spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்‘நல்ல’ நேரம் பார்த்து... சிசேரியன் செய்து... குழந்தை பிறப்பை நிச்சயிப்பது சரியா?!

‘நல்ல’ நேரம் பார்த்து… சிசேரியன் செய்து… குழந்தை பிறப்பை நிச்சயிப்பது சரியா?!

- Advertisement -

முகூர்த்த நேரமும் சிசேரியன் பிரசவமும்
– ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

நல்ல நேரம் பார்த்து சிசேரியன் ஆபரேஷன் செய்து குழந்தையின் பிறப்பை நிச்சயம் செய்வது சரியா?

குழந்தை பிறந்த தேதி, நேரம் இவற்றைக் கூறி அவனுடைய எதிர்காலம் எவ்வாறு உள்ளது? என்று முன்பெல்லாம் பெற்றோர் ஜோதிடர்களை அணுகிக் கேட்டறிவதுண்டு. ஆனால் இப்போது? எந்த தேதி எந்த நேரத்தில் பிறந்தால் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதை முன்பாகவே ஜோதிடர்களை கேட்டு அறிந்து கொண்டு அந்த நேரத்தில் சிசேரியன் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

இன்னும் சிலர் தங்கள் இஷ்ட தெய்வத்தின் நட்சத்திரம் என்றும் சினிமா ஹீரோக்கள் பிறந்த நட்சத்திரம் என்றும் தங்கள் கட்சி தலைவர்களின் நட்சத்திரம் என்றும் முன்பாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து வைத்துக் கொண்டு தமக்கு அனுகூலமான தேதியில் டெலிவரிக்கு சென்று ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள்.

இந்த முகூர்த்தம் பார்க்கும் ஜோரில் தாய்க்கும் சேய்க்கும் நேரும் மருத்துவப் பிரச்சினைகள், குழந்தைகளின் ஆரோக்கியம்… இவற்றைப் பற்றி கவலை கொள்ளாமல் காற்றில் பறக்க விடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நல்ல முகூர்த்தம் உள்ளதென்று ஒரே நாளில் இருபது முப்பது சிசேரியன் டெலிவரி ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கும் அழுத்தத்திற்கும் மருத்துவர்கள் ஆளாகிறார்கள்.

அவசரத் தேவைக்காக ஒன்பதாம் மாதத்தில் பல மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவம் நடத்தப்பட்டு வந்ததை நாம் அறிவோம். ஆனால் தற்போது எல்லாமே தலைகீழாக நடக்கிறது.

நல்ல நேரம் நாள் நட்சத்திரம் திதி பார்த்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெற்றோர் இது குறித்து மருத்துவரிடம் தெரிவிகிறார்கள். அதற்கேற்ப மருத்துவர்கள் பிரசவத்திற்கான கால வரையறையை நிர்ணயித்துக் கொடுப்பதும் நிகழ்கிறது. எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை குழந்தை டெலிவரி செய்தால் தாய் சேய் நலமாக இருப்பார்கள் என்பதை மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறுகிறார்கள்.

நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து சிசேரியன் செய்து கொள்ளும் தாய்மார்கள் மிகுந்துள்ள காலகட்டமாக இது விளங்குகிறது. இது இப்போது பலரும் கடைபிடிக்கும் வழக்கமாகி விட்டது. தாயின் நட்சத்திரத்தை கணித்து எந்த நாளில் சிசேரியன் செய்தால் தாய்க்கு குழந்தையால் நன்மை நடக்கும், குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று பார்த்து அன்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். தாயின் நலமும் பிறக்கப் போகும் சிசுவின் நலனும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இதனை அறியாமல் பெற்றோர் இதுபோல் மருத்துவரையும் ஜோதிடர்களையும் கேள்வி கேட்பது வழக்கமாகிவிட்டது.

“எங்களுக்கு நல்ல ஜாதகத்தில் பிறக்கும் குழந்தை வேண்டும். அதற்குத் தகுந்த நாளையும் நேரத்தையும் நிர்ணயித்துக் கொடுங்கள். மருத்துவரிடம் தெரிவித்து அன்றைக்கு நான் சிசேரியன் செய்து கொள்கிறேன்” என்று கர்ப்பிணிப் பெண்கள் ஜோதிடரை வினவி வருவதைப் பார்க்க நேரிடுகிறது.

