காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 125)

Dr.ஜெயினோ மொரார்ஜி தேசாயோ காந்தி கொலையிலோ,அல்லது கொலைக்கான சதியிலோ சம்பந்தப்படவில்லையென்பது தெளிவு.

காந்தியை கொலைச் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற விஷயம் பலருக்கு முன்னமையே தெரிந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு பின்னாளில் எழுந்தபோது

அதைப்பற்றி விசாரிக்க ஜஸ்டிஸ் K.L.கபூர் தலைமையில் ஒரு நபர் கமிஷன் நியமிக்கப்பட்டது.

ஜஸ்டிஸ் கபூர் Dr.ஜெயினை விரிவாக விசாரித்தார்.

’ மொரார்ஜி தேசாயிடம் என்ன கூறினார் என்பதுபற்றி Dr.ஜெயின் முதலில் கூறியதற்கும் பின்னர் அது சம்பந்தமாகப் பேசியபோது கூறியதற்கும் முரண்பாடுகள் இருக்கின்றன ;

ஆகவே Dr.ஜெயின் மொரார்ஜியை சந்தித்தபோது அவரிடம் என்ன கூறினார் என்பது தெளிவாகத்தெரியவில்லை’ என்று தன் அறிக்கையில் ஜஸ்டிஸ் கபூர் தெரிவித்தார்.

ஒரு விஷயம் மட்டும் தெளிவாகிறது.

ஜனவரி 21ந்தேதி பம்பாய் மாகாணத்தின் உள்துறை அமைச்சராகயிருந்த மொரார்ஜி தேசாயை சந்தித்தபோது,காந்தியை கொல்ல சதியிருப்பதாகவும்,அதில் மதன்லால் பஹ்வாவை தவிர அஹமத்நகரை சேர்ந்த கார்கரே என்பவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று கூறியது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

அன்று மாலை 5 மணியளவில்,Dr.ஜெயின் தன்னைச் சந்தித்துவிட்டு சென்றபிறகு ,

மொரார்ஜி தேசாய் உடனடியாக பம்பாயின் புலனாய்வுத் துறையின் துணை கமிஷனராக இருந்த J.D.நகர்வாலாவிற்கு தன்னைச் சந்திக்கவரும்படியாக கூறி ஆள் அனுப்பினார்.

ஆனால் நகர்வாலா பிஸியாகயிருந்தபடியால்,

இரவு 8.30 மணிக்கு புறப்படவிருந்த குஜராத் மெயிலை பிடிக்க தான் பம்பாய் சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு செல்வதால் அங்கு வந்து தன்னை சந்திக்கும்படி மொரார்ஜி தேசாய் கூறினார்.

நகர்வாலா மொரார்ஜி தேசாயிற்கு விசுவாசமானவர்.அவரை தனக்கு நெருக்கமானவராகக் கருதினார் மொரார்ஜி தேசாய்.

Dr.ஜெயினின் பெயரை வெளிப்படுத்தாமல்,தன்னிடம் கூறப்பட்ட தகவல்களை மட்டும் அவரிடம் தெரிவித்தார் மொரார்ஜி தேசாய்.

Dr.ஜெயின் தன்னிடம் கூறியதாக அவர் நகர்வாலாவிடம் கூறியது :

‘ மதன்லால் பஹ்வாவை,அவருடைய நண்பர் கார்கரே என்பவர் சாவர்க்கரை காண அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு மதன்லால் பஹ்வாவின் திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட சாவர்க்கர் அவருடன் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகப் பேசிவிட்டு,அவருடைய முதுகில் தட்டி ‘ செய் ‘ என்று கூறியுள்ளார்.

மொரார்ஜி தேசாய் வார்தைகளால் கூறினாரா அல்லது தன் உடல்மொழியால் கூறினாரா என்பது தெரியவில்லை,

ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,காங்கிரஸ் அரசாங்கத்திற்கு முள் போல் தைத்துக்கொண்டிருந்த சாவர்க்கரை ஒரு கட்டுக்குள் கொண்டுவர நகர்வாலாவிற்கு அறிவுரை வழங்கப்பட்டது என்பது மட்டும் தெளிவாகிறது.

என்ன சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்பது தெளிவாகாவிட்டாலும், காந்தியின் கொலையைத் தடுக்க நகர்வாலா வழக்கமான போலீஸ் நடவடிக்கைகளை எடுத்தார்.

அதில் ஒன்று ,

’ சாவர்க்கரின் வீட்டை போலீஸ் கண்காணிப்பிற்கு உட்படுத்தியது ‘.

பின்னர் காந்தி கொலை வழக்கின்போது,நகர்வாலா கூறியது :

‘’ எங்களிடம் ஏற்கெனவே சாவர்க்கரின் செயல்பாடுகள் பற்றிய ஒரு கோப்புத்தொகுப்பு இருக்கிறது ‘’.

இது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல ;

ஆங்கிலேயர்கள் காலத்தில் அவர்களால் பிரிவினைவாதிகளாகக் கருதப்பட்ட,காந்தி,நேரு,மொரார்ஜி தேசாய் பற்றியும் கூட போலீஸ்வசம் இதுபோன்ற கோப்புகள் இருக்கத்தான் செய்திருக்கும் .

காந்தி கொலை வழக்கிலிருந்து சாவர்க்கர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட பிறகும்கூட ,

பல வருடங்கள் கழித்து பணியிலிருந்து ஓய்வுப்பெற்றபிறகு காந்தி கொலை வழக்கைப்பற்றி நினைவுகூர்கையில்

’’ காந்தி கொலையை ஏற்பாடு செய்ததே சாவர்க்கர்தான் என்று என் உயிர் உள்ளவரை நான் நம்புவேன்’’ என்று கூறியிருக்கிறார் நகர்வாலா.

( தொடரும் )

  • எழுத்து: யா.சு.கண்ணன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...