
அன்றிரவு, கார்க்கரே தான் தங்கியிருந்த ஷரிஃப் ஹோட்டலுக்கு திரும்பிச் செல்லாமல்,ஹிந்து மஹா சபா பவனில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 3ஆம் எண் அறையிலேயே தங்கினார்.
கோபால் கோட்ஸே,திகம்பர் பாட்கே,ஷங்கர் கிஷ்டய்யா ஆகியோரை ரயில் நிலையத்தில் ஆப்தே மற்றும் நாதுராம் ஆகியோரால் சந்திக்க முடியாததால், அவர்கள் நிச்சயம் ஹிந்து மஹா சபா பவனுக்கு வருவார்கள்.அந்த நேரத்தில் அவர் அங்கிருப்பது அவசியம் என்று கார்கரே உணர்ந்திருந்தார்.
நாதுராம் பம்பாயிலிருந்து வரும் அடுத்த ரயிலையும் பார்த்து விட்டு,அதிலேயும் அவர்கள் வராத காரணத்தால்,இரவில் தன்னை தேடி மூவரில் யாரெனும் வருவார்களோ என்றெண்ணி ,ரயில் நிலையத்திலேயே,அவர்கள் வருகைக்காக ஒரு பெஞ்சில் சுருண்டு படுத்துக் கொண்டு விட்டார்.
ஜனவரி மாதம் 19ந் தேதி விடியற்காலையில் ஆப்தேயும், நாதுராமும் ஒரு டாக்ஸியில் ஹிந்து மஹா சபா பவனத்திற்கு சென்றனர்.
இன்னும் கோபால் கோட்ஸே உள்ளிட்ட மூவரும் வரவில்லை என்பதை அறிந்து அமைதியை இழந்தனர். ஆனால் அவர்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை. பக்கத்து கட்டிடத்திலிருந்த ஹிந்து மஹா சபா செயலாளர் அஸுதோஷ் லஹரியிடம் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு வரச் சென்றனர்.
காந்தியை திருப்திப்படுத்த ஏற்படுத்தப்பட்ட அமைதி கமிட்டியைப் பற்றி லஹிரி கடுமையாக விமர்சனம் செய்து அவர்களிடம் பேசினார். காந்தி தன் உண்ணாவிரதத்தை கைவிட உருவாக்கப்பட்ட ‘ 7 அம்ச உறுதிமொழி’ யில் ஹிந்து மஹா சபாவும் கையெழுத்திட்டதாக தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக கூறி அவர் வருத்தமடைந்தார்.
அது போல எந்த கையெழுத்தையும் ஹிந்து மஹா சபா போடவில்லை யென்றும், தன்னுடைய அங்கத்தினர்கள் யாருக்கும் அப்படியொரு கையெழுத்தை போடுவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஹிந்து மஹா சபாவின் நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை ஒன்றை தயாரித்திருந்தார். அவரை சந்தித்து இது பற்றி கேட்டவர்களுக்கெல்லாம் அறிக்கையின் நகல்களை கொடுத்து வந்தார்.
நாதுராமும்,ஆப்தேயும்,லஹிரியை சந்திக்க எப்போது சென்றார்கள் அல்லது எவ்வளவு நேரம் அவரோடு இருந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த கேள்வி பின்னாளில் முக்கியத்துவம் பெற்றது.
ஏனென்றால் அன்று காலையில் லஹிரியின் தொலைபேசியி லிருந்து யாரோ பம்பாயிற்கு டிரங்கால் புக் செய்திருந்தார்கள். அந்தக் காலத்தில் டிரங்கால் புக் செய்வது என்பது சலிப்பூட்டும் ஒரு காரியம். இன்ஸூரன்ஸ் ஆஃபீஸிலிருந்து நமக்கு வரவேண்டிய ஈட்டுறுதி தொகையை பெற விண்ணப்ப படிவத்தில்,அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுப்பது போன்றதொரு வேலை. அந்த எண் எந்த டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சில் வருகிறதோ,அங்குதான் ட்ரங்கால் புக் செய்ய முடியும்.
அங்கு அழைப்பவரின் எண்,அழைக்கப்படுபவரின் எண்,அந்த எண்ணில் யாரோடு பேச விரும்புகிறாரோ அவருடைய பெயர் சாதாரண காலா,சற்று விரைவில் பேசுவதற்காக வசூலிக்கப்படும் டபுள் ரேட் காலா,அவசர காலா எனும் விவரங்களெல்லாம் கொடுக்க வேண்டும்.
எப்போது கால் கிடைத்தது,எவ்வளவு நேரம் பேசினார்கள், காலுக்கான பணம் என்று எல்லா விவரங்களும் ரிஜிஸ்டரில் பதிவு செய்து இருப்பார்கள். அத்தோடு தொலைத்தூர அழைப்புகள் முக்கியமான நோக்கில் செய்யப்படுபவை என்பதால்,டெலிபோன் சந்தாதாரின் அனுமதியில்லாமல் வெளியாள் யாரும் அந்த எண்ணிலிருந்து பேச முடியாது.
ஆக லஹிரியோ அல்லது அமைப்பின் முக்கிய பொறுப்பிலிருந்த யாருடைய அனுமதியில்லாமல் அந்த டிரங்கால் புக் செய்யப்பட்டிருக்க வாய்பில்லை. இந்த அழைப்பு,’அவசர அழைப்பு’ எனும் பிரிவின் கீழ் புக் செய்யப்பட்டிருந்தது.
அழைக்கப்பட்ட எண் சாவர்க்கரின் வீட்டு எண். டிரங்கால் புக் செய்தவர் பேச விரும்பிய நபர்கள்,சாவர்க்கரின் செயலாளர் G.டாம்லே,சாவர்க்கரின் பாதுகாவலர் அப்பா கஸர்.
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்