மருத்துவர் கொடுக்கும் காலவரையறை அதிகபட்சம் ஐந்து  நாட்களோ நான்கு நாட்களோ மூன்று நாட்களோதான் இருக்கும். அந்த சிறிய கால அவகாசத்தில் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறக்கூடிய காலகட்டமாகக் கூட இருக்கலாம். இது ஜோதிடர்களை நிர்ப்பந்தம் செய்வது போல் ஆகிறது.

இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் மக்கள் பிரமையில் உள்ளார்கள். ஒரு குழந்தையின் ஜனன காலமும் ஜாதகமும் ஏற்கனவே முடிவானது. மனிதர்களால் மாற்றக்கூடியது அல்ல. பிறக்கும் நேரத்தை நாம்தான் தீர்மானித்தோம் என்று வேண்டுமானால் பெற்றோர்கள் நினைக்கலாம். ஆனால் அது ஏற்கனவே விதிக்கப்பட்டது. பிறப்பையும் இறப்பையும் இறைவன் நிர்ணயிக்கிறான். மனிதனின் அறிவுத் திறனும் விஞ்ஞான வளர்ச்சியும் இவ்விஷயத்தில் தோற்கத்தான் செய்கின்றன.

மிகச் சிறந்த ஜாதகபலன் பிறக்கும் சிசுவுக்குக் கிடைக்க வேண்டும் என்று விதி இருந்தாலொழிய அதில் பெற்றோரோ மருத்துவரோ ஜோதிடரோ செய்வதற்கு ஒன்றுமில்லை.

சிசேரியன் ஆபரேஷன் என்பது மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்த அற்புதமான அறுவை சிகிச்சைமுறை. தாயின் உயிருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக ஏற்பட்ட செயல்முறை. ஏனென்றால் கடந்த காலத்தில் இத்தகைய அறுவை சிகிச்சை முறைகள் அறியப்படாத நிலையில் பிரசவம் என்றாலே செத்துப் பிழைப்பது என்ற அச்சம் இருந்தது. அதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. அத்தகைய அச்சத்திலிருந்து பெற்றோரை காப்பதற்காக ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியே ஸி-செக்ஷன் எனப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை.

அதனைக் கண்டுபிடித்த மருத்துவத்துறைக்கு உலகம் நன்றிக் கடன்பட்டுள்ளது. ஆனால் அதனை ‘உத்தமபுத்திரன்’ பிறப்பதற்காக உபயோகித்துக் கொள்வேன் என்று சிசுவின் பெற்றோரும் அவர்களின் பெற்றோரும் வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம்?

எந்த ஒரு ஜோதிடரும் எந்த ஒரு கிரக நிலையையும் மாற்றி விட முடியாது. ஆகாயத்தில் இருக்கும் கிரகங்களைப் பார்த்து அவரால் விளக்கிக் கூற முடியுமே தவிர பெற்றோரின் பேராசைக்கேற்ப அவற்றை மாற்றும் சக்தி அவருக்கு கிடையாது.

அதுமட்டுமின்றி கர்ம சித்தாந்தத்தை அனுசரித்தே ஜோதிடம் செயல்படுகிறது. அந்த கருத்தின்படி அவரவர் சென்ற பிறவிகளில் செய்த புண்ணிய பாவங்களின் விளைவாகவே பிறக்கப்போகும் சிசுவின் வாழ்க்கை இருக்குமே தவிர ஜாதகம் பார்த்து சிசேரியன் செய்து விடுவதால் மட்டும் அவனுக்கு ஏதோ புது வாழ்வு கிடைத்துவிடுவதில்லை.

