~ ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட் ~
இறைவனின் படைப்பில் மனித குலத்திற்கே உரிய பல பண்புகளில் கல்வியறிவும் ஒன்று. கல்வியறிவு என்பது படித்தல், எழுதுதல் மட்டுமல்லாமல் பற்பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ளல், நமக்குத் தெரிந்ததை பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல் முதலியவைகளும் அடங்கும்.
தேசிய கல்வி தினம் நவம்பர் 11- ஆம் தேதி கொண்டாடப் படுகிறது.
மானிட உள்ளத்தில் கல்வியானது தாலாட்டில் இருந்தே தொடங்குகிறது. ஒரு தாய் தான் கல்வி கற்க முடியாத ஆதங்கத்தை பின்வரும் பாடலால் தன் குழந்தைக்கு தாலாட்டின் போது வெளிப்படுத்துகிறார். ” அஞ்சு வயசில் நான்- கண்மணியே! அரிச்சுவடிய படிச்சேனம்மா! பத்து வயசுக்குள்ளேயே நான் படிப்பெல்லாம் முடிச்சேனம்மா!” என்கிறாள்.
தான் படிக்காவிட்டாலும் தன் கணவனும், அவள் சகோதரனும் படித்ததை குறிப்பதற்காக அந்தக் குழந்தையிடம்
“சாய்ந்து கணக்கு எழுதுவார் -கண்ணே!! சமத்துள்ள உன் தகப்பன்!! குந்தி கணக்கு எழுதும்- கண்ணே!! கோபாலன் உன் மாமன்!! என்பாள்.
அந்தக் குழந்தை படிக்க வேண்டும் என்பதற்கு “நாலெழுத்து நீ படிச்சு நல்லபடியா நடக்கணும் கண்ணே!!,” என்றாளாம்.
பாடசாலைக்கு போக மறுக்கும் குழந்தையை அவளது தந்தை “தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை,” என்று சமாதானம் கூறி குழந்தையை பள்ளிக்குச் செல்ல சொல்கிறார்.
எண்களைப் பயிற்றுவிக்கும் போதும் கூட “ஒரு குடம் தண்ணீர் ஊத்தி ஒரு பூ பூத்தது; ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது,” என்று பாடலினால் விளக்கினர்.
ஔவையாரும் ‘இளமையில் கல்’ என்றார். ‘இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்ற தொடரும் நாம் அறிந்ததே. இளமையில் கற்கப்படும் கல்வி பசு மரத்தில் ஆணி அடித்தால் எவ்வாறு சுலபமாக முடியுமோ அவ்வாறே கல்வியும் மனதில் நன்றாகப் பதியும். அதே சமயத்தில், இளமையில் கல்வியை புறக்கணிப்பவன் இறந்தகாலத்தை இழந்தவன் ஆகிறான். எதிர்காலத்தையும் இழக்கிறான். இதனையே திருவள்ளுவரும் ‘கல்லாமை’ என்னும் அதிகாரத்தை படைத்து கல்வி அறியாமையின் விளைவை விளக்குகிறார்.
அறியாமைதான் தீவினையின் மூலவேர். மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற ராஷ்டிரசந்த் துகடோஜி மஹராஜ் தன் மராட்டி நூலான ‘கிராம் கீதா’வில், “கல்வி அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பெற்றோரின் அறியாமையால் பிள்ளைகள் அவதியுற கூடாது,” என்றார்.
சில சமயத்தில் பெற்றோர் வலியுறுத்தியும் சில பிள்ளைகள் கல்வியை கற்க தயங்குவர். அவ்வாறான பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்கும் விதமாக “கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே,”- என்று கூறி பிள்ளைகள் நல்ல ஆசிரியர்களை நாடியும் தேடியும், அவர்களை அணுகியும் தனக்கு கல்வி அளிக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும் எனபது மேற்கூறிய சொற்றொடர் விளங்குகிறது.
கல்வி அனைத்திலும் உயர்ந்தது. ஏழ்மை பிடியில் வாழ்ந்த மகாகவி பாரதியாரை நாம் இன்றும் நினைவு கொள்கிறோம். அவர்தம் நூல்களையும் பாடல்களையும் நினைவு கூறுகின்றோம். அதற்கெல்லாம் காரணம் அவர் கற்ற கல்வியால் தான் இப்போதும் நிலைத்து நிற்கிறார்.
ஏழ்மையின் கோரத்தை அனுபவித்தவராய் கல்வியின் சிறப்பை புரிந்தவராய் ” வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்,” என்று கூறுகிறார்.
ஏழைகளின் வாழ்வை முன்னேற்ற அவர்களுக்கு கல்வியறிவு தர வேண்டும் என்பதை “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற வரியால் கூறுகிறார், நம் மகாகவி.
“ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்,” என்று கல்வியின் சிறப்பை எடுத்துரைக்கிறார்.
புரட்சிக்கவி அல்லவா அவர், அதனாலேயே “கல்வியில்லாத ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல்,” என்று சாடுகிறார்.
துகடோஜி மஹாராஜ் ” பராமரிக்கப்படும் பள்ளிகள் உள்ள கிராமங்கள் சொர்க்கத்திற்கு சமம்,” என்கிறார்.
இனி பெண்களுக்கும் கல்வி வேண்டும் என்பதை வலியுறுத்த பாரதியார் “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்,” என்றார். ஒரு ஆண் படித்தால் அவன் ஒருவன் தான் முன்னேறுவான். ஒரு பெண் படித்தால் ஒரு குடும்பமே முன்னேறும். அவ்வாறு குடும்பங்கள் முன்னேறினால் சமுதாயம் முன்னேறும். இதனை உணர்ந்த மகாராஷ்டிர மாநிலத்தின் புரட்சியாளராய் இருந்த ஜோதிராவ் ஃபூலே தன் மனைவி சாவித்திரிபாய் ஃபூலேவிற்கு கல்விப் பயில உற்சாகப்படுத்தி அவரை முதல் பெண் ஆசிரியர் ஆக்கினார்.
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அவன் கற்ற கல்வியே அவனுக்கு புகழை தேடி தருகிறது.
“முப்பது கோடி முகமுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்” என்பதை நிரூபிக்கும் வகையில் பல பகுதிகளிலிருந்து நம் தேசத் தலைவர்கள் கல்வியின் பெருமையை எடுத்துரைக்கின்றனர்.
மகாத்மா காந்தியடிகள் “வாழ்க்கைக்காக கல்வி, வாழ்க்கை மூலம் கல்வி, வாழ்க்கை முழுவதும் கல்வி,” என்கிறார் பாரதியோ “நீதி உயர்ந்த மதி கல்வி” என்றும் துகடோஜி மஹாராஜோ “வாழ்வியலை கற்றுக்கொடுக்கும் கல்வி ஒரு போதும் அடுத்தவரிடம் கையேந்த வைக்காது,” என்றும் கூறுகின்றனர்.
“கல்வியின் வேர்கள் கசப்பானவை. ஆனால் அதன் கனிகளும் சுவையானவை’ என்பது புகழ்பெற்ற வாசகங்கள் ஆகும். நம்மோடு வாழ்ந்த நம் தமிழ் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த அமரர் ஏபிஜே. அப்துல் கலாம் அவர்கள் தன் இளைய வயதில் பட்ட துயரங்கள் கசப்பானவை தான். ஆனால் கல்வியின் சக்தியை அறிந்த அவர் அத்துயரங்களை எல்லாம் சகித்துக் கொண்டு ஒரு ஆசிரியராய், ஒரு விஞ்ஞானியாய், நம் நாட்டின் ஜனாதிபதியாய் ராமேஸ்வரத்திலிருந்து ராஷ்டிரபதி பவன் வரை தன் அறிவால் கோலோச்சினார்.
கல்வியே ஒரு நாட்டின் முதல் அரண். மதி நிறைந்த அமைச்சர் பெருமக்களை கொண்ட அரசனின் ஆட்சியே அந்நாட்டு மக்களுக்கு பொன்னான காலமாகும்.
பாரதியின் தாசனான பாரதிதாசன் கல்வியின் பெருமையையும் கல்வி கற்காததால் உண்டாகும் விளைவுகளையும் ஒரே பாடலில் பின்வருமாறு கூறியுள்ளார், “எல்லா நலமும் ஈந்திடும் கல்வி, இல்லா வீட்டை இருண்ட வீடு என்க. படிப்பிலார் நிறைந்த குடும்பம் நரம்பின் துடிப்பிலார் நிறைந்த சுடுகாடு என்க. அறிவே கல்வியாம், அறிவிலாக் குடும்பம் நெறி காணாது நின்றபடி விழும். சொத்தெல்லாம் விற்று தந்த கல்வியாம், வித்தால் விளைவன மேன்மை இன்பம், கல்வி இலான் கண் இலான் என்க,” என்றார்.
முதியோர் கல்வியும் வயதானவர்களுக்காக கொண்டு வரப்பட்டது.’சர்வ ஷிக்ஷ அபியான்’ எனப்படும் எல்லாருக்கும் கல்வி மூலம் தேசத்தின் கடைகோடி மாணவர்களுக்கும் கல்வியறிவு அளிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு மாணவன் கூட கல்வி கற்பதில் இருந்து வஞ்சிக்கப்பட கூடாது என்பதே தேசிய கல்வி தினத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு உண்மையான சவாலாகும்.