October 29, 2021, 3:14 am
More

  ARTICLE - SECTIONS

  பாதுகாப்புக்காக நெடுஞ்சுவரை எழுப்பினால் மட்டும் போதாது..! காவலாளிகளும் சுவர் போல் இருக்க வேண்டுமே!

  great wall china - 1

  வரலாறு என்பது மிகமிக முக்கியமான துறை, ஒரு மனிதனின் உயிர் எத்தனை முக்கியமானதோ, அந்த அளவுக்கு முக்கியமானது ஒரு நாட்டின் வரலாறு என்பது. முன்னேற்றம், வளர்ச்சி, அறிவியல், மனிதவளம், என ஏகப்பட்ட துறைகளும் பிரிவுகளும் தொழில்களும் இருந்தாலும், வரலாறு என்ற உயிர் இல்லை என்று சொன்னால், அனைத்தும் இருந்தும் எதுவுமே இல்லாதது போலாகி விடும்.

  எடுத்துக்காட்டாக நம் நாடு இன்று சந்தித்து வரும் தேசதுரோக சிந்தனைகள், நம் இராணுவத்தினருக்கு எதிரான வெளிப்பாடுகள், சிந்தனைகள், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாட்டின் முப்படைத்தளபதியை ரவுடி என்று கூறுவது என ஒரு நாட்டின் அடிப்படைக் கூறுகளுக்கு எதிரிடையான செயல்பாடுகள், சிந்தனைகள், இயக்கங்கள், ஊடகங்கள், பிரிவினைவாதம் என திரைமறைவில் நினைத்துப் பார்க்க முடியாத பயங்கரமான விஷயங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  அதுவும் 2014ஆம் ஆண்டில் மோதி அரசு பொறுப்பேற்ற பிறகு, புகை போட்டு புற்றீசல்களை வெளியே வரவழைப்பது போல, இந்த நச்சுப்பாம்புகள் அங்கிங்கெனாதபடி சீறிப்பாய்ந்து வெளியே ஊர்ந்து வருவதைப் பார்க்கையில், அடடா, இத்தனை அபாயங்கள் சூழ்ந்திருக்கவா நாம் இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தோம் என்ற மலைப்பு ஏற்படுகிறது.

  இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்று நாம் கற்பனை கூட செய்துபார்த்திருக்காத வகையில் இயக்கங்கள், மனிதர்கள், முக்கியஸ்தர்கள், அமைப்புகள் என நமக்கருகிருலேயே இருந்திருப்பார்கள், அவர்களுடனேகூட நாம் பணியாற்றி யிருப்போம், அந்த அமைப்புகளில், அந்த இயக்கங்களில் நாம் யதார்த்தமாக இணைந்துமிருப்போம், ஆனால் இவற்றின் மெய்யான முகம் 2014க்கும் பிறகு வெளிப்படத் தொடங்கியது என்பது நமக்கு ஒரு அதிர்ச்சி நிறைந்த விழிப்பை ஏற்படுத்தியது.

  இவர்களில் பலருக்கு நாட்டின் மீது எத்தனை காழ்ப்பும் வெறுப்பும் இருக்கிறது என்பதை 2014க்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் நானுமே கூட நம்பியிருக்க மாட்டேன்.

  ஆனால் இன்றோ…… நிஜமென்ற நெருப்பு சுடுகிறது. ஆம், இன்று கண்கூடாக நாம் பார்க்கும் துரோகங்களைத் தாண்டியும் சிலர், இன்னமும் பூனை கண்களை மூடிக் கொண்டு உலகமே இருண்டிருக்கிறது என்பதைப் போல இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் உண்மையைத் தெரிந்து கொண்ட பின்னும் அவர்கள் விழிக்கட்டும் என்று காத்திருக்க நாடும் தயாரில்லை, நாமும் தயாரில்லை. ஏனென்றால் இவர்கள் என்று விழித்து, என்று நாடு பாதுகாக்கப்படும்?

  இந்த அவலநிலைக்கெல்லாம் மூலகாரணம் என்னவென்றால், நமது அடிப்படைகளே இல்லாத நிலை தான். அதாவது நமது முன்னோர் பற்றி, நமது மகத்துவம் பற்றி, நமது பண்டைய சரிதம் பற்றி, நமது வரலாற்று நாயகர்கள் பற்றி, நமது பாரம்பரியம் பற்றி, நமது சீரிய மரபுகள் பற்றி, நமது உயரிய கலாச்சாரம் பற்றி, பண்டைய பாரதம் படைத்த பன்முக சாதனைகள் பற்றி, நமது நேரிய சிந்தனைகள் பற்றி வரலாறுகாணா இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

  இதை யார் செய்தார்கள், ஏன் செய்தார்கள், எப்படி இது அரங்கேறியது என்பது பற்றி எழுதத் தொடங்கினால் இதை வைத்துக் கொண்டு முனைவர் பட்டமே நொடியில் பெற்று விடலாம். அத்தனை பெரிய, பயங்கரமான துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. துரோகம் என்றவுடனேயே அதில் கம்யூனிஸ்டுகள் தொடர்பு இல்லாமல் இருக்குமா?

  அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். தங்கள் நாட்டின் மீதும் தங்கள் முன்னோர் மீதும், தங்கள் பாரம்பரியம் மீதும் பெருமிதம் இல்லாத சமுதாயமும், நற்பண்புகளும் தனிமனித ஒழுக்கமும் இல்லாத நாடும் சீர்கேட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது போன்றது.

  இவற்றின் வீச்சு பற்றியும் இந்தச் சீர்கேடு ஏற்படுத்தி இருக்கும் அபாயகரமான பாதிப்புகள் பற்றியும் நான் கூறினால், வரலாறு எத்தனை மகத்துவமானது, தனிமனித ஒழுக்கம் எத்தனை முக்கியமானது, அவை சரி செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி எல்லாம் நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்வீர்கள். ஒரு சரித்திர நிகழ்வுடன் துவக்குகிறேன்……

  பண்டைய சீனர்கள் அமைதியுடன் வாழத் தீர்மானம் செய்த போது அவர்கள் சீனப் பெருஞ்சுவரை எழுப்பினார்கள். அதன் உயரம் காரணமாக யாராலும் அதன் மீது ஏறிக் கடந்து வர முடியாது என்று அவர்கள் கருதினார்கள்.

  அது உருவாக்கப்பட்ட முதல் நூறாண்டுகளில், சீனர்கள் மீது 3 முறை படையெடுக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் எதிரிப் படைகளின் காலாட்படையினர், சுவருக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ, சுவர் மீது ஏறவோ தேவையே இருக்கவில்லை…… ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவர்கள் காவலாளிகளுக்குக் கையூட்டுக் கொடுத்து தைரியமாக கதவுகள் வழியாகவே நுழைந்தார்கள்.

  சீனர்கள் சுவரைக் கட்டினார்களே ஒழிய, சுவரைப் பாதுகாத்த காவலாளிகளிடம் நல்ல குணநலன்களை உருவாக்க மறந்து விட்டார்கள்!! ஆகையால் எந்த ஒன்றையும் உருவாக்கும் முன்பாக மனித குணநலன்களை உருவாக்க வேண்டும். இது தான் நமது மாணவர்களைய இன்றைய தேவையாக இருக்கிறது.

  china modi - 2

  கிழக்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஒரு அறிஞர் கூறினார் – ஒரு நாகரீகத்தை அழிக்க வேண்டுமென்றால் அதற்கு 3 வழிகள் இருக்கின்றன.

  1. அதன் குடும்ப அமைப்பை அழிப்பது
  2. அதன் கல்விமுறையை நாசம் செய்வது
  3. அவர்களின் முன்மாதிரிகளையும், நாயகர்களையும் பற்றிய எண்ணத்தைத் தாழ்த்துவது.

  குடும்பத்தை அழிக்க, தாய்மார்களின் பங்களிப்பை குறைவான மதிப்பீடு செய்தல். இதனால் தான் ஒரு இல்லத்தரசியாக இருப்பதையே அவர்கள் வெறுக்கத் தொடங்குவார்கள், அவமானமாக உணர்வார்கள்.

  கல்வியை ஒழிக்க, ஆசிரியருக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட வேண்டும், சமூகத்தில் அவருக்கு இருக்கும் நன்மதிப்பைக் குறைப்பதன் வாயிலாக மாணவர்களுக்கு அவர்கள் மீது காழ்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

  முன்மாதிரிகள் பற்றிய உயர் எண்ணத்தைக் குறைக்க, அறிஞர்களையும் கல்விமான்களையும் மட்டம் தட்ட வேண்டும். இதன் வாயிலாக யாருமே அவர்கள் கூற்றை செவிமடுக்க மாட்டார்கள், யாருமே அவர்களைப் பின்பற்ற மாட்டார்கள்.
  உணர்வுள்ள அன்னை, முனைப்புள்ள ஆசிரியர் ஆகியோர் காணாமல் போகும் போது, முன்மாதிரிகள் வீழ்ச்சி காண்பது என்பது இயல்பாக நடக்கும், அப்போது இளைஞர்களுக்கு நற்பண்புகளையும், நற்பதிவுகளையும் யார் கற்றுத் தருவார்கள், கூறுங்கள்?

  india gate - 3

  இவை தாம் இந்தியாவில் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

  இவை எப்படி செய்யப்படுகின்றன என்று பார்ப்போம்.

  நம் கலாச்சாரத்தின் வேர்களை அழிக்க நற்பண்புகளைச் சிதைக்கும் டிவி சேனல்களின் மெகாத் தொடர்கள்.

  அனைத்துவித திரைப்படங்களும் குடும்பமுறையை இதே வகையில் அழிக்கின்றன, அண்மைக்கால உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் (பாலுறவு சுதந்திரம் தொடர்பானவை) இவற்றுக்கு சட்டரீதியான உரமிட்டு வளர்க்கின்றன.

  கல்வி என்பது தனியார் கைகளுக்குச் சென்று விட்ட நிலையில், இவை பெரும்பாலும் அயல்நாடுகளிடம் பணம் பெற்று தொழில்நடத்தும் கிறிஸ்தவர்கள் கைகளுக்குச் சென்று விட்டது. இது ஒருபுறம் என்றால், கல்வி என்பது இன்றைய நிலையில் வியாபாரப் பொருளாகி விட்டது. எல்கேஜி தொடங்கி முதுகலை வரை எங்கு காணினும் அழிவுத் தாண்டவம்.

  இன்று மாணவர்கள் நடந்து கொள்ளும் முறை, ஆசிரியர்களுக்கு அவர்கள் அளிக்கும் மரியாதை என்பதையெல்லாம் பார்க்கும் போதும், 8ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள்கூட கருத்தரிப்பதை எல்லாம் பார்க்கும் போது புரையோடிக் கொண்டிருக்கும் சீர்கேட்டை நம்மால் உணர முடிகிறது.

  இவற்றுக்கெல்லாம் பெரும் காரணம் நான் முன்னே கூறியதைப் போல நம் வரலாறு நமக்குத் தெரியாத காரணத்தால் நம் பாரம்பரியம் மீது நமக்குப் பெருமிதம் இல்லை, நற்பண்புகளும் நல்லொழுக்கமும் இல்லாத காரணத்தால் நற்பாதை சரியான பாதையும் தெரியவில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதைப் போல ஏதோ வாழ்க்கை நடத்துகிறோம், பொருள்சார் வாழ்க்கைமுறையால் பீடிக்கப்படுகிறோம், பதர்களைப் போல காற்றில் வேர்கள் இல்லாமல் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் மதமாற்றம் செய்வது சிறுபிள்ளை விளையாட்டுப் போலத் தான். சனாதன தர்மம் என்ற ஒன்று இல்லை என்றால், துண்டாடத் துடிக்கும் சதிகாரக் கும்பல்களுக்கு இந்தியா சுலபமான இரை.

  தேசத்தைத் துண்டாடத் துடிக்கும் நாசகார கும்பல்களுக்கு நாம் இரையாகப் போகிறோமா அல்லது அவர்கள் மூட்டிய தீயில் அவர்களே கருகிச் சாம்பலாவார்களா என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான, வாழ்வா சாவா தருணம் தேசத்தின் முன்னே 7 கட்டத் தேர்தலாக வரவிருக்கிறது.

  நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்த முக்கியமான கணம் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியன்று நம் ஒவ்வொருவர் வீட்டு வாயிற்கதவுகளையும் தட்டும். நாமும் நாடும் வாழ்ந்து தழைக்க வாக்களிக்கப் போகிறோமா அல்லது நம்மை நாசம் செய்யத் துடிக்கும் பசப்பு வார்த்தை ஓநாய்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி நம்மையும் நாட்டையும் காவு கொடுக்கப் போகிறோமா?

  நாம் யார், நம் மூதாதையர் யார், அவர்களின் அருமை பெருமை என்ன, அவர்களின் மகத்தான சாதனைகள் என்ன, நமது பாரம்பரியம் என்ன என்பதையெல்லாம் நினைத்துப் பெருமைப்படவும், நம் மெய்யான சரித்திரம் உணரவும், சரித்திரம் படைக்கும் கணம் இது. இந்தக் கணத்தைத் தொலைத்தால் நீங்கள் உங்களையே தொலைத்தவர்கள் ஆவீர்கள், பல வருங்காலத் தலைமுறையினர்களையும் சேர்த்துத் தொலைத்தவர்கள் ஆவீர்கள்.

  ஆகையால் என் அன்பு நெஞ்சங்களே, சொந்தச் சகோதரர்களே, ரத்த பந்தங்களே…… நல்லாட்சி நீடிக்க வேண்டுமா, நீசர்கள் ஆட்சி கவிய வேண்டுமா…… நாம் எடுக்கப் போகும் முடிவு நாசகாரர்களுக்கு கட்டப்படும் முடிவாக இருக்க வேண்டுமே அல்லாது நமக்கு நாமே ஏற்படுத்துக் கொள்ளும் முடிவாக இருக்க கூடாது…. ஏப்ரல் 18 வளர்ச்சி தொடரட்டும், நம் வாழ்க்கை மலரட்டும்.

  – விஸ்வாமித்திரன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,593FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-