இதற்கு உதாரணமாக ராவணனின் கதையைப் பார்க்கலாம். இராவணன் மிகச் சிறந்த ஜோதிடன். அவன் தன் மகன் இந்திரஜித் உயர்ந்த ஜாதகக்காரனானாக விளங்க வேண்டும்… அவன் யாராலும் வெல்லப்பட முடியாயாதவனாக… மிகச் சிறந்த அறிவாளியாக… மரணமற்றவனாக விளங்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் நவ கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தன் விருப்பப்படி நிற்கும்படி கட்டளையிட்டான். அவை எல்லாம் ராவணனைக் கண்டு அஞ்சின. நவகிரகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வேலைகாரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்தான் ராவணன். அவர்களைத் தன் சிம்மாசனத்தின் கீழிருந்த படிகட்டுகளின் மீது படுக்க வைத்து அவற்றின் மீது மிதித்து நடந்து மேலேறிச் செல்லும் பழக்கம் அவனுக்கு உண்டு என்று ஒரு கதை உண்டு. அவனுடைய சக்தியையும் அதிகாரத்தையும் கண்டு அவைகள் அவன் உத்தரவுக்குக் கீழ்படிந்தன. ராவணனின் ஆணைப்படி அனைத்தும் இந்திரஜித்தின் ஜாதகத்தில் பதினோராம் இடத்தில் வந்து நின்றன.

ஆனால் தங்களை அவமதித்த ராவணனுக்கு புத்தி புகட்ட எண்ணி சனிகிரகம் மட்டும் பன்னிரண்டாம் இடத்தில் வந்து நின்று சிறிது கோணலாகப் பார்த்தது. அதனால்தான் ராவணனின் வாழ்க்கை கோணல் ஆயிற்று என்று சொல்வார்கள். இந்திரஜித் லட்சுமணனின் கையால் மரணமடைந்தான்.

கிரகங்களின் அசைவு நம் கைகளில் இல்லை. இதைச் சரியாக புரிந்துகொள்ளாமல் சிசேரியனுக்காக நல்ல முகூர்த்தம் பார்த்தோம் என்று கூறுபவர்களை பிரமையில் இருக்கிறார்கள்’ என்று கூறலாமே தவிர அறிவாளிகள் என்று கூறுவதற்கில்லை என்கிறார்கள் ஜோதிடர்கள்.

நல்ல முகூர்த்த நேரத்திற்கு ஏற்ப சிசேரியன் செய்து கொள்வதால் தாய்க்கும் சேய்க்கும் எந்த அளவு பாதுகாப்பு கிடைக்கிறது?

இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறும் நிகழ்ச்சிகளை பார்க்கையில் ஆச்சரியம் ஏற்படுகிறது. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் மருத்துவர்…. அவரே ஒரு சிறந்த கைனகாலஜிஸ்ட். தனக்கு மிக நல்ல மகவு பிறக்க வேண்டும் என்று மிகச் சிறந்த ஜோதிடரிடம் சென்று முகூர்த்த நாள் தேர்வு செய்து கொண்டு வந்தார். சிசேரியனுக்கு அனைத்தும் தயார் செய்து கொண்டார். இனி அவர் படுக்கையில் ஏறிப் படுத்தவுடன் மயக்க மருந்து கொடுப்பது மட்டுமே பாக்கி. அந்த நேரத்தில் அவர் எப்போதிலிருந்தோ மருத்துவம் பார்த்து வந்த ஒரு பேஷண்டிற்கு எமர்ஜென்சி ஏற்பட்டதால்… அவர் தனக்காக ஏற்பாடு செய்து கொண்ட மருத்துவ சிகிச்சை அனைத்தையும் அந்த பெண்ணிற்குச் செய்யும்படி ஆயிற்று.

இது உண்மையாக நடந்த நிகழ்ச்சி என்ற ஒரு மருத்துவப் பெண்மணி விவரித்தார். அந்த மருத்துவர் அனஸ்தீசியா கொடுப்பது முதல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது இன்னொரு புது உயிரை இப்பூவுலகிற்கு அழைத்து வருவதற்காக! ஆனால் அந்தக் கணத்தில் தனக்கு ஒரு உயர்ந்த சிசு பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட அவருள் இருந்த மருத்துவர் என்ற குணம் முக்கியமாகி விட்டது. உடனடியாக தன் பேஷண்டைக் காப்பதில் முற்பட்டார்.

