கிருஷ்ணா நதி தீரத்தில் எழுந்த புனிதத் தலங்கள்
கட்டுரை -ராஜி ரகுநாதன்
பக்தியும் சக்தியும் ஆர்வமும் இருந்து பார்க்க முடிந்தால் முக்தியும் விமுக்தியும் அருளும் அபூர்வமான புண்ணியத் தலங்கள் பல கிருஷ்ணா நதி தீரத்தில் எழுந்தருளியுள்ளதைக் காண முடியும்.
ஸ்ரீசைலம்
பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஸ்ரீசைல மல்லிகார்ஜுன லிங்கம் இரண்டாம் இடத்தில் உள்ளது. பதினெட்டு சக்தி பீடங்களுள் பிரமராம்பிகை தேவி முதல் இடத்தில் உள்ளாள்.
“ஸ்ரீசைல சிகரம் த்ருஷ்ட்யா புனர்ஜன்ம நவித்யதே” – ஸ்ரீசைலத்தை தரிசித்தவர்களுக்கு மறு பிறவி இல்லை என்பது புகழ்பெற்ற கூற்று.
“என் சிரத்தில் நீ அமர வேண்டும். என் உடல் ஆயிரம் கண்களாக உன்னை தரிசிக்க வேண்டும்” என்று பர்வதன் என்ற அசுரன் கோரினான். சிவபிரான் அருள் புரிந்தார். அதுவே ஸ்ரீபர்வதம் எனப்பதும் ஸ்ரீசைலம். ஸ்ரீசைலம் திருத்தலத்திற்கு நான்கு வாயில்கள் உள்ளன. அவற்றுள் கிழக்கு துவாரம் த்ரிபுராந்தகம். மேற்கு துவாரம் ஆலம்புரம். தென் துவாரம் சித்தவடம். வடக்கு துவாரம் உமா மகேஸ்வரம். இவை நான்கும் புகழ் பெற்ற திருத்தலங்கள்.
சந்திரவதி என்ற அரச குமாரி அர்ச்சனை செய்த காட்டு மல்லிகை மலர்களை அணிந்து சந்திரவதியின் கோரிக்கையை ஏற்று மல்லிகார்ஜுனர் என்று பெயர் பெற்றான் பரமன். அருணன் என்ற அசுரனை வண்டு (பிரமரம்) வடிவமெடுத்து வதைத்ததால் பார்வதிக்கு பிரமராம்பிகை என்று பெயர் வந்தது. ஸ்ரீசைலம் தலத்தை வழிபட்டவர்களுள் இரண்டாம் ஹரிஹரராயர், ஸ்ரீகிருஷ்ண தேவ ராயர், சத்திரபதி சிவாஜி முக்கியமானவர்கள். ஸ்ரீசைலம் மூலிகைகளுக்கு பிறப்பிடம். ஆதி சங்கரர் வணங்கிய திவ்ய க்ஷேத்திரம். கிருஷ்ணா நதி தீரத்தில் விளங்கும் ஸ்ரீசைலம் க்ஷேத்திரம் ஒரு மணிதீபம் போன்றது. கிருஷ்ணா நதிக்குப் புகழ் சேர்க்கும் கொடிமரம் ஸ்ரீசைல சிகரம் என்று கூறலாம். கிருஷ்ணா நதியலைகளின் பெருங்கூட்டமே பாதாள கங்கைப் பிரவாகம். ஸ்ரீசைலத்தின் மூலவரைத் தொடுவதற்காக பாதாள கங்கையாக ஓடிவரும் கிருஷ்ணா நதியை வணங்குவதும் பிரமராம்பிகா சமேத மல்லிகர்ஜுனரை வணங்கி வழிபடுவதும் மிகச் சிறப்பு.
அமராவதி
கிருஷ்ணாநதி ஸ்ரீசைலத்தைத் தாண்டி வளைந்து ஓடி நுழையும் அழகிய தோப்பிற்குள் உள்ள சிவன் கோவிலே அமரேஸ்வரர் கோவில். கிருஷ்ணா நதியும் அமரேஸ்வரரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் இடத்தில் அமரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இருந்து படி இறங்கினால் கிருஷ்ண நதி. படி ஏறினால் அமரேஸ்வரர்.
ஆந்திராவில் உள்ள மிக முக்கியமான் புத்த க்ஷேத்திரம் அமராவதி. இங்குள்ள ஸ்தூபம் மிகப் பெரியது. கிமு இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது கட்டப்பட்டது. இதன் சிகரம் 162 அடிகள். இதன் உயரம் 95 அடி. சாஞ்சி தூணை விடப் பெரியது அமராவதி ஸ்தூபம். பிரதக்ஷிண பாதையின் அகலம் 15 அடிகள். அதனைச் சுற்றி உள்ள சுவர் மேல் புத்தரின் வாழ்க்கையின் மிக முக்கிய நிகழ்ச்சிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. நடுவில் அங்கங்கே செதுக்கப்பட்டு காணப்படும் முத்திரைகள் பாரத தேசத்தின் மிக உன்னத கலைச் செலவங்களில் உயர்ந்ததாக கணக்கிடப்படுகிறது. வட இந்தியாவைச் சேர்ந்த சாஞ்சி, பாரஹாட் ஸ்தூபங்களின் சிற்ப அழகுக்குச் சமமான சிற்பக் கலை அழகை அமராவதி ஸ்தூபம் பெற்றுள்ளது. மதுரா, காந்தாரம் போன்ற சிற்ப முறைகளைப் போல் அமராவதி சிற்ப முறையும் சிற்ப உலகில் பிரத்தியகமான சிறப்பைப் பெற்றுள்ளது. சிங்கள, மேற்காசிய தேசங்களின் சிற்ப கலைகளில் அமராவதி சிற்பக் கலை தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. அமராவதியை தரிசிப்பதை சிற்பக்கலை ரசிகர்கள் தம் முக்கிய கடமையாகக் கொண்டுள்ளனர்.
ராமர் பிரதிஷ்டை செய்த பத்து தலங்கள்
கிருஷ்ணா தீரத்தில் உபய சோமேஸ்வரம், உபய ராமேஸ்வரம், உபய முக்தேஸ்வரம், உபய நாகேஸ்வரம், உபய நாராயண க்ஷேத்திரங்ளை தரிசித்து புனிதம் செய்து அந்த க்ஷேத்திரங்களில் தெய்வங்களை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பிரதிஷ்டை செய்தார். இந்த பத்து க்ஷேத்திரங்களும் ஸ்ரீராமனின் பாதம் பட்டு புனிதமாகிய தெய்வீகத் தலங்கள். அந்த தெய்வ மூர்த்திகள் ஸ்ரீராமனின் அர்ச்சனைகளை ஏற்றன.
பாபநாசனம், கோடிபல்லி சோமேஸ்வரம், ஏலூரு, சிலுமூரு ராமேஸ்வரம், வேகனூரு, மூரகோட்டை முக்தேஸ்வரம், பெரிய கல்லேபல்லி, பிட்டல தீவு நாகேஸ்வரம், அவனிகட்ட, நல்லுரு நாராயண க்ஷேத்திரம் என்ற பத்து தலங்களும் கிருஷ்ணா நதி தீரத்தில் ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை.
இவற்றில் பெத்த கல்லேபல்லியில் உள்ள சுயம்பு துர்கா நாகேஸ்வரத் தலம் கிருஷ்ணா தீரத்தில் மசிலிப்பட்டினத்தில் இருந்து பதினெட்டு மைல் தொலைவில் உள்ளது. கதலீபுரம், ரம்பாபுரம் என்பவை இதன் பிற பெயர்கள். கதலீவனத்தில் அஷ்ட மகா நாகங்கள் சிவார்ச்சனை செய்ததால் கதலீபுரம் என்று பெயர் ஏற்பட்டது. அஷ்ட மகா நாகங்களுக்கு சாப விமுக்தி அளிப்பதற்காக ஈஸ்வரன் நாகேஸ்வரனாக பிரத்தியக்ஷம் ஆன இடம் தெய்வீகமான சுயம்பு நாகேஸ்வர தலம். காசியில் உள்ள மணிகர்ணிகா தீர்த்தத்தைப் போல் நாகேஸ்வர தலத்தில் கிருஷ்ணா நதி வடக்கு வாஹினியாக பிரவகிக்கிறது. அதனால் இது தக்ஷிண காசியாக புகழ் பெற்றது. வட வாகினியான கிருஷ்ணா நதியில் ஸ்நானம் செய்தால் பிறப்பு இறப்புகளைத் தாண்டி விடலாம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. கதலீபுரத்தில் பலி சக்கரவர்த்தி தவம் இயற்றி உய்வடைந்தார். விச்வாமித்திரரால் பிரதிஷ்டை செய்யபட்ட ஸ்ரீமதனகோபால சுவாமி இங்கு க்ஷேத்திர பாலகர். அப்படிப்பட்ட மகிமை பொருந்திய கதலீபுரம் பூமியின் கலந்து பக்தர்களின் கண்களுக்கு தென்படாமல் மறைந்து போனது.
