spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஇடப்பங்கீடு: காணத் தவறிய உண்மைகளும் கைக்கு எட்டும் தீர்வுகளும்!

இடப்பங்கீடு: காணத் தவறிய உண்மைகளும் கைக்கு எட்டும் தீர்வுகளும்!

- Advertisement -

இந்து ஜாதி அமைப்பு மிகவும் மோசமானது; பிராமணரே அனைத்து தீமைகளுக்கும் காரணம்; கடைநிலை ஜாதியினர் அனைத்துவகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற மூன்று கற்பிதங்களின் அடிப்படையில்தான் இந்திய நவீன சமூகம் உருவாகியிருக்கிற்து. இடப்பங்கீடும் அதன் அடிப்படையிலேயே உருவாக்கி அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

உலகின் பிற பகுதிகளில் உருவான மத அமைப்பானது ஜாதி அமைப்பைவிடப் பெரும் கொடூரங்களை இழைத்த நிலையிலும் நவீன உலகில் அவர்கள் வெகு தந்திரமாக அதையெல்லாம் மறந்துவிட்டார்கள். அந்த வன்முறைகளை உலகை ரட்சிக்கத்தச் செய்த மீட்புச்செயலாகக்கூடச் சொல்வதுண்டு. அப்படியாக, நவீன உலகில் மத வழி சமூகங்களின் தலையும் உடலும் காலும் ஒரே திசையில் நகர்கின்றன. ஜாதி சமூகத்தில் மட்டும் தலை ஒரு திசையைப் பார்க்கவைக்கப்பட்டிருக்கிறது. உடல் வேறு திசையைப் பார்க்கிறது. கால் வேறு திசையைப் பார்க்கிறது. சரியாகச் சொல்வதானால், அந்த மூன்றுமே மேற்குலகை நோக்கி இழுத்துச் செல்லப்படுகின்றன.

அதிகாரப் பகிர்வு என்ற நல்ல அம்சம் பல சிறு அதிகார மையங்களை உருவாக்குவதில் தவறே இல்லை. ஆனால், அவற்றுக்கு இடையே ஒத்திசைவு இருக்கவேண்டும். அதுதான் கடந்தகால இந்து சமூகத்தின் ஆன்மா. அது இன்று சிதைக்கப்பட்டிருக்கிறது.

நாம் முன்னெடுத்திருக்கும் இடப்பங்கீடானது பலவகைகளில் பிழையானது.

முதலாவதாக, அது நம் சமூகத்தின் அறிவு இயக்கத்தை நமக்கான வழியில் நமக்கான தீர்வுகளை முன்னெடுக்கவிடாமல் முடக்கிவிட்டது.

இரண்டாவதாகக் கடைநிலை ஜாதிக்கு உண்மையான வளர்ச்சியைக் கொண்டு சேர்த்திருக்கவில்லை.

இந்த இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பாரம்பரிய அறிவியக்க சக்திகளை ஓரங்கட்டிவிட்டு மேற்கத்திய நகல் சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதால் அவை நம் தேசத்துக்கான தீர்வுகளை முன்வைக்கவில்லை.

விவசாய பூமியான நம் தேசத்தில் நிலச் சீர்திருத்தத்தை பூ தான இயக்கமாக முன்னெடுத்த வினோபாவே ஓரங்கட்டப்பட்டு பெரிய அணைகள், வேதி உரங்கள், பூச்சிக் கொல்லிகள் என முன்னெடுக்கப்பட்டதால் உற்பத்தி பெருகியது. ஏற்றுமதி அதிகரித்தது. ஆனால், வறுமை ஒழியவில்லை. இடைநிலை பண்ணையார்கள் பெரு வளர்ச்சிபெற்றார்கள். விவசாய கூலித் தொழிலாளர்கள் (கடைநிலை ஜாதியினர்) உரிய வளர்ச்சிபெறாமல் போனார்கள். நின்ற இடத்திலேயே ஓடுவதுபோல் நம் சமூகம் ஆகிவிட்டது. ஒரு வெல்லக்கட்டியை மூன்று எறும்புகள் மூன்று திசையில் முழு சக்தியையும் கொடுத்து இழுப்பதுபோல் ஆகிவிட்டது.

அடுத்ததாக, பட்டியல் ஜாதி என்ற பிரிவுக்குள் கொண்டுவந்திருக்கும் ஜாதிகள் அனைத்தும் ஒரே தன்மை கொண்டவை அல்ல. சக்கிலியர், தோட்டி, வெட்டியார், வண்ணார் போன்ற விவசாயம் சாரா பட்டியல் ஜாதியினரே ஆகக் கடைசியில் இருப்பவர்கள். பட்டியல் ஜாதிக்கான பங்கீட்டில் முன்னுரிமை பெறவேண்டிய இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஓரங்கட்டப்பட்டுவருகிறார்கள்.

தமிழகத்தில் நடந்த ஜாதி எதிர்ப்புப் போராட்டங்கள் இடைநிலை ஜாதிகளின் மேலாதிக்கத்துக்கு வழிவகுத்ததுபோலவே பட்டியல் ஜாதியின் இடப்பங்கீடானது அதில் இருக்கும் மேலடுக்கு ஜாதிகளின் மேலாதிக்கத்துக்கே வழிவகுத்திருக்கிறது.

மனித மலத்தை மனிதர்களே அள்ளுவதுதான் மிகப் பெரிய ஒடுக்குமுறை. அந்த ஜாதியினர்தான் இடப்பங்கீட்டின் முழு முன்னுரிமையையும் பெற்றிருக்கவேண்டும். ஆனால், இந்து சமூகத்தை இப்போதும் அவமானப்படுத்த உதவும் என்பதால் அந்த இழிவு இன்றும் அப்படியே போற்றிப் பாதுகாக்கப்பட்டுவருகிறது. எல்லாவற்றுக்கும் மனுதான் காரணம் என்ற ஒற்றை பதிலே மேற்கத்தியர்களால் சொல்லித் தரப்பட்டதால் அதுவே இன்றும் முழங்கப்பட்டுவருகிறது. ஒரு இழிவை விமர்சித்துப் பற்றிப் பேசிவிட்டால் அது சார்ந்த நம் கடமை, பொறுப்பு, பழி எல்லாம் முடிந்துவிடும் அல்லவா.

அடுத்ததாக, இடப் பங்கீடு மூலம் பொருளாதார வலிமை பெற்றுவிட்ட பட்டியல் ஜாதியினர் சமூக அந்தஸ்தும் கிடைக்க முதலில் செய்ய வேண்டிய செயல் தன் குழந்தைகளைப் பொதுப் பிரிவுக்குக் கொண்டுசெல்வதும் சக பட்டியல் ஜாதிக்காரருக்கு அந்த இடப்பங்கீட்டின் பலன் கிடைக்க வழிசெய்வதுமே. ஒரு வீட்டில் ஒருவருக்கு மூன்று வேளை வயிறார உணவு கிடைக்கிறது. இன்னொருவர் பட்டினியில் இருக்கிறார் என்றால் முதலாமவர் பட்டினியில் கிடைப்பவருக்கு மூன்று வேளை உணவு கிடைக்க உதவவேண்டுமே தவிர வடை பாயாசத்தோடு தினமும் உண்பது தான் என் லட்சியம், என் உரிமை என்று சொல்லக்கூடாது என்ற எளிய பொறுப்பு உணர்வுகூடக் கற்றுக்கொள்ளப்படவில்லை.

சமூக அந்தஸ்து கிடைக்காமல் ஒடுக்கப்பட்டோம். அது கிடைக்கும்வரை பொருளாதார நிலையில் மேம்பட்டாலும் இடப் பங்கீட்டுச் சலுகையையை அனுபவிப்போம் என்றவாதம் மிக மிகத் தவறானது. சமூக மரியாதை என்பது ஐயங்கார்களிடம் ஐயர்களுக்கே கிடைப்பதில்லை. ஏன் ஒரு கலை ஐய்யங்கார்களிடம் இன்னொரு கலை ஐயங்கார்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை. ஒரு பட்டியல் ஜாதியினருக்கு இன்னொரு பட்டியல் ஜாதியினரிடம் கிடைப்பதில்லை. பெந்தேகோஸ்தேவுக்கு ரோமன் கத்தோலிக்கரிடம் கிடைப்பதில்லை. ஷியாவுக்கு சன்னியிடம் கிடைப்பதில்லை. எனவே பட்டியல் ஜாதியினர் தமக்கு ஒட்டு மொத்த சமூகத்தின் மரியாதை கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஒரு நிபந்தனையாக வைப்பது சரியல்ல. நீங்கள் மதிக்காவிட்டாலும் நாங்கள் உயர்ந்தவர்களே என்ற எண்ணமே அவசியம். சாத்தியம். அதுபோல், கலப்புத் திருமணம் தான் சமூக அங்கீகாரத்துக்கான ஒரே வழிமுறை என்ற வாதமும் சரியல்ல. சில உரிமைகள் கிடைக்காமல் இருப்பதென்பது எந்தவகையிலும் இழிவே அல்ல.

அனைவருக்கும் கல்வி என்பதைவிட கல்வியின் பலன் அனைவருக்கும் என்பதையே நம் இடப்பங்கீடு இலக்காகக் கொண்டிருக்கவேண்டும். திறமைக்கு மட்டுமே மரியாதை என்று வைத்தால் மருத்துவக் கல்லூரியில் பெரும்பான்மையான இடங்களை பிராமணர்களே பிடித்துவிடுவார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்போது என்ன செய்யவேண்டுமென்றால் அந்த அனைத்து பிராமண மருத்துவர்களையும் அரசு மருத்துவமனையில் மட்டுமே பணியும்படி சட்டம் இயற்றியிருக்கவேண்டும். அதாவது சமூகத்தின் பிற ஜாதியினருக்கு அவர்கள் தரமான சிகிச்சையை இலவசமாகவே தந்தாகவேண்டும். அரசு அவர்களுடைய சேவைக்கு உரிய சன்மானம் தரும் என்று சீர்திருத்தியிருக்கவேண்டும்..

காந்தியவாதம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் முன்னேறிய வகுப்பினரில் இருந்து பலர் ஹரிஜன சேவையில் ஈடுபட்டனர். அரசனையும் வைசியரையும் உலகை வெல்ல வழிநடத்தாமல், தர்மத்தின்வழி செல்லும்படி வழிநடத்திய இந்து ஆன்மிகத்தின் நீட்சியான அந்த வழியிலேயே நடந்திருந்தால் அதுவே வளமான வலுவான அனைவருடைய நலனையும் கருத்தில் கொண்ட நவீன இந்தியாவை உருவாக்கியிருக்கும்.

நம் சமூக நீதிக் கோட்பாடானது அனைத்து ஜாதியினருக்கும் டாக்டராவதற்கு சம வசதி வாய்ப்பு தந்தால்தான் அனைத்து ஜாதியினருக்கும் தரமான சிகிச்சை கிடைக்கும் என்று நம்பிச் செயல்படுகிறது. விளைவு என்ன..? திறமையும் புத்திகூர்மையும் கொண்ட மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை, நகர மருத்துவமனை, அயல்நாடு என போய்கொண்டிருக்கிறார்கள். கடைநிலை ஜாதியில் இருந்து மருத்துவம் படித்து மேலே வருபவர்களும் இதையே செய்கிறார்கள். இது சமூக நீதி அல்ல.

அகல உழுவதைவிட ஆழ உழுவதே நல்லது; ஆயிரம் பேருக்குக் கல்வி கொடுக்கும் நோக்கில் 100 சுமாரான ஆசிரியர்களை உருவாக்குவதைவிட 100 பேருக்குத் தரமான கல்வி கொடுக்கும் சிறந்த பத்து ஆசிரியர்களை உருவாக்குவதே நல்லது.

ஒரு பயிற்சியாளர் தனது மாணவர்களில் சராசரிக்கும் மேலான திறமை கொண்டவர்களைக் கூடுதல் கவனம் கொடுத்து அதைவிட உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்வதையே விரும்புவார். அதுவே சரியான செயல்.

1857களில் இருந்தே பிரிட்டிஷார் பின்பற்றிவந்த அணுகுமுறை என்ன தெரியுமா? பிரிவினை நோக்கில்தான் என்றாலும் அனைத்து தரப்பினரின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று அவர்கள் விரும்பிய அதேநேரம் தரத்தில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை. பிரிட்டிஷ் காலகட்ட இந்திய சாதனைகளில் பெரும்பாலானவை இந்த அணுகுமுறையால் வந்தவையே.

பிரிட்டிஷ் காலகட்டத்தில் அரசு வேலைகளில் பிராமணர்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருந்ததைப் பார்த்து ஆங்கிலேயர்களில் சிலரும் அவர்களால் வழிநடத்தப்பட்ட இந்தியர்களில் பலரும் இட ஒதுக்கீட்டை அப்போதே அமல்படுத்தச் சொல்லிப் போராடியிருக்கிறார்கள். ஆனால், பிரிட்டிஷார் கடைசி வரையிலும் தரத்தில் எந்தவித சமரசத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. தேர்வுகள் வைத்துத்தான் தேர்ந்தெடுக்கிறோம். அதில் பிராமணர்களே அதிகம் வெல்கிறார்கள் என்றால் அதற்காக அவர்களைவிடத் திறமை குறைந்தவர்களைப் பதவிக்கு நியமிக்க முடியாது என்று பிரிட்டிஷ் அரசு அழுத்தம் திருத்தமாகப் பல முறை தெரிவித்துவிட்டிருக்கிறது.

இடப்பங்கீடு முழுமையாக அமலில் இருக்கும் அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மின்வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு தொலைக்காட்சி போன்றவை ஊழல் தொடங்கி செய் நேர்த்தியின்மை வரை பல குறைபாடுகளால் நிரம்பிவழிகின்றன. அதே துறைகளில் ஈடுபடும் தனியார் அமைப்புகள் லாபகரமாகவும் தரமானவையாகவும் மக்களால் விரும்பி வரவேற்கப்படுபவையாகவும் இருக்கின்றன. அரசுத் துறைகளுக்கு மிக அதிக அளவிலான மக்களுக்கு சேவை செய்தாகவேண்டிய கடமை இருப்பதால் செய் நேர்த்தி குறைகிறது என்பது மிகவும் நியாயமான வாதமே.

100 நோயாளிகளை ஒரே நாளில் பார்க்க நேரும் அரசு மருத்துவரையும் பத்து நோயாளிகளை மட்டுமே பார்க்கும் தனியார் மருத்துவரையும் ஒப்பிடுவது நிச்சயம் தவறுதான். தனியார் வசம் அரசு நிறுவனங்களை ஒப்படைத்தாலும் இடப் பங்கீட்டை விலக்கினாலும் இந்தப் பிரச்னை தீராது. இதற்கான தீர்வு கூடுதல் அரசு நிறுவனங்களை ஆரம்பித்திருப்பதுதானே அல்லாமல் தனியாரிடம் பொறுப்பை ஒப்படைத்தது அல்ல. தனியார் நிறுவனங்கள் வர்க்கரீதியாக மேல் நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சேவை செய்யும். அரசு நிறுவனங்களே சமூகப் பொறுப்புணர்வுடன் நலிவடைந்தவர்களுக்குச் சேவை செய்யும்.

கூடுதல் அரசுப் பள்ளிகள், கூடுதல் மருத்துவமனைகள் கட்டுவதற்கு நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம், சிரமதானம் போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தியிருந்தால் செலவு கணிசமாகக் குறைந்திருக்கும்.

அறுபது வயதுக்கு மேலான எத்தனையோ ஆரோக்கியமான இளைஞர்களை பள்ளிகளில் ஆசிரியர் பணி அல்லது ஆசிரியர்களுடைய பேப்பர் திருத்துதல், ஹோம் வொர்க் திருத்துதல், சார்ட்கள் தயாரித்தல் போன்ற பணிகளுக்கு உதவுதல் எனப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். இளைய தலைமுறையிலும் எத்தனையோ பேரை இதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும். இதன் மூலம் ஆசிரியர்கள் கூடுதல் மாணவர்களுக்கு பாடம் எடுக்க முடிந்திருக்கும். உழைக்க ஆட்கள் தயார். எப்படிப் பயன்படுத்துவதென்பதுதான் நமக்குத் தெரியவில்லை.

சம வசதி வாய்ப்புகளைத் தருகிறேன் என்ற பெயரில் இன்றைய சமூகத்தில் வர்க்கரீதியான பாரபட்சமே நிலவுகிறது. சமூக அந்தஸ்துரீதியாக முன்னேறிய சமூகமே பொருளாதாரரீதியாகவும் முன்னேறியிருப்பதால், இன்றைய சமூக நிலை என்பது நேற்றைய ஜாதி சமூகத்தைவிட இடைவெளி அதிகமானதாகவே இருக்கிறது. நேற்றைய பிரச்னையான ஜாதிய ஏற்றத்தாழ்வுக்கான தீர்வானது இன்றைய பிரச்னையான வர்க்கப் பிரச்னையைத் தீர்க்கப் போதுமானதாக இல்லை.

தரமான கல்வி, தரமான மருத்துவம் தருவதென்பது இன்றைய இணைய தகவல் தொழில்நுட்ப உலகில் மிக மிக எளிது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரே ஒரு பி.எட். பட்டதாரி மாணவரும் இணைய சேவையும் இருந்தால் போதும். பத்தாம் வகுப்புவரையான கல்வியை அந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் அவர் ஒருவரே தந்துவிட முடியும்.

ஒரு நகர்ப்புற மருத்துவர் தனது கணினி முன்னால் அமர்ந்துகொண்டு குக்கிராமத்தில் இருக்கும் நோயாளிக்கு சிகிச்சை தந்துவிடமுடியும். நர்ஸ், ஃபார்மசிஸ்ட் போன்ற துறைகளில் பட்டம் பெற்ற ஒருவர் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தால் போதும். நகர்ப்புற மருத்துவர் நாளொன்றுக்கு ஓரிரு மணிநேரம் கிராமங்களுக்கான சேவையைத் தந்தாலே போதும். காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி போன்ற எளிய பெரும்பான்மையான நோய்களுக்கு சித்த, ஆயுர்வேத மருத்துவத்தையும் வரும் முன் காக்கும் வழிமுறைகளையும் கொண்டுசெல்வது மிகவும் நல்லது. எளிது.

அறிவினான் ஆவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை என்ற கல்வியின் அடிப்படை நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு கல்வியும் மருத்துவமும் சுய லாப வணிகமாக ஆக்கப்பட்ட சமூகத்தில் அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செய்யப்படும் எல்லா மாற்றங்களும் வளர்ச்சிகளும் முன்னேற்றங்களும் வீணே.

வேலைக்கு உத்தரவாதம் தராத கல்வி வெறும் கண் துடைப்பே. அனைவருக்கும் ஒரேவிதமான வசதி வாய்ப்புகளைத் தருகிறேன். அவரவர் திறமைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற கோட்பாடு அடிப்படையில் பிழையானது. நடைமுறையில் அனைவருக்கும் ஒரே வசதி வாய்ப்பைத் தராதது அயோக்கியத்தனமானது.

அரசுநிறுவனங்களின் சமூக அக்கறை, பொறுப்பு உணர்வு, லாப நோக்கமற்ற சேவை, தனியார் நிறுவனங்களின் செய் நேர்த்தி இவையே நமக்குத் தேவை.

அந்தவகையில் நம் நாட்டுக்கான எளிய தீர்வு தரம் குறைந்த அரசு நிறுவனம் அல்ல; சுய லாப நோக்கம் கொண்ட தனியார் அமைப்பும் அல்ல; அரசு சாரா சேவை அமைப்பே இதற்கான தீர்வு.

என்.ஜி.ஓ. என்றாலே பயப்படும் நிலை உருவாகக் காரணம், கிறிஸ்தவ உள் நோக்கம் கொண்ட என்.ஜி.ஓ.க்களின் பெருக்கமே. மலின அரசியல் நோக்கங்களுடன் செய்யப்படும் சேவைகள் மிகவும் கேவலமானவை.

கல்வி சார்ந்தும் மருத்துவம் சார்ந்தும் பிற எந்தவொரு விஷயம் சார்ந்தும் இந்திய என்.ஜி.ஓ.க்கள் இந்திய பாரம்பரிய வழியில் பெருமளவில் உருவாவதே நமக்கான தீர்வாக இருக்கும்.

அரசு நிறுவனங்களுக்கு அரசு செலவிடும் தொகையை இந்தியப் பெருமிதம் கொண்ட நிறுவனங்களுக்கு இந்திய தேச பக்தி கொண்ட நிறுவனங்களுக்கு இந்திய மக்கள் மீது அக்கறை கொண்ட சமூக சேவகர்களுக்குக் கொடுப்பதே நம் முன் இருக்கும் பிரச்னைகளுக்கான தீர்வாக இருக்கும்.

  • கட்டுரை: பி.ஆர்.மகாதேவன்

1 COMMENT

  1. நல்ல பதிவு அருமையான சிந்தனை . பாராட்டுக்கள் பல மேலும் இது போல தைரியமாக எழுதுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe