சுதந்திரப் போர் வீரர்கள் – 1
– முதல்விடுதலைக் குரல் கொடுத்த பூலித்தேவன் –
நெல்லை பகுதியில் நெற்கட்டான்செவலை தலைமை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரர். இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதல்முதலாக 1755 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கம் செய்தவர். ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் தென்னகத்து நெல்லைச் சீமையில் இருந்து இவர் மூலமே எழுந்தது! அந்த வகையில் முதல் விடுதலைப்போர் எனப்படும் 1857 போருக்கும் முன்னோடி இவரே! பெயர் பூலித்தேவன் (1715 – 1767)
“வரிக்குப் பதிலாக நெல்லாவது கொடு” என்று ஆங்கிலேயர்கள் கேட்ட போது, “வரி என்று நீ கேட்டால் ஒரு மணி நெல்கூட நான் தர முடியாது” என்று தீரமாக மறுத்தவர். ஒரு நெல் மணிகூட வரியாகக் கட்ட முடியாது என்று சொன்னதால் அந்தப் பகுதிக்கே நெல்கட்டான்செவல் என்ற பெயர் ஏற்பட்டதாம்!
பெற்றோர் சித்திரபுத்திர தேவர் சிவஞான நாச்சியார். 1715 செப்.1ல் பிறந்தார் ‘காத்தப்ப பூலித் தேவர்’. சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவர். தம் குல தெய்வமான (பூலுடையார் கோயில்) உள்ளமுடையாரை தினமும் வணங்கியவர். ஆறு வயதில் இலஞ்சி சுப்பிரமணிய பிள்ளை யிடம் சன்மார்க்க நெறிகளைப் பயின்றார். தமிழ் இலக்கண, இலக்கிய நூல் கற்று கவிதை எழுதும் திறம் பெற்றார்.
பன்னிரண்டு வயதில் போர்ப் பயிற்சி. குதிரை ஏற்றம், யானை ஏற்றம், மல்யுத்தம், வாள் வீச்சு, வேல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல், சுருள் பட்டா சுழற்றுதல் என அனைத்து வீர விளையாட்டுகளிலும் பயிற்சி கொடுக்கப்பட்டது. சிறந்த உடல் திறம். திரண்ட தோள்கள். அகன்ற மார்பு. பூலித்தேவனின் உடல்வாகு பற்றி நாட்டுப்புறப் பாடல் போற்றிக் கூறுகிறது. ஆறடி உயரம், ஒளி பொருந்திய முகம், திண் தோள், பவள உதடு, விரிந்த மார்பு என்று பாடல் விவரிக்கிறது.
புலிகளுடன் விளையாடுவதிலும் புலித்தோல் புலி நகம் அணிவதிலும் பெரு விருப்பம் இருந்ததால் புலித்தேவர் என்றும் அழைத்துள்ளனர். காத்தப்ப பூலித்தேவரின் திறமை கண்டு பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 லேயே பட்டம் சூட்டி மன்னனாக்கினர் பெற்றோர். பின் அவருக்கு மாமன் மகள் கயல்கண்ணி என்ற லட்சுமி நாச்சியாரை திருமணம் செய்து வைத்தனர். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும் பூலித்தேவரும் இணை பிரியாத நண்பராயிருந்தனர். பூலித் தேவருக்கு கோமதிமுத்துத் தலவாச்சி, சித்திரபுத்திர தேவன், சிவஞான பாண்டியன் என மூன்று மக்கள் பிறந்தனர்.
பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் பயன்படுத்தி, எஞ்சியதை கோயில் திருப்பணிக்காக செலவு செய்தார். குலதெய்வ பூலுடையார் கோயில் தவிர சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில், மதுரை சொக்கநாதர் கோயில் என நெல்லைச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். கோவிலை சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பல திருப்பணிகள்!
பூலித்தேவர் காலத்தில்தான் நாயக்கர் ஆட்சி நலிவுற்று பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சி முடிவுற்று ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் தொடங்கியிருந்தன. ஆங்கிலேயர் வருகையால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தது. அதனால் அனைத்து பாளையக்காரர்களையும் ஒன்றுகூட்டி பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார் பூலித்தேவர்.
அவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சி வலுவிழந்து முகம்மதியர் கையில் விழுந்தது. ஆனால் நவாபுகளுக்கு இடையில் ஏற்பட்ட பூசலால் இரு பிரிவினரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்த போது, குழப்பத்தைப் பயன்படுத்தி பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினர். இந்நிலையில்தான் ஆற்காடு நவாப் ஆங்கிலேயர் உதவியை நாடினான். அதன் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தப்படி வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தான் ஆற்காடு நவாப். அது முதல், ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களுடன் நேரடியாகப் போரிடத் தொடங்கினர்.
மாபூஸ்கான், கர்னல் ஹெரான் இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக ஆங்கிலேயரின் தளவாடங்களும் உணவும் தீர்ந்தது. அதன் பின் கோட்டையை விட்டு வெளியே வந்த பூலித்தேவன் ஆங்கிலப் படைகளை சின்னாபின்னமாக்கினார். இந்த முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து போர் வரும் அபாயத்தை உணர்ந்தார். மீண்டும் பாளையக்காரர்களை ஒன்றுபடுத்த முயன்றார். ஆனால் அவர்களோ, தங்கள் அரசாட்சியே போதும் என சுயநலத்துடன் ஒதுங்கினர்.
பின் பாளையக்காரர்கள் ஒன்றிணைந்து சுதேசிப்படை என்ற புதிய படையை ஏற்படுத்தி யூசுப் கான் என்பவனிடம் ஒப்படைத்தனர். மருதநாயகம் என்ற யூசுப் கானே பின்னாளில் மதம் மாறி, ஆங்கிலேயருடன் இணைந்து, சுதேசிப் படையைக் கொண்டே பூலித்தேவரை எதிர்த்தான்.
1755 தொடங்கி 1767 வரை பல போர்களை சந்தித்தார் பூலித்தேவர். ஒரு சிறிய பாளையத்தின் தலைவன், ஆனால் ஆங்கிலேயரையும், கூலிப்படைகளையும் எதிர்த்து 12 ஆண்டுகள் தொடர்ந்து போர் புரிய முடிந்தது. கடைசியில் இங்கிலாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியுடன் பூலித்தேவரின் கோட்டையில் உடைப்பு ஏற்படுத்தப்பட்டது. பின் ஆங்கிலேயப் படை கோட்டைக்குள் புகுந்தது. வேறு வழியின்றி பூலித்தேவர் கடலாடிக்கு தப்பிச் சென்றார். பின் ரகசியமாக படைகளைத் திரட்டி மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.
ஆனால் 1767ல் பெரும் படையுடன் வந்த ஆங்கிலேயர் பீரங்கிகளைக் கொண்டு பூலித்தேவன் படையை நாசம் செய்தனர். அப்போது பெய்த பெரு மழையைப் பயன்படுத்தி பூலித்தேவர் மீண்டும் தப்பினார். இந்தப் போரே இவரின் கடைசிப் போர். ஆரணிக் கோட்டையின் தலைவன் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு ஆங்கிலேயர் அவரைக் கைது செய்ததாகவும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலில் ஈசனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி ஆங்கிலப் படையினர் சூழ்ந்திருக்க இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் தோன்ற, கைவிலங்குகள் அறுந்து விழ, ஈசனுடன் சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் “பூலிசிவஞானம்” ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றும் சங்கரன்கோவிலுக்குள் பூலித்தேவருக்கு என்று தனி அறை அமைந்துள்ளது.
- செங்கோட்டை ஸ்ரீராம்