தெய்வ பக்தி நிறைந்த சல்லபல்லி சமஸ்தான அதிபதியான ‘யார்லகட்ட கோதண்ட ராமன்னா’ என்ற அரசருக்கு 1746 ல் துர்கா நாகேஸ்வர சுவாமி கனவில் தென்பட்டு நாகேஸ்வர க்ஷேத்திரத்தை புனர்நிர்மாணம் செய்யும்படி ஆணையிட்டார். அரசர் கதலீபுரத்தை புனரமைத்தார். நாக குண்டத்தை பசு முகத்தின் வடிவில் புனரமைத்தார்.
வேதாத்திரிக்கு நான்கு மைல் தூரத்தில் கிருஷ்ணா தீரத்தில் காகதீய அரசர்கள் ஸ்தாபித்த முக்தேஸ்வரபுரம் பார்க்க வேண்டிய தலங்களில் ஒன்று.
மங்களகிரி
“நமோ ந்ருசிம்ஹ நாதாய சர்வ மங்கள மூர்த்தயே” என்று வன வாசத்தின் கஷ்டங்கள் நீங்குவதற்காகவும் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகவும் நரசிம்ஹ மூர்த்தியை பூஜித்தார்கள் பாண்டவர்கள். தர்மராஜர் குருக்ஷேத்திர யுத்தத்தில் வெற்றி பெற்றார். விஜயவாடாவில் இந்திரகீலாத்ரி மேலிருந்து பார்த்தால் படுத்திருக்கும் யானை வடிவத்தில் ஒரு மலை தென்படும். அதுவே மங்களகிரி. இது கிருஷ்ணா நதி அருகில் உள்ள மலைக்கோயில்.. நரஹரி க்ஷேத்திரம். ‘பானகாலராயன்’ என்று போற்றப்படும் நரசிம்ம சுவாமி கோவில் கொண்ட மங்களகிரி இதுவே. இது கிருத யுகத்தில் தோத்தாத்திரி, திரேதாயுகத்தில் ஸ்தோதாத்திரி, துவாபர யுகத்தில் முக்த்வத்ரி, கலியுகத்தில் மங்களகிரி என்று பெயர் கொண்டது. இதற்கு ஹஸ்தகிரி என்றும் பெயர் உண்டு. இதன் புராதன பெயர் வைஷ்டவாஸ்ரமம். பார்வதிக்கு சங்கர பகவான் கூறியருளிய ‘பவானி சங்கர கீதை’ யில் மங்களகிரி க்ஷேத்திர மாஹாத்மியம் வர்ணிக்கப்படுவதாக பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
ஸ்ரீகாகுளம் –
ஸ்ரீகாகுளம் ஆந்திர மகாவிஷ்ணு அவதரித்த திவ்ய க்ஷேத்திரம். ஆந்திர சாம்ராஜியத்திற்கு இது தலைநகர் போன்றது. ஆந்திர தேவர் தோன்றிய ஆந்திர வைகுண்டபுரம் ஸ்ரீகாகுளம். இது விஜயவாடாவுக்கு 68 கிமி தூரத்தில் உள்ளது. கிருஷ்ணா நதி தீரத்தில் பார்க்க வேண்டிய புண்ணியத் தலங்களில் ஸ்ரீகாகுளம் முக்கியமான ஒன்று.
பிரம்மாண்ட புராணம், பத்ம புராணம், ஸ்காந்த புராணத்தின் சஹ்யாத்ரி காண்டத்தில் ஸ்ரீகாகுளம் புண்ணியத் தலத்தின் புகழ், ஸ்ரீகாகுள மகா விஷ்ணுவின் வர்ணனை காணப்படுகிறது. ஸ்ரீஹரியின் ஆணைப்படி பதினான்கு புவனங்களை சிருஷ்டித்த பிரம்ம தேவர் மன அமைதிக்காகவும் ஓய்வுக்காகவும் கிருஷ்ணா நதி தீரத்தில் தவம் செய்யத் தொடங்கினார். இந்திரன் முதலான தேவர்கள், பிருகு, அத்ரி, வசிஷ்டர் முதலான மகரிஷிகள் அனைவரும் வந்து தவமியற்றி, சிற்ப சாஸ்திர முறைப்படி மகா விஷ்ணுவின் விக்ரஹத்தை ஸ்தாபித்து பூஜையைத் தொடங்கினார்கள்.. பிரம்மாவின் தவத்திற்கு மகிழ்ந்து விஷ்ணு காட்சி அளித்தார்.
“நான் ஆதி தெய்வமாக, ஸ்ரீகாகுளம் க்ஷேத்திரத்தின் பாக்கிய தேவதையாக, ஆந்திர மகாவிஷ்ணுவாக ஸ்ரீகாகுளம் க்ஷேத்திரத்தில் கல்பம் முடியும் வரை இருப்பேன்” என்று ஸ்ரீஹரி பிரம்மாவுக்கு வரமருளினார். ஸ்ரீமகா விஷ்ணு தோன்றிய இடத்தில் ஆந்திர விஷ்ணுவை ஆத்ரேய மகரிஷி பிரதிஷ்டை செய்தார். சந்திர வம்சத்தைச் சேர்ந்த சித்ர ரதனின் மைந்தன் சசிபிந்து மகாராஜாவின் கனவில் கிடைத்த ஆணைப்படி ஸ்ரீகாகுள க்ஷேத்திரத்தை தரிசித்து இறைவனை பூஜித்து, அங்கிருந்த மகரிஷிகளை வணங்கினான். அவர்களின் அறிவுரைபப்டி ஆந்திர மகாவிஷ்ணுவுக்கு முதன் முதலில் திவ்யமான தேவாலயம், பிராகாரம், மண்டபங்கள் கட்டினான். சுவாமிக்கு பல கிராமங்களை சமர்ப்பித்தான்.
சசிபிந்து மகா ராசாவின் கொள்ளுப் பேரன் சுமதி. சுமதி ஸ்ரீகாகுள ஆந்திர மகா விஷ்ணுவின் பரம பக்தன். சுமதி தன் இரு ராணிகளான பிரபாவதி, புண்யவதியோடு சேர்ந்து ஸ்ரீகாகுலம் க்ஷேத்திர தரிசனத்திற்கு வந்தான். சுவாமிக்கு சேற்று நீரால் அபிஷேகம் நடப்பதைப் பார்த்து மனவேதனை அடைந்தான். சுவாமியை மனதார தியானம் செய்தான். சுவாமியின் அருளுக்காக பிரார்த்தித்தான். சுவாமிக்கு தூய்மையான ஜலத்தால் அபிஷேகம் நிகழவேண்டும் என்று விரும்பினான். ஸ்ரீஹரி, சுதர்ஷன சக்கிரத்தை அனுப்பி சக்கிர தீர்த்தம் படைத்தார். பரம பவித்திரமான சக்கர தீர்த்தத்தின் சுத்தமான நீரால் அன்று முதல் ஸ்வாமிக்கு அபிஷேகம் நடக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீகாகுளேஸ்வரனை சேவிப்பதற்கு ராணிகளோடு சுமதி மகாராஜா ஸ்ரீகாகுளத்தில் முகாமிட்டார். ராணிகள் பூ மாலைகள் தொடுத்து சுவாமியின் பவளிப்பு சேவைக்கு சமர்பிப்பார்கள். அர்ச்சகர் சுவாமிக்கு சமர்ப்பிப்பதற்கு பதில் அவற்றை தன் பிரியமான வேலாயிக்கு அலங்கரித்து மறுநாள் காலை அவற்றை ராஜ குடும்பத்திற்கு தெய்வ பிரசாதமாக அளிக்கத் தொடங்கினார்.
ஒரு நாள் பூமாலையில் நீண்ட தலைமுடி இருந்ததை கவனித்த அரசன் அரச்சகரை வினவினான். “சுவாமிக்கு கொண்டை உள்ளது. தலைமுடி அந்த கொண்டையுடையது” என்றார் அர்ச்சகர். ராஜா, ராணிகளோடும் அமைச்சர்களோடும் சோதிப்பதற்கு வந்தார். அர்ச்சகர் பக்தியோடு செய்த சேவைகளுக்கு மகிழ்ந்த சுவாமி கருணை கொண்டு கொண்டையோடு தரிசனம் அளித்தார். தெய்வத்தின் பாதுகாப்பால் அரச்சகர் அரச தண்டனையில் இருந்து தப்பினார். அமைச்சர் சுவாமியின் கொண்டையில் இருந்த தலைமுடியை சோதிப்பதற்காக இழுத்த போது ரத்தம் சிந்தியது. “இறைவா! என் அபராதத்தை மன்னித்து அருள்” என்று சுவாமியை பிரார்த்தித்தார் அமைச்சர். சுவாமி கொண்டையை மீண்டும் மாயம் செய்தார். ஸ்ரீகாகுள ஸ்ரீஹரி சதகத்தின் செய்யுட்கள் சுவாமியின் சிகை தரிசன காதையையும் பக்த வாத்சல்ய மகிமையையும் எடுத்துரைக்கின்றன.
ஸ்ரீகிருஷ்ண தேவராயர் கலிங்க தேச விஜய யாத்திரையின் போது விஜயவாடாவுக்கு வந்து அங்கிருந்து ஸ்ரீகாகுளத்தை அடைந்து ஏகாதசி உபவாசம் இருந்தார். அன்றிரவு அவர் உறங்கும் சமயத்தில் அவருக்கு லக்ஷ்மி சமேதராக ஆந்திர மகா விஷ்ணு காட்சி தந்தார். அந்த நேரத்தில் அவர் பாடிய பாடலே…
தெலுகதேல யன்ன தேசம்பு தெலுகேனு
தெலுகு வல்லபுண்டதெலுகொகண்ட
எல்லந்ருபுலு கொலுவ எருகவேபாசாடி
தேச பாஷலந்து தெலுகு லெஸ்ஸ.
‘தேச பாஷைகளில் தெலுங்கு மொழி இனிமையானது’ என்று கூறும் புகழ் பெற்ற பாடல்.
ஆந்திர விஷ்ணுவின் ஆணைப்படி கிருஷ்ணதேவராயர் ‘ஆமுக்த மால்யாதா’ என்ற பிரபந்தத்தை இயற்றினார். தெலுங்கு இலக்கியத்தில் அற்புதமான இந்த நூலில் கிருஷ்ண தேவராயரே இந்த செய்தியைக் கூறியுள்ளார்.
‘ராஜா அங்கிநீடு பஹத்தர்’ 1792 முதல் 1819வரை ஆந்திர சமஸ்தானத்தை ஆண்டார். அவருடைய ஆஸ்தான கவி காசுல புருஷோத்தம கவி . இவர் பல சதகங்களை இயற்றினார். இவருடைய காலத்தில் ஆந்திர மகாவிஷ்ணு நதிக்குள் மூழ்கி விட்டாராம். அப்போது புருஷோத்தம கவி கிருஷ்ணா நதியில் தூய்மையாக ஸ்நானம் செய்து நின்று கொண்டு ஆசு கவிதையாக, ‘சித்ரசித்ர பிரபாவ! தாக்ஷிண்ய பாவ! ஹதவிமத ஜீவ! ஸ்ரீகாகுளேந்த்ர தேவ!” என்ற மகுடத்தோடு ‘ஸீஸ பத்யம்’ என்னும் பா வகையில் நூற்றி எட்டு செய்யுட்கள் பாடினார். சுவாமி அவருடைய பக்திக்கு மகிழ்ந்து ஒரு ஒரு செய்யுளுக்கும் ஒரு ஒரு அங்குலமாக மேலே எழுந்து யதாஸ்தானத்திற்கு வந்தாராம்.
ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருதம் இயற்றிய லீலாசுகரும், பக்தை மகாராஜ நர்த்தகி சிந்தாமணியும் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவர்கள். ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி இயற்றிய நாராயண தீர்த்தர், “ஸ்ரீகாகுளநகரீ ஸ்ரீபூமிசஹிதம்” என்று ஸ்ரீகாகுள க்ஷேதிரத்தின் பெருமையையும் ஆந்திர விஷ்ணுவின் மஹிமையையும் வர்ணித்துள்ளார்.
சித்தேந்திர யோகி இயற்றிய கூச்சிபூடி யக்ஷகானம், பாமா கலாபம், ஆத்திர நாட்டியத்தின் முதல் அரங்கேற்றம் ஸ்ரீகாகுள க்ஷேத்திரத்தில் ஆந்திர விஷ்ணுவின் சந்நிதானத்தில்தான் நடந்தேறியது. கூச்சிபூடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சித்த யோகியும், முவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த க்ஷேத்ரய்யாவும் ஸ்ரீகாகுளும் புண்ணியத் தலத்தை அடைந்து உய்வடைந்தார்கள்.
ஆந்திர கலாசாரத்தின் வளரச்சிக்கு அவ்விதமாக பிள்ளையர் சுழி போட்ட ஆந்திர மகாவிஷ்ணு கோவிலின் சிகரத்தின் மீது ஸ்ரீசக்கிரம் உள்ளது. வட திசையில் ராஜ லட்சுமி சந்நிதி உள்ளது. சோழர் கால சிவாலயம் வடதிசையில் வேறு வளாகத்தில் உள்ளது. அதில் கோயில் கொண்டுள்ள சுவாமியின் பெயர் ஏகராத்ரி பிரசன்ன மல்லிகார்ஜுனர். அவரே இங்கு க்ஷேத்திர பாலகர். அம்பாள் பெயர் பாலா திரிபுர சுந்தரி. ஆந்திர மகா விஷ்ணுவுக்கு சிறப்பாக பல உற்சவங்கள் நடக்கின்றன. விசாக சுக்ல பட்ச தசமியில் இருந்து கிருஷ்ண பட்ச சதுர்த்தி வரை பிரம்மோற்சவங்கள் நடக்கின்றன. ஸ்ரீகாகுளம் திருநாள் பற்றி ஸ்ரீநாத மகாகவி ‘க்ரீடாபிராமம்’ என்ற நூலில் வர்ணித்துள்ளார்.
133 புண்ணிய தீர்த்தங்கள்:-
கிருஷ்ணவேணி அன்னையின் அழகிய வதனமாக மகாபலேஸ்வரத்தைக் கூறுவர். அவளுடைய இதய அழகு நரஹரி புரம். ஸ்ரீசைலத்தில் இருந்து ஸ்ரீகாகுளம் வரை உள்ள இடம் கிருஷ்ணவேணி அன்னையின் நாபிப் பிரதேசம். ஹம்சல தீபம், பெதகள்ளேபல்லி இரண்டும் அன்னையின் புனித பாதங்கள். இவ்விதமாக தோன்றி, படர்ந்து, பிரவிகிக்கும் கிருஷ்ணவேணி நதிக்கு இரு புறமும் எண்ணிலடங்கா புண்ணிய தீர்த்தங்கள் தோன்றின. மொத்தம் நூற்று முப்பத்து மூன்று புண்ணிய தீர்த்தங்கள் உண்டு. பல க்ஷேத்திரங்களின் வரிசையோடு நதி ஓடுகிறது.
கொண்டபல்லி கோட்டை:-
கொண்டபல்லி நகரம் விஜயவாடாவிலிருந்து பதினாறு கிமி தொலைவில் உள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம். இதனோடு சேர்த்து 1௦௦ சதுர மைல் பரப்பளவில் மலைகளும் காடுகளும் பரவி உள்ளன. இவை சுமார் இரண்டு மைல் உயரம் கொண்ட மலைகள். 1362 க்கும் 1377க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்ட அனவேமாரெட்டி என்ற ரெட்டி அரசன் 12 மைல் பரப்பளவில் மலையின் மேல் கோட்டை கட்டினான். எதிரிகளால் நுழைய முடியாதபடி இதனை நிர்மாணித்தான். கொண்டபல்லி க