spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்அடல்ஜி என்னும் மாமனிதர்

அடல்ஜி என்னும் மாமனிதர்

- Advertisement -

அந்த இளைஞர் நாடாளுமன்றத்தில் பேசிய கன்னிப்பேச்சைக் கண்ட அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு “இந்த இளைஞன் ஒருநாள் இந்நாட்டின் பிரதமர் ஆவான்” என்றார். அந்த இளைஞன் யாருமில்லை, தனது 84வது வயதில் (ஆகஸ்ட் 16, 2018) காலமான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தான். 

அவரது இனிய குரலும், கவிதை போன்ற ஹிந்தி மொழிநடையும் கேட்டு, அதனாலேயே ஜனசங்க உறுப்பினர் (பாஜகவின் முந்தைய வடிவம்) ஆனவர்கள் பலருண்டு. ஹிந்தி மொழிக்கு எதிராகப் போராடிய திமுக தலைவர் அண்ணா துரை கூட, “வாஜ்பாய் பேசும்போது ஹிந்தியும்கூட இனிக்கிறது” என்று கூறினார் என்றால், அவரது பேச்சாற்றலின் சிறப்பு புரியும். மொழி ஆளுமை மட்டுமல்ல, அரசியலிலும் அவர் ஒரு தன்னிகரற்ற தலைவராக விளங்கினார். 

எதிரிகளே இல்லாத அஜாதசத்ருவாக அவர் இந்திய அரசியலில் கோலோச்சினார். முதல் பிரதமர் நேருவைக்கூட கடுமையாக விமர்சிப்போர் உண்டு. ஆனால், வாஜ்பாய் என்றாலே எதிர்க்கட்சியினரும் உள்ளம் உருகுகிறார்கள். இதுதான் அவரது அரசியல் ஆளுமை. ஜனசங்கத்தையும், அதன் தற்போதைய வடிவமான பாரதீய ஜனதா கட்சியையும் அடித்தளத்திலிருந்து கட்டமைத்து ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர்த்ததில் வாஜ்பாயின் தலைமைக்கும் பேச்சாற்றலுக்கும் பெரும் பங்குண்டு. 

தனது அறுபது ஆண்டுகால சக தோழர் லால் கிருஷ்ண அத்வானியுடன் இணைந்து இதனை அவர் சாதித்தார். அதன்மூலமாக, காங்கிரஸ் அல்லாத கட்சியும்கூட நிலையான மத்திய அரசை அமைக்க முடியும் என்று அவர் நிலைநாட்டினார். அதுமட்டுமல்ல, இந்தியாவுக்கு கூட்டணி ஆட்சி சரிவராது என்றிருந்த நிலையை மாற்றியவரும் அவரே. காங்கிரஸ் ஆட்சிக்கு மாறாக 1977-இல் அமைந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசின் வீழ்ச்சியும், ராஜீவ் காந்திக்குப் பிறகான வி.பி.சிங், சந்திரசேகர், தேவே கௌடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோரின் கூட்டணி அரசுகளும் நிலையற்று வீழ்ந்து கூட்டணி அரசு என்றாலே நம்பகமற்றது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. 

ஆனால், 1998-இல் வாஜ்பாய் 13 கட்சிகளுடன் அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி மேலும் வலுவடைந்ததே தவிர வீழவில்லை. தனது ஆட்சியை ஆறு ஆண்டுகள் நடத்தி, கூட்டணி தர்மம் என்றால் என்ன என்று அனைவருக்கும் புரியவைத்தார் வாஜ்பாய். அதற்காக கூட்டணிக் கட்சியினரின் மிரட்டல்களை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தில் ஆண்ட கருணாநிதி அரசைக் கலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை அவர் நிராகரித்ததால்தான் 1998- இல் அவரது அரசு கவிழ்க்கப்பட்டது. 

அதனால்தான், தே.ஜ.கூட்டணியிலிருந்து அதிமுக விலகியபோது திமுக இயல்பான கூட்டாளியாக இணைந்தது. அடுத்து நடந்த தேர்தலில் மீண்டும் வென்று தனது அரசியல் சாதுரியத்தையும், தலைமையையும் நிரூபித்தார் வாஜ்பாய். வாஜ்பாய் பிரதமராக இருந்த ஆறு ஆண்டுகளும் இந்திய வரலாற்றில் குறிப்பிடத் தக்கவை. 1998 மார்ச் 19 முதல் 2004 மே 22 வரையிலான அந்தக் காலகட்டமே ஊழல் கறை படியாத, அதேசமயம் நீடித்த முதல் கூட்டணி ஆட்சியாக இருந்தது. 

1998 மே11-இல் அவரது அரசு நிகழ்த்திய போக்ரான் அணு ஆயுத சோதனை-2 உலக அரங்கில் இந்தியாவின் வலிமையை உறுதிப்படுத்தியது. அதற்கு எதிராக அமெரிக்க அரசு விதித்த பொருளாதாரக் கட்டுப்பாடுகளை மிகவும் அற்புதமாக அவர் சமாளித்தார். இந்திய மக்களின் உள்நாட்டு மூலதனம் மூலமாகவும், கடல் கடந்த வெளிநாட்டு இந்தியர்களின் தேசபக்தி மூலமாகவும் அவர் அதனைச் சாதித்தார். அதன் விளைவாக, அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை பிற்பாடு தானே விலக்கிக் கொண்டது. 