ஜோதிட சாஸ்திரத்தை அனுசரித்து ஒரே நாளில் ஒரே கணத்தில் பிறந்த அனைத்து சிசுக்களின் ஜாதகங்களும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டா. ஒரே மாதிரி இருக்குமானால் நமக்கிருக்கும் முகூர்த்தங்களில் பிறந்தவர்கள் ஒரே செட் செட்டாக ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டும் அல்லவா? ஏன் வித்தியாசமாக இருக்கிறது?

இவை அனைத்திற்கும் பதில் என்னவென்றால் ஜோதிட அறிவியல் என்பது ஒரு கைவிளக்கு போன்றது. கை விளக்கின் ஒளியை வழிகாட்டியாகக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டுமே தவிர அதுவே நம் வாழ்க்கையை நடத்துவிக்கும் என்று நினைத்து அதனை பிடித்துக் கொள்வது சரியாகாது. இலக்கை அடைவதற்கு பயன்படுமே தவிர அதுவே இலக்கு அல்ல. அதனை மறந்து விடுவதால் இதுபோல் விரும்புகிறார்கள்.

சிலருக்கு முகூர்த்த நேரம் நிர்ணயித்துக் கொண்ட நேரத்தில் சிசேரியன் பிரசவம் நடப்பது உண்டு. அவர்களுக்கு அந்த நேரத்தில் பிரசவம் ஆக வேண்டும் என்று விதி இருந்ததால் அதற்கேற்ப அமைந்தது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது தடைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பிராப்தம் இருந்தால்தான் எதுவும் நடக்கும்.

ஒன்பது  மாதங்கள் சுமந்து சிசு பிறக்கப் போகும் வேளையில் அசுப நொடிகள் போன்றவை குழந்தையை பாதிக்குமா? இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிசு, கர்ப்பத்தில் இருக்கும் போது தாயின் மூலம் பிராண வாயுவை சுவாசித்து வெளியில் வந்த பின் நேராக உலகின் காற்றை சுவாசிக்கிறான். பூமியில் நிறைந்துள்ள அந்த காற்று  கிரகங்களால் பாதிப்படைந்துள்ளது. அதனை முதல் மூச்சாக உள்ளே இழுக்கிறான். அது அந்த குழந்தையின் சுதந்திரமான வாழ்க்கையின் தொடக்கம். அதனால்தான் சிசு பிறக்கும் அந்த நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அந்த நேரத்திற்கு ஏதாவது தோஷங்கள் இருந்தால் அதற்கான தோஷ நிவாரணச் செயல்களை செய்ய வேண்டி வரும். கிரக சாந்திகள், தான தர்மங்கள்… செய்வதால் அந்த குழந்தையிடம் முன்னேற்றம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் தோஷமே இல்லாத நேரத்தில் பிறந்ததாக எண்ணப்படும் குழந்தைக்கும் ‘ஜாதகர்மா’ எனப்படும் சம்பிரதாயப்படி தான தர்மங்கள் செய்வதால் அந்த குழந்தைக்கும் முன்னேற்றம் ஏற்படும். ஜாதகர்மா என்பது என்னவென்றால் பிறந்த உடனேயே தகுதியானவருக்கு ஏதேனும் தானம் செய்யும் முதன்மையான செயல் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றர்.

சிறையில் இருந்த வசுதேவர் கண்ணன் பிறந்ததும் தானம் செய்ய வேண்டும் என்று நினைத்தார். சிறையில் இருந்ததால் முடியவில்லை. அதனால் மானசீகமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதாக பாவனை செய்தார். கம்ச சமஹாரம் ஆன பின் கிருஷ்ணரின் உபநயனத்தின் போது உண்மையாகவே தானம் செய்தார். நந்தகோபன், கிருஷ்ணன் பிறந்ததைக் கொண்டாட ஒரு லட்சம் பசுக்களை தானம் செய்தார். தோஷம் இருந்தாலும் இல்லாவிட்டலும் தானம் செய்வது இன்றியமையாதது. அதனால் தோஷம் இருக்கிறது என்று கால நேரங்களை கண்டு அஞ்சத் தேவையில்லை. அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் உள்ளது.

நாம் இந்தியாவில் முகூர்த்தம் பார்த்து சிசேரியன் செய்து கொள்வதை குற்றமாகப் பார்க்கிறோம். ஆனால் வெளிநாடுகளில் மருத்துவர்கள் தம் வசதிக்கேற்ப கர்ப்பிணிப் பெண்களை சிசேரியனுக்கு உட்படுத்துவது சில நேரங்களில் நிகழ்கிறது. “பிரசவ அறை காலியாக உள்ளது. வந்து விடுங்கள்” என்று கர்ப்பிணிகளுக்கு அழைப்பு விடுத்து சிசேரியன் செய்வதாக கேள்விப்படுகிறோம். “சனி, ஞாயிறு விடுமுறை நாள். எனவே வெள்ளிக்கிழமையே சிசேரியன் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுவதாகவும் கேள்விப்படுகிறோம். சிசேரியன் எனும் உயர்ந்த மருத்துவ முறையை நல்ல வழியில் உபயோகிக்க வேண்டிய பொறுப்பு பேறுகால மருத்துவர்களிடம் உள்ளது.

எப்போதும் குற்றங்களைப் பிறர் மேல் சுமத்தும் நம் வழக்கப்படி சில மருத்துவர்கள் ஜோதிடர்கள் முகூர்த்தம் பார்த்துக் கொடுப்பதால்தான் பெற்றோர் மருத்துவரை நிர்பந்தம் செய்கிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள். இது உண்மை அல்ல என்கிறார்கள் ஜோதிடர்கள். மருத்துவர்கள் பெற்றோர்களிடம் இது போல் செயற்கையாக சிசேரியன் செய்து கொள்ளாமல் சுகப் பிரசவம் ஆவது நல்லது என்று தெரிவித்தால் ஜோதிடரிடம் செல்ல தயங்குவார்கள்.

தவறு பெற்றோர்களுடையதே! அவர்களே அங்கே இதற்குக் காரணம். பெற்றோர்களின் பேராசையே இதற்குக் காரணம் என்பதே மருத்துவர்கள் மற்றும் ஜோதிடர்களின் அபிப்பிராயமாக உள்ளது.

“நார்மல் டெலிவரி செய்து கொள்ளுங்கள். நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து சிசேரியன் செய்து கொள்ளும் பழக்கத்தை விடுங்கள் என்று மருத்துவர்கள் கூற வேண்டுமே தவிர, “நான் நான்கு நாட்கள் அவகாசம் தருகிறேன். நல்ல நேரம் பார்த்து வாருங்கள்” என்று கூறக்கூடாது என்பது ஜோதிடர்களின் கருத்து.

பிறவி என்பது கர்ம பலனின் விளைவே. இன்னார்க்கு இன்ன குழந்தை இப்படித்தான் பிறக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விதி.  குழந்தையின் பால், நிறம், அங்க லக்ஷணங்கள் எதையாவது மாற்ற முடியுமா? விதிப்படி பிறக்க வேண்டிய நேரத்தையே தாம் முடிவு செய்ததாக பெற்றோர் மற்றும் டாக்டர்கள் நினைக்கிறார்கள்.

பிறக்கப் போகும் குழந்தையின் உயிரோடு பெற்றோர் விளையாடுகிறார்கள் என்று மருத்துவர்களும் ஜோதிடர்களும் எச்சரிக்கிறார்கள். சாதாரண சுகப் பிரசவத்தை இவ்வாறு ரணப் பிரசவமாக செயற்கையாக்கிக் கொள்வது சரியல்ல என்பது நிபுணர்களின் அறிவுரை! இதனை குழந்தையின் பெற்றோரும் அவர்களைப் பெற்றோரும் கேட்டு நடந்து கொள்வார்களா? தனிப்பட்ட மருத்துவப் பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சனையாக உருமாறிவரும் காலகட்டமாக இது உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe