நரேந்திரர் மனதில் இந்தியா… நவீன பாரதம்!

நரேந்திரர் மனதில் இந்தியா

ஆம் ! இந்தியாவின் இளம் தேசியத் துறவி நரேந்திரர் மனதில் இந்தியாவைப் பற்றிய நினைவுகளும், உணர்வுகளும் கனவுகளும் தான் மேலோங்கி இருந்தது.

இளம் நரேன்

1863 ம் ஆண்டு ஜனவரி 12ம் நாள் விஸ்வநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாக அவதரித்த நரேந்திரநாத் தத்தா இளவயதிலேயே நல்ல அறிவுத்திறனும் நினைவுத்திறனும் கொண்டிருந்தார். விளையாட்டிலும், இசையிலும் ஆர்வம் உள்ளவராக இருந்தார்.

தன் தாயார் சொன்ன இதிகாச கதைகள் நரேந்திரனை மிகவும் ஈர்த்தன. சிறுவயது முதலே தியானம் செய்வதில் ஈடுபாடு கொண்டிருந்தார் நரேன். கல்லூரியில் மேல்நாட்டு தத்துவங்கள் மற்றும் வாழ்வியல் முறைகளைப் பற்றிக் கற்றார்.

கற்றலும் ஞானத்தேடலும்

நரேனின் மனதில் இறை உணர்வும் சில குழப்பங்களும் எப்போதுமே குடி கொண்டிருந்தது. தத்துவ சொற்பொழிவுகளைக் கேட்பதும் இறைநெறியாளர்களை சந்திப்பதும் அவரின் வாடிக்கை ஆகியது. அவர் சந்திக்கும் இறையாளர்களிடம் தன் சந்தேகங்களைக் கேட்பதுண்டு. அதிலும், நரேன், “நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா ?” என்ற கேள்வியை பல இறைநெறியாளர்களிடம் கேட்டதுண்டு. ஆனால் யாருமே ஒரு திருப்திகரமான பதிலை அளித்ததில்லை.

நரேனின் ஆங்கில ஆசிரியர், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின், “தி எக்ஸ்கர்ஷன்” (The Excursion) என்ற கவிதையைப் பற்றிப் பேசும் போது “ட்ரான்ஸ்” ( trance) என்ற வார்த்தையைப் பற்றிச் சொன்னார். தமிழில் ’தன் வசம் இழந்த நிலை’ அல்லது ’பரவச நிலை’ எனப் பொருள்படும் அவ்வார்த்தையைப் புரிந்துகொள்ள மாணவர்களுக்கு தஷிணேஸ்வரத்தில்  உள்ள இராமகிருஷ்ணரைப் பற்றிச் சொன்னார் ஆசிரியர் ஹேஸ்டி.

நரேந்திரரின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய இராமகிருஷ்ணரை , 1881 ஆம் ஆண்டு சந்தித்தார் நரேன்.”இறைவனை தாங்கள் பார்த்ததுண்டா?” என்ற நரேனின் கேள்விக்கு எந்த வித தயக்கமும் இல்லாமல், “பார்த்திருக்கிறேனே, உன்னை இப்போது பார்த்துக்கொண்டிருப்பது போல, இறைவனையும் பார்த்திருக்கிறேன்” என்று இராமகிருஷ்ணர் பதில் அளித்தது நரேனின் மனதில் அவரைப் பற்றிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

இராமக்கிருஷ்ண பரமஹம்ஸர், நரேனை சீடனாக ஏற்றதும், ஏதையுமே பகுத்தறிந்து பார்க்கும் நரேன் தன் குருவையும் பரிட்சித்துப் பார்த்ததும் அவர்களின் உன்னதமான குரு- சிஷ்ய உறவும்  உலகறிந்ததே !

தேசியத் துறவியின் பயணம்

இராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின் விவிதிஷானந்தா என்ற பெயருடன், துறவியாய், அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிமையாய் இருந்த பாரதத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தார் நரேந்திரர். ஒருபுறம் மக்களின் அவலநிலை, ஒருபுறம் தேவையற்ற புரையொடிப்போன பழக்கங்கள் மற்றொருபுறம் களஞ்சியமாய் ஆன்மிக தத்துவங்கள் இன்னுமொரு புறம் பெருமை சேர்க்கும் புராதன நூல்களும் கலைகளும்.

நரேந்திரரின் கல்வி ஞானமும், ஆன்மிக நூல்களில் அவருக்கு இருந்த தேர்ச்சியும், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் மற்றும் வங்க மொழிகளில் அவருக்கு இருந்த புலமையும், தத்துவ ஞானமும், எதையும் பகுத்தறிந்து கண்டறியும் அறிவியல் நோக்கும், தன் கருத்துகளை தெளிவுற உரைக்கும் அவரின் சொல்லாடலும், நாடு முழுதும் அவருக்கு நண்பர்களையும், தொண்டர்களையும் சேர்த்து தந்தது.

கன்னியாகுமரியில் நரேன்

பாரதம் மீண்டும் புத்துணர்வு கொண்டு எழவேண்டும் என விரும்பிய நரேன் எப்போதும் அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார். இந்தியர்களின் அதிலும் குறிப்பாக இளஞர்களின் சுயமதிப்பீடு உயர நம் ஆன்மிகபலத்தை புத்துணர்வு கொள்ள வைக்கவேண்டும். நம் இளைஞர்கள் அறிவியலையும் துணை கொள்ளவேண்டும். இது போன்ற அவருடைய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் நாளும் வந்தது.

ஆம், சிகாகோவில் நடந்த உலக மதங்களின் மாநாடு. நண்பர்கள் அதில் கலந்து கொள்ளுமாறு நரேனிடம் சொன்னபோதும், குரு நாதரின் ஆணை வரவில்லையே, தன் மனதின் குரல் இன்னும் ஒலிக்கவிலையே என நரேன் மிகுந்த சிந்தனையில் இருந்தார்.

கன்னியாகுமரியில் கடலின் நடுவில் இருந்த பாறைக்கு நீந்திச் சென்று தியானத்தில் ஆழ்ந்திருந்தார். பாறையின் மேல் அமர்ந்திருந்த போது அவரின் எண்ணங்களையும் அனுபவத்தையும் கேட்டபோது, “நம் நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி என் தியானத்தில் கண்டேன்” என்று அவர் கூறுகிறார்.

சிகாகோவில் விவேகானந்தர்

இந்தியாவின் கடைசிப் பாறையில் அமர்ந்து தியானம் செய்த நரேன் இந்தியாவின் வளர்ச்சிப் பணியில் தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்தார். இந்தியாவின் சுயமதிப்பீட்டை உயர்த்த, உலகுக்கு இந்தியாவின் மேன்மையை உணர்த்த, தானும், தன் நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கேற்ப, சிகாகோவில் நடைபெற இருந்த ”உலக மத மாநாட்டில்” கலந்து கொள்ள புறப்பட்டார்.

அவருடைய நண்பரும் அன்பரும் ஆன கேத்ரி ராஜா அஜித்சிங் மற்றும் சென்னை நண்பர்கள் அவருடைய பயணத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.

ராஜா அஜித்சிங் நரேனுக்குச் சூட்டி மகிழ்ந்த பெயர்தான், “விவேகானந்தர்”

சிகாகோவில் தன் காந்தக் குரலில், ”சகோதர சகோதரிகளே” என்று தொடங்கி, ”மதங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவே அன்றி, வெறுப்பினை வளர்க்க அல்ல”,”இன்றைய தேவை மத நல்லிணக்கம் மட்டுமே, வெற்றுப் பிரச்சாரங்கள் அல்ல” போன்ற கருத்துகள், மேலை நாடுகளை அவரைக் கூர்ந்து நோக்கச் செய்தன.

விவேகானந்தரும் இளைஞர்களும்

இந்திய இளைஞர்களுக்கு அன்று மட்டுமல்ல, இன்றும் கூட எழுச்சியூட்டும் சொற்களாக, சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் திகழ்கின்றன.

இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள் வெறும் வார்த்தை ஜாலம் அல்ல. ஒரு வீர தேசியத் துறவியின் யக்ஞம், வேள்வி, அர்ப்பணிப்பு.

நம் நாட்டின் இளைஞர்கள் வீரத்துடனும், விவேகத்துடனும், அறிவியல் பயன்பாட்டு அறிவுத்திறத்துடனும் ஆன்மீக ஈடுபாட்டுடனும் இருந்து தம் மதிப்பினை உயர்த்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், நம் தாய் நாட்டையும் உயர்த்த வேண்டும் என பாடுபட்டார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12ம் தேதியை நம் நாட்டில் தேசிய இளைஞர்கள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

“மனிதா ! வலிமையுடன் எழுந்து நில் ! ஒரு போதும் பலவீனனாக இருக்காதே !”

“எழுமின் ! விழிமின் ! குறி சேரும் வரை ஓயாதீர் “

இன்னும் எத்தனையோ வீரமுழக்கங்கள், விவேகானந்தரின் அறிவுரைகளாக இளஞர்களுக்கு மட்டுமல்ல, உலகில் அனைவருக்குமே ஏற்றதாக என்றென்றும் இருக்கும்

கட்டுரை ஆசிரியர்: கமலா முரளி

திருமதி.கமலா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். ஆசிரியராக கல்விப் பணியில் இருபத்தெட்டு ஆண்டுகள் பணிபுரிந்தவர்., கேந்த்ரிய வித்யாலயா அகில இந்திய சிறந்த ஆசிரியருக்கான பரிசு பெற்றவர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆங்கில வழியில் பல சொற்பொழிவுகளும் பயிற்சி வகுப்புகளும் நடத்தியிருந்தாலும், தாய் மொழியாம் தமிழ் மொழியில் கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.

  • கட்டுரை: கம்லா

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...