தேசிய அளவில் மாபெரும் மாற்றத்தை சரக்குப் போக்குவரத்தில் ஏற்படுத்திய திட்டமான தங்க நாற்கரச் சாலை திட்டம் வாஜ்பாயின் மணிமகுடங்களுள் ஒன்று. இன்று நாட்டின் எந்த மூலைக்கும் தங்கு தடையின்று வாகனங்கள் செல்லத் தேவையான சாலைக் கட்டமைப்பை அத்திட்டத்தால் அவர் உறுதிப்படுத்தினார். அதையொட்டியே தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரிவுபடுத்திவருகிறது. 

அதேபோல கிராமப்புறச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டமும் (பிஎம்ஜிஎஸ்ஒய்), அனைவருக்கும் கல்வி இயக்கமும் (சர்வ சிக்ஷா அப்யான்), அண்டை நாடுகளுடன் நல்லுறவு ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகளும் அவரது அரசுக்கு சிறப்புச் சேர்த்தன. சதாகாலமும் இந்தியாவைத் துண்டாட நினைக்கும் பாகிஸ்தானுடனும் நல்லுறவை அவர் மேம்படுத்தினார். அதற்காக துணிச்சலுடன் தில்லியிலிருந்து லாகூருக்கு பேருந்து சேவையைத் துவக்கி அதில் தானே முதல் பயணியாகவும் அவர் சென்றார். 

அவரது நல்லெண்ணத்தை தவறாகப் பயன்படுத்த விழைந்த பாக். ராணுவம் கார்கில் சிகரங்களை நயவஞ்சகமாக ஆக்கிரமித்தபோது, அதனை ராணுவ நடவடிக்கையால் (1999- மே- ஜூலை- ஆபரேஷன் விஜய்) வெற்றிகொண்டார். புலிச்சிகரத்தில் இந்திய ராணுவம் தேசியக் கொடியை பறக்கவிட்டபோது, உலகம் இந்தியாவின் ராணுவ வலிமையை மீண்டும் உணர்ந்தது. 

ஆயினும் கூட்டணிக் கட்சிகள் சில கடைசிநேரத்தில் இடம் மாறியதால் அவரது ஆட்சிக்கு 2004-இல் முற்றுப்புள்ளி விழுந்தது. அதையும் ஜனநாயகத்தின் சிறப்பாகக் கருதுவதாக வாஜ்பாய் கூறினார். அடுத்து அமைந்த காங்கிரஸ் ஆட்சியின் தவறுகள், வாஜ்பாய் ஆட்சி தொடராததன் அவலத்தை வெளிப்படுத்தின. 

வாழ்வே வேள்வி: 1924, டிசம்பர் 25-இல் கிருஷ்ண பிகாரி வாஜ்பாய்- கிருஷ்ணாதேவி தம்பதிக்கு மகனாக குவாலியரில் பிறந்தார் அடல். சிறுவயதிலேயே தேசப்பற்றால் வெள்ளையனே வெலியேறு இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதானார். ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளில் இளநிலைப் பட்டமும், அரசியல் அறிவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்ற அடல், 1939-இல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) இணைந்தார். 

பின்னாளில் அதன் முழுநேர பிரசாரகர் ஆனார். அதற்காக, அவர் திருமணம் புரியாது வாழ்நாளெல்லாம் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார். 1950-இல் பாரதீய ஜன சங்கத்தை சியாம பிரசாத் முகர்ஜி நிறுவியபோது அவருக்கு உதவியாக வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து அனுப்பப்பட்டார். அவருடன் அத்வானி, சுந்தசிங் பண்டாரி, நாணாஜி தேஷ்முக் போன்ற பல ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்கள் ஜனசங்கம் சென்றனர். 

முகர்ஜியின் தனிச் செயலாளராக விளங்கிய வாஜ்பாய், அவரது அகால மரணத்தால் (1954) அரசியலில் மோசமான பக்கத்தை உணர்ந்தார். அடுத்து தீனதயாள் உபாத்யாய தலைமையில் பாஜக வளர்ச்சி அடைந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தார். துரதிர்ஷ்டவசமாக தீனதயாளும் 1968-இல் கொல்லப்பட்டார். அதையடுத்து பாரதீய ஜனசங்கத்தின் தலைமைப் பொறுப்பை வாஜ்பாய் ஏற்றார். அந்த நாட்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல மாநிலங்களில் கூட்டணி அரசுகளை உருவாக்கியதிலும், நாடாளுமன்றத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவதிலும் ஜனசங்கம் பெரும் பணி ஆற்றியது. 

1975இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடிநிலையை அறிவித்து நாட்டில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தபோது, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பல ஜனசங்கத் தலைவர்களும், ஜெயபிரகாஷ் நாராயணன், மது தண்டவதே, மொரார்ஜி தேசாய், சந்திரசேகர் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், நெருக்கடி நிலைக்கு எதிராக ஆர்.எஸ். எஸ். நடத்திய போராட்டமும், வாஜ்பாய் உள்ளிட்ட ஜனசங்கத்தினரின் முயற்சியால் சிறைக்குள்ளேயே உருவான ஜனதா கட்சியும் நாட்டின் ஜனநாயகத்தை 1977-இல் மீட்டெடுத்தன. 

நாட்டின் காங்கிரஸ் அல்லாத முதல் அரசு தேசாய் தலைமையில் அமைந்தது. இந்திரா காந்தியின் சதியால் ஜனதா ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, 1980-இல் பாரதீய ஜனதா கட்சியை நிறுவினார் வாஜ்பாய். அப்போது இந்திரா காங்கிரஸ் வெல்ல முடியாத வலிமையுடன் திகழ்ந்தது. ஆனால், வாஜ்பாயின் கடின உழைப்பால் பாஜக வளர்ந்தது. 1986-க்குப் பிந்தைய பாஜகவின் வளர்ச்சி அனைவரும் அறிந்தது.

 ராமஜன்மபூமி போராட்டத்தில் பங்கேற்றது பாஜகவை அரியணை ஏற்றியது. இன்று நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தனித்தும் 5 மாநிலங்களில் கூட்டணியாகவும் ஆள்கிறது பாஜக. நாட்டில் உள்ள கட்சிகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகவும், அதிகமான மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட கட்சியாகவும் பாஜக வளர்ந்திருக்கிறது. இவை அனைத்துக்கும் வித்தானவர் வாஜ்பாய். 

தனது ராஜதந்திரம், பெருந்தன்மையான அணுகுமுறை, பகைவர்களையும் அரவணைக்கும் பண்பு, இனிய பேச்சாற்றல், நயத்தக்க நாகரிகம், அப்பழுக்கற்ற பொதுநலம், வாழ்வையே நாட்டுக்கு அர்ப்பணம் செய்த தியாகத் திண்மை, நிகரற்ற தலைமைப் பண்பு ஆகியவற்றால் இதனை அவர் சாதித்தார். அவர் பிரதமராக இருந்தபோதுதான், அவரால் விஞ்ஞானி ஏ.பி. ஜே.அப்துல் கலாம் ஜனாதிபதி ஆக்கப்பட்டார். நாட்டின் உயர்பீடங்களில் தன்னலமற்ற இருவர் வீற்றிருந்த விழுமிய காட்சியை அன்று நாடு கண்டது. 

தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சுமார் 8 ஆண்டுகள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்ததால் வெளியுலகுடன் அவரது தொடர்பு குறைந்திருந்தது. ஆனாலும், அவர் மறைந்தபோது தேசமே கண்ணீர் விட்டு அழுதது. ஹிந்தியில் அற்புதமான கவிஞரான அடல் பிகாரி வாஜ்பாய், சிறந்த பத்திரிகையாளரும் கூட, ராஷ்ட்ர தர்மா, பாஞ்சஜன்யா, வீர் அர்ஜூன் ஆகிய ஹிந்தி பத்திரிகைகளின் ஆசிரியராக அவர் இருந்துள்ளார். 

தன்னுடன் பயின்ற மாணவியின் மகளை வளர்ப்பு மகளாக அவர் தத்தெடுத்து வளர்த்தார். அந்த மகள் நமிதா தான் வாஜ்பாயின் சிதைக்கு தீமூட்டினார். இது ஒருவகையில் பெரும் புரட்சியான நிகழ்வு. வாஜ்பாயின் வாழ்வே ஒரு வேள்வி. தனக்கென அவர் ஒரு நாளும் வாழவில்லை. அதனால்தான் மரணம் எதிர்ப்பட்ட வயோதிக காலத்தில் அவரால் அதனை புன்சிரிப்புடன் வரவேற்க முடிந்தது. இதோ அவரது கவிதை: மரணத்தின் வயது என்ன? இரண்டு கணம் கூட இல்லை. 

வாழ்க்கையின் தொடர்ச்சிகள் இன்று, நேற்று வந்தவை அல்ல. வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று. மனதைத் தொலைத்து விட்டு மீண்டும் நான் வருவேன். கேவலம் மரணத்திடம் ஏன் பயம் கொள்ள வேண்டும்? மரணமே! திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே. என்னை எதிர்கொண்டு நேரடியாக பரீட்சித்துப் பார்! 

இது அமரர் அடலேறு வாஜ்பாயின் கவிதை மொழி. 

மரணம் ஒன்றே உலகில் மாற்றமற்றது. அதன் பிறகும் உலக மாந்தர்கள் நினைவில் நிலையாக வாழ்பவர்களே பேறு பெற்றவர்கள். அத்தகையோரில் பாரதத் தாயின் தலைமகனான அடல் பிகாரி வாஜ்பாய்க்கு என்றும் உயர்ந்த இடமுண்டு. 

– முத்துவிஜயன் ( ஒரேநாடு செய்தித் தொகுப்பில் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe