
சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி 33
தெலுங்கில் – பி.எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
ஜல மந்தன நியாய:
ஜலம் என்றால் தண்ணீர். மந்தனம் என்றால் கடைவது.
பாலைக் காய்ச்சி தயிர் தோய்த்து வைத்தால் தயிராக உருவம் மாறுகிறது. அந்தத் தயிரில் கொஞ்சம் தண்ணீர் கலந்து மத்தால் கடைந்தால் மோராகிறது. அந்த மோரைk கடையும் poது வெண்ணெய் திரண்டு வருகிறது. வெண்ணெயைக் காய்ச்சினால் நெய்யாக மாறுகிறது. இது அனைவருக்கும் தெரிந்தது. இதில் ஒவ்வொரு மாறுபாட்டிற்கும் வாழ்நாள் காலம் Life Span அதிகரிப்பதை கவனித்தால் இறுதியாக வருவது நெய். அது அமிர்தம் எனப்படுகிறது. அது நீண்ட நாள் கெடாமல் இருக்கும் மருத்துவ குணம் கொண்டது.
தேவர்களும் அசுரர்களும் ஆளுக்கொரு பக்கம் நின்று தெய்வீக சர்ப்பமான வாசுகியைக் கயிறாகவும் மந்தார மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலையைக் கடைந்த கதை உலகறிந்த வரலாறு. ஸ்ரீமத் ராமாயணம் பால காண்டத்தில், ஸ்ரீமகாபாரதம் ஆதி பர்வத்தில், ஸ்ரீமத் பாகவதம் கூர்மாவதார கட்டத்தில் பாற்கடலைக் கடைவதை வர்ணித்துள்ளார்கள்.
பாற்கடலை பல காலம் கடைந்த பின் முதலில் ஹாலகால விஷம் வந்தது. ஆனாலும் அஞ்சாமல் அமிர்தத்திற்காக பணியைத் தொடர்ந்தார்கள். நடுவில் பல அபூர்வமான பொருட்கள் வந்தன. பரிஜாதம், ஐராவதம், காமதேனு, வாருணி, கல்பவ்ருக்ஷம், அப்சரசுகள் முதலானவை வெளிவந்தன. ஆனால் அவற்றோடு திருப்தியடையாமல் அமர்தம் கிடைக்கும் வரை ஓய்வெடுக்காமல் பணிபுரிந்தார்கள். இதுவே க்ஷீர சாகர மந்தனம்.
ஒரு கவிஞர் இந்த க்ஷீரசாகர மந்தனம் கற்றுத் தரும் பாடத்தை ஒரே வார்த்தையில் கூறினார். எப்போதும் நிறுத்தாதே. நெவர் கிவ் அப் என்று கூறினார். மற்றும் ஒரு விமர்சகர் லட்சியத்தை அடைவதற்காக அனைவரும் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்றார். நடுவில் வரும் கஷ்டங்களுக்கு அஞ்ச கூடாது. லட்சியம் நிறைவேறும் வரை நிற்கக்கூடாது. உயர்ந்த பலன் அளிக்கும் வேலைகளைத் தொடங்க வேண்டும். ஆயிரம் முறை தோற்றுப் போனாலும் இன்னொரு முறை முயற்சிக்க வேண்டும் என்றார்.
ஆனால் சாதாரண தண்ணீரைக் கடைந்தால் என்ன வரும்? நீரைக் கடைவது வீண் முயற்சி என்ற பொருளில் இந்த நியாயத்தை உபயோகிப்பார்கள். வீண் செயல்களைத் தொடங்குவதும் செய்வதும் நேர விரயமே என்பதை எடுத்துக் கூறுவதற்கு ஜலமந்தன நியாயத்தை உதாரணமாகக் கூறுவார்கள்.
க்ஷீர சாகர மந்தனம் Never give up என்ற செய்தியைக் கூறுகையில் ஜல மந்தனம் Never take up என்ற செய்தியைக் கூறுகிறது. பிரயோஜனம் இல்லாத வேலையைச் செய்யக் கூடாது என்று இந்த நியாயம் எச்சரிக்கிறது. உன் முதலீட்டை சரியான இடத்தில் போட வேண்டும். நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை தருகிறது இந்த நியாயம்.
பொழுதுபோக்கு என்ற சொல்லை அடிக்கடி உபயோகப்படுத்துகிறோம். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக நேரத்தைச் செலவிடுவார்கள். நல்ல பொழுதாக போக்குவது அதாவது சத் காலட்சேபம் என்றால் என்ன என்று ஹிதோபதேசம் செய்பவர்கள் இவ்வாறு சுபாஷிதத்தில் கூறுகிறார்கள்.
காவ்ய சாஸ்த்ர வினோதேன காலோ கச்சதி தீமதாம்|
வ்யசனேன ச மூர்காணாம் நித்ரயா காலஹேனவா ||
காவியங்களையும் சாஸ்திரங்களையும் படிப்பதிலும் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஆரோக்கியமான விளையாட்டுகளில் ஈடுபடுவதிலும் அறிவாளிகள் நேரத்தைச் செலவிடுவார்கள். முட்டாள்கள் மது அருந்துவது போன்ற தீய பழக்க வழக்கங்களிலும் நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவதிலும் யாருடனாவது எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதிலும் நேரத்தைச் செலவிடுவார்கள்.
நேரத்தை வீணடிக்காமல் அறிவைப் பெறுவதையே இலட்சியமாகக் கொண்டு இலக்கிய சர்ச்சைகளில் மகிழ்ச்சி அடைபவர்கள் க்ஷீர சாகர மந்தனம் போல அறிவாளிகள். காலத்தின் மதிப்பு தெரியாமல் வெறுமே தின்றுவிட்டு தூங்குவது, பிறரோடு கலகம் செய்வது, அடுத்தவர் மீது குற்றம் சுமத்துவது என்று நேரத்தை கடத்துபவர்கள் ஜல மந்தனம் போல நேரத்தை வீணடிப்பவர்கள்.
மூர்க்கங்களின் மனதை மகிழ்ச்சியடைய செய்வதென்பது வெறும் நீரைக் கடைந்தால் வெண்ணைய வரும் என்று ஆசைப்படுபது போன்றதே என்பார்கள் அறிஞர்கள்.
அங்ஞ: மாராத்யன்சுகதர மாராத்யதே விசேஷக்ஞ|
ஞானலவ துர்வித்கம் ப்ரஹ்மாபி நரம் ந ரஞ்சயதி !!
பொருள் –
தெரியாதவர்களுக்குக் கூறினால் தெரிந்து கொள்வார்கள். தெரிந்து கொண்டே தெரியாதது போல் நடிக்கும் மூர்க்கர்களுக்கு எடுத்துக் கூற முயற்சிப்பது வீண் முயற்சியே தவிர எந்தப் பலனும் இருக்காது.
பர்த்ருஹரி நீதி சதகத்தில் முட்டாள்களை விமரிசித்து எழுதிய புகழ்பெற்ற ஸ்லோகம் உள்ளது. மூர்க்கனை திருப்திப்படுத்தும் முயற்சி பிரயோஜனம் அற்றது. “பசு மாட்டிற்கு கொடூர குணத்தையோ புலிக்கு சாத்வீக குணத்தையோ புகட்ட எண்ணுவது வீண் முயற்சி”.
கவி வேமனா இதனையே மிக சமத்காரமாகக் கூறுகிறார்.
எலுக தோலு தெச்சி ஏடாதி உதிகினா ‘
நலுபு நலுபே கானி தெலுபு ராது
பொக்கு பால கடுக போவுனா மலினம்பு
விஸ்வதாபிராம வினுர வேமா |
பொருள் –
எலியின் தோலை எத்தனைதான் தேய்த்துக் கழுவினாலும் அது கருப்பாகத் தான் இருக்குமே தவிர வெளுப்பாகாது. கரியை பாலால் கழுவி வெள்ளையாக்கலாம் என்று எண்ணும் செயலும் அப்படிப்பட்டதே என்கிறார் வேமனா.
- நிகழ்கால அரசியலை உதாரணமாக எடுத்துக் கொண்டால், அண்டை தேசங்களோடு செய்த நட்பு முயற்சிகள் எந்தப் பலனையும் கொடுக்கவில்லை என்பதை ஜல மந்தன நியாயமாக குறிப்பிடலாம்.
- காமதேனுவும் கற்பக மரமும் பாற்கடலைக் கடைந்தால்தான் கிடைத்தன. உண்மையான கோரிக்கைகள் கடவுளின் அருளால்தான் கிடைக்குமே தவிர சாதாரன மனிதனை சரணடைந்தால் கிடைக்குமா? அதுவும் ஜல மந்தனம் போன்றதே. ஒருவேளை மனிதனை வேண்டினாலும் பிறருக்கு உதவும் வள்ளல் குணம் உள்ளவரை அண்டி உதவி கேட்க வேண்டுமே தவிர கஞ்சனிடம் கையேந்துவது வீண் பிரயத்னமே. சாதகப் பறவை பொழியும் மேகத்தையே எதிர்பார்த்திருக்கும். கர்ஜிக்கும் வெற்று மேகத்திடம் எதையும் கோராது.
- சில சேனல்களில் காட்டப்படும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் வெறும் நேர விரயமாக உள்ளனவே தவிர எவ்விதமான அறிவியல் ஞானமும் அதன் மூலம் கிடைப்பதில்லை என்பதை கவனித்து வருகிறோம். அதே போல் நாத்திகர்களோடும் தேச எதிர்ப்பு சக்திகளோடும் நடக்கும் விவாதங்களும் ஜல மந்தன நியாயத்திற்கு உதாரணங்களே.
- தனிமனித ஆளுமைக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும் என்பது இந்த நியாயத்தின் உட்பொருள். செல்போன் பயன்பாட்டை வீண் செயல்களுக்கும் காலத்தைப் போக்குவதற்கும் பயன்படுத்துபவருக்கு இந்த ஜலமந்தன நியாயம் கண் திறப்பாக அமைகிறது.
- Donot invest in wrong places என்னும் எச்சரிக்கை இந்த நியாயத்தில் உள்ளது. யோக்கியமில்லாத அயோக்யரிடம் முதலீட்டைச் செலுத்துவது தவறு. நேரம், செல்வம், உழைப்பு எதுவானாலும் சரியான இடத்தில், சரியான முறையில் செலவிட்டால் நல்ல பலன் கிடைக்கும் அதற்கு மாறாக நடந்து கொண்டு பலன் கிடைக்கவில்லை என்று வருந்தினால் என்ன பயன்? Never waste you muscle என்பது இந்த ஜல மந்தன நியாயம் அளிக்கும் உயர்ந்த கருத்து.
- ஸ்ரீஹர்ஷர் எழுதிய புகழ்பெற்ற ஸ்லோகத்தில் ரசனைத் திறன் இல்லாதவர் முன்னிலையில் கலைகளை நிகழ்த்துவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல என்று கூறுகிறார். அதாவது வெறும் நீரைக் கடைந்தார்போல என்று பொருள்.
இதர பாப பலானி யதேச்சயா விதரதானி ஸஹே சதுரானன|
அரசிகாய கவித்வ நிவேதனம் ஸிரஸி மாலிக மாலிக மாலிக|
பொருள் – ஓ பிரம்மதேவா, என் தலையில் எத்தனை பாவங்களின் பலனை எழுதினாலும் சகித்துக் கொள்வேன். ஆனால் ரசிகரல்லாதவரிடம் கவிதை பாடும் துர்பாக்கியத்தை மட்டும் என் நெற்றியில் எழுதிவிடாதே! எழுதிவிடாதே! எழுதிவிடாதே!
இலக்கிய இனிமையை அனுபவிக்க இயலாதவர் முன் கவிதை படிப்பது சாம்பலில் ஊற்றிய பன்னீர் போல வீண். இதுவும் ஜல மந்தன நியாயத்திற்கு உதாரணமாக ஏற்கக் கூடியதே.
- நான் மிகவும் சிரமப்பட்டு உழைத்தேன் ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. என் நண்பனுக்கு வெற்றி கிடைத்து விட்டது என்று சிலர் வருந்துவதைப் பார்க்கிறோம். அதற்குக் காரணம் சரியான நேரத்தில், சரியான முறையில் முயற்சிக்கவில்லை என்பதே.
தயிரைக் கடைந்தால் வெண்ணெய் வரும். ஆனால் நீரைக் கடைந்தால்? அதற்குத் தகுந்த பலன்தானே கிடைக்கும்!