்டியில் சேகர் குப்தா என்ற மூத்த பத்திரிக்கையாளர் இது குறித்து ஆராய முயன்ற போது, அப்போது பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த பிவி இவ்வாறு கூறினார்: “சில ரகசியங்கள் என் சிதையோடு சேர்ந்து எரிந்து போக வேண்டியவையே!”
சர்வதேச நாடுகளோடு உறவு, நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் போன்றவற்றை பொறுப்பான தலைவர்கள் ஒருபோதும் வெளியிட மாட்டார்கள். ஆனால் இதற்கு மாறாக முன்னாள் பிரதமர் விபி சிங் தன் பதவிக்காலம் முடிந்த பின்பு பாரதிய துப்பறியும் அமைப்பு (RAW) தொடர்பான சில முக்கியமான, சூட்சுமமான, அறிவிக்கக் கூடாத செய்திகளை வெளியிட்டார். இவ்வாறு பொறுப்பின்றி, பதவிப்பிரமாண உறுதி மொழியை மறந்து, நாட்டு பாதுகாப்பையும் மக்கள் நலத்தையும் அல்பமான அரசியல் லாபங்களுக்கு பணயமாக வைத்ததை விட அரசியலமைப்புக்கு எதிரான பெரிய குற்றம் வேறு இருக்காது. அரசியலமைப்பு கூறும் பதவிப் பிரமாண உறுதிமொழிக்கு இது பங்கம் விளைவிப்பதாகும். இது நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிய துரோகம் இழைத்த செயலாகும்.
போக்ரான், ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஒரு குக்கிராமம். தார் பாலைவனத்தில் உள்ள சிறு கிராமம். திடீரென்று அந்த ஊரின் பெயர் உலக அளவில் புகழ் பெற்றது. இந்தியா நடத்தும் அணுகுண்டு பரிசோதனைகள் போக்ரானில் நிகழ்ந்ததே இதற்குக் காரணம்.
‘சிரிக்கும் புத்தர்’ என்ற பெயரில் தொடங்கிய போக்ரான் (1974) ஒன்றுக்குப் பின் பல ஆண்டுகள் அணு பரிசோதனைகளுக்கு நம் விஞ்ஞானிகள் முயற்சித்தனர். ஆனால் அமெரிக்காவின் ரகசிய ஒற்றர் அமைப்பு (சிபிஐ) அதற்குத் தடையாக அமைந்தது. இந்தியாவை மிரட்டியது. அமெரிக்காவின் ராடார்கள் நாம் செய்யப்போகும் பரிசோதனைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு கொண்டது. நம் விஞ்ஞானிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் ஏற்பட்டு கடைசி நேரத்தில் அணு பரிசோதனைகள் நின்று போன சம்பவங்கள் இல்லாமலில்லை.
இந்தியாவின் 10 வது பிரதமராக வந்த அடல்பிகாரி வாஜ்பாயி
இத்தடைகளைத் தாண்டி மிக மிக ரகசியமாக போக்ரான் அணு பரிசோதனைகளை நடத்திக் காட்டினார். டாக்டர் அப்துல் கலாம் அப்போது பிரதமருக்கு விஞ்ஞான ஆலோசகராக இருந்தார். அவரோடு கூட மேலும் நான்கு விஞ்ஞானிகள் பிரதமரின் தலைமையில் 1998 மே 18 ம் தேதி இந்த அணு பரிசோதனை நடத்திய பின்னரே உலகிற்கு இந்த விஷயம் தெரியவந்தது. இதில் பங்குகொண்ட விஞ்ஞானிகள் அனைவரும் படைவீரரின் உடை அணிந்து மிக மிக ரகசியமாக மாற்றுப் பெயர்களோடு இந்த காரியத்தை சாதித்துக் காட்டினார்கள்.
இலக்கை அடைவதற்கு கவனமாக முயற்சித்தார்கள். அமெரிக்க ராடாரின் கண்ணை மறைத்து இந்த வெற்றியை சாதித்தார்கள். போக்ரான் அணு பரிசோதனையில் பங்குகொண்ட நூற்றுக் கணக்கான ஊழியர்களும் தொழில்நுட்ப நிபுணர்களும் மிகவும் ஒத்துழைப்பை கடைபிடித்தார்கள். ரகசியத்தைக் காத்தார்கள். அதனால் வெற்றி கைவசமானது.
லாக்டௌனில் அல்வா விருந்து:
நிதி அமைச்சரின் தலைமையில் வருடாந்தர வரவு செலவு நிதி திட்டம் (பட்ஜெட்) தயார் செய்வது குறித்து ஒரு நம்பிக்கையான குழுவாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து ஆலோசனை நடத்துவார்கள். நாட்டின் பட்ஜெட்டைத் தயாரிப்பதற்கு முன் அவர்கள் அனைவரும் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு பெரிய பாத்திரத்தில் அல்வா சமைத்து மகிழ்ச்சியாக பகிர்ந்து உண்பார்கள்.
இந்த அல்வா விருந்து நடந்தபின் அவர்கள் அனைவரும் லாக்டௌனில் சென்று விடுவார்கள். நாட்கணக்காக குடும்பத்திலிருந்து விலகி இருப்பார்கள். ரகசியமாக டைப்பிங், பிரின்டிங் எல்லாம் நடந்து கொண்டிருக்கும். மாற்றங்கள், இணைப்புகள் நிகழும். பார்லிமென்டில் பட்ஜெட் அறிவிக்கப்படும் வரை இதன் ரகசியங்கள் ரகசியமாகவே காக்கப்படும். அதற்காக அதில் பங்கு பெறுவோர் தொலைபேசிகளை கூட பயன்படுத்த மாட்டார்கள்.
இவ்வாறு பல சிரமங்களுக்கிடையில் பட்ஜெட் தயாரித்த பின் பிரதமர் பார்த்து திருப்தி அடைந்த பின் அந்த ரகசிய ஆவணங்கள் அச்சடிக்கப்படும். நிதி அமைச்சக அதிகாரிகள், செயலர்கள், நிதி ஆயோக்கின் உறுப்பினர்கள் பட்ஜெட்டை கணினியில் ஏற்றுவார்கள். தவறுகளை சரி செய்வார்கள். பட்ஜெட் உரையில் கூற வேண்டிய ஸ்லோகங்கள், கவிதைகள், சான்றோரின் மேற்கோள்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து நிதி அமைச்சருக்கு அளிப்பவர்கள் என்று பலர் அதில் இருப்பார்கள். சிறிய வேலை, பெரிய வேலை என்று அனைத்தும் மிக ரகசியமாக வெளியே கசியாமல் நடக்கும் பெரிய காரியம் இது.
பட்ஜெட் ரகசியம் 1950ல் ஒருமுறை வெளியே கசிந்து விட்டது. அப்போது ஜனாதிபதி மாளிகையில் பட்ஜெட் காகிதங்கள் அச்சடிக்கப்பட்டன. அப்போதைய தொழில்நுட்பம் வேறு அல்லவா? 1980லிருந்து மத்திய செகரெட்ரியேடில் உள்ள நிலவறை மாளிகையில் இந்த ஆவணங்கள் அச்சிடப்படுகின்றன.