
ஐ.சி.சி. டி20 – 11.11.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இரண்டாவது அரையிறுதி ஆட்டம்
ஆஸ்திரேலியா வெற்றி
இன்று துபாயில் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை வென்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.
இரண்டு அரையிறுதி ஆட்டங்களிலும் முதலிடத்தில் இருந்த அணி தோற்று, இரண்டாம் இடத்தில் இருந்த அணி வெற்றிபெற்றிருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுபோலத் தோன்றியது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணி கடைசி 30 பந்துகளில் 62 ரன் எடுக்க வேண்டியிருந்தது.
களத்தில் இருந்த மாத்யூ வேட் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இருவரும் இந்தப் போட்டியில் அதிகம் விளையாடவில்லை. எனவே பாகிஸ்தான் அணி வென்றுவிடும் என அனைவரும் நினைத்திருப்பர். ஆனால் நடந்தது வேறு.
பாகிஸ்தான் ஏன் தோற்றது என காரணங்களைத் தேடினால் துபாய் போன்ற ஒரு மட்டையாட வசதியான களத்தில் முதல் 10 ஓவரில் அந்த அணி 71 ரன் எடுத்ததை முதல் காரணமாகச் சொல்லலாம்.
ஆனால் அந்த அணி எப்படியோ இருபது ஓவர் முடிவில் 176 ரன் எடுத்தது. ரிஸ்வான் (67 ரன்), பாபர் ஆசம் (39 ரன்), ஃபகர் சமன் (55 ரன்) சிறப்பாக ஆடினார்கள்.
ஆஸ்திரேலிய அணி சிறப்பாக தனது ஆட்டத்தைத் தொடங்கியது. அந்த அணி பவர்ப்ளேயில் ஒரு விக்கட் இழப்பிற்கு 52 ரன் எடுத்தது.
15ஆவது ஓவர் முடிவில் அந்த அணிக்கு 62 ரன் தேவைப்பட்டது. 16ஆவது ஓவரில் 12 ரன்; 17ஆவது ஓவரில் 13 ரன்; 18ஆவது ஓவரில் 15 ரன்; இப்போது அவர்களுக்கு 22 ரன் தேவைப்பட்டது.
19ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் வேட் கொடுத்த கேட்சை ஹசன் அலி தவறவிட்டார். முதல் மூன்று பந்துகளில் நான்கு ரன் எடுத்திருந்தனர்.
அடுத்த மூன்று பந்துகள் சிக்சருக்குப் பறந்தன. ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே 14 நவம்பர் 2021 அன்று துபாய் இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறும்.