ஜூன்-12: உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்!

பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
world child labour
world child labour

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12ம் தேதி உலக அளவில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. மக்களுக்கு இது குறித்து புரிதல் ஏற்படுத்துவதற்காக ஐநா சபையும் உலக தொழிலாளர் அமைப்பும் ஒன்றிணைந்து இந்த தினத்தை 2002ல் ஏற்படுத்தினர்.

அனைத்து வயதிலும் உள்ள குழந்தை தொழிலாளர்களுக்கும் சிறப்பான இலவசக் கல்வியை அளிப்பதும் அவர்களை குழந்தை தொழிலாளர்களாக யாரும் பயன்படுத்தாமல் பாதுகாப்பதும் இதன் இலக்கு.

குழந்தை தொழிலாளர்கள் உருவாவதற்கு மிகப்பெரிய காரணம் ஏழ்மையே அதோடுகூட பெற்றோரின் புரிதல் இன்மையால் குழந்தைகள் படிக்க வேண்டிய வயதில் வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். விவசாயப் பணிகளில் பெற்றோருக்கு உதவியாக செல்லும் குழந்தைகள் உள்ளனர்.

அத்துடன், தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் ஹோட்டல்களிலும் பிற பணிகளிலும் பெற்றோருக்கு பொருளாதார உதவி செய்வதற்காக வேலையில் ஈடுபடுகின்றனர். அதோடு சில பெற்றோரும் குழந்தைகள் பணிபுரிந்தால் தமக்கு பொருளாதார உதவியாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தாற்காலிக நலனுக்காக குழந்தைகளின் எதிர்காலத்தை பாழ் செய்கிறார்கள் என்று உணர்வதில்லை.

படிக்க வேண்டிய வயதில் படிப்பதற்கும் விளையாடுவதற்கும் பெற்றோர் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் நாள் வரும்போது குழந்தை தொழிலாளர்கள் உருவாக மாட்டார்கள். முழுவதாக இந்த பிரச்சனையை நாம் தீர்க்க முடியும்.

இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இது குறித்து எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அது மீறப்படுவதாக உள்ளது. இந்தியாவில் அரசியலமைப்பின் 24 வது பிரிவோடு கூட தொழிற்சாலை ஆக்ட் 1948, சைல்ட் லேபர் ஆக்ட் 1986, ஜுவிலியன் ஜஸ்டிஸ் ஆக்ட் 2000, சில்ட்ரன் கம்பல்சரி எஜுகேஷன் ஆக்ட் 2009 போன்ற சட்டங்கள் பல உள்ளன.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு குறித்து கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் பல உள்ளன. குழந்தை தொழிலாளர்கள் குறித்து ஒவ்வொருவருக்கும் புரிதல் இருக்கவேண்டும். பணியில் அமர்த்துவர்கள், அவர்களின் உழைப்பை பயன்படுத்துபவர்கள்… என்று ஒவ்வொருவரும் இது சட்டப்படி குற்றம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

சமுதாயத்தில் மாற்றம் வரும்படி ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். நிறுவனங்கள் ஹோட்டல்கள் கடைகள் போன்றவற்றில் குழந்தை தொழிலாளர்களை நியமிக்காமல் இருக்க வேண்டும். அதோடு நம் வீடுகளிலும் பணிபுரிவதற்கு குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது.

நம் சுற்றுப்புறத்தில் இதுபோன்ற குழந்தை தொழிலாளர்கள் தென்பட்டால் அவருடைய பெற்றோருக்கு எடுத்துச்சொல்லி அந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அதற்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட பெற்றோருக்கு மேலும் பொருளாதார உதவி கிடைக்கும் படியான வழிகளைக் காட்ட வேண்டும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு யுனிசெப் கணக்குப்படி குழந்தை தொழிலாளர்கள் 160 மில்லியன் அதிகரித்திருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. இது மிகவும் கவலையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

தற்போது கொரோனா காலத்தில் பெற்றோருக்கு வேலை இல்லாமையால் பெருமளவில் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறும் ஆபத்தான சூழ்நிலை தெரிகிறது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

பிள்ளைகளை வேலையில் அமர்த்தினால் அது சட்டப்படி குற்றம் என்பதை உணர்ந்து பொதுமக்கள் குழந்தை தொழிலாளர்கள் எங்கு தென்பட்டாலும் 1098, 100, 181 ஆகிய டோல் ஃபிரீ நம்பர்களுக்கு போன் செய்து அறிவிக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவிக்கின்றது.

குழந்தைகளை பணியில் அமர்த்தினால் கடினமான தண்டனை விதிக்கும் சட்டங்கள் உள்ளன. அதோடு இந்தப் பொறுப்பு பொதுமக்கள் அனைவரதும் கூட. குழந்தைகளின் உரிமையை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் சட்டம் இயற்றினாலும் அதற்கு நாம் அனைவரும் முன்வந்து உதவ வேண்டும்.

குழந்தைகளிடமிருந்து இளமையையும் அவர்களின் தன்மானத்தையும் திருடுவதை தடுக்கும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு சட்டங்களை பொருளாதார பிரச்சனை செல்லாமல் செய்துவிடுவது போலுள்ளது. இது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஆபத்தானது என்று உலக குழந்தை தொழிலாளர் அமைப்பு ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பல குடும்பங்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டதால் பள்ளிகளை விட்டு நீங்கிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற வருத்தத்தை ஐஎல்ஓ வெளிப்படுத்தியது.

தற்போது 5 லிருந்து 15 வயதுக்கு உட்பட்ட வயதிலுள்ள 15.2 கோடி குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உழைத்து வருவதாக சில கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் உடல்நலம் நலிந்து ஆபத்தான நிலையில் உள்ளார்கள்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

2025ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர்கள் அமைப்பை முழுவதுமாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.

நாம் சாலையில் பயணிக்கும் போது சிறு குழந்தைகள் ஏதேதோ சாமான்களை விற்றபடி சாலையை கடந்து நம் வாகனங்களின் அருகில் ஓடி வருவதைப் பார்க்கிறோம்.

கட்டடங்கள் கட்டும் இடங்களிலும் ஹோட்டல்களில் மேஜை துடைப்பதையும் நாம் கவனிக்கிறோம். அவர்கள் கல்வி கற்று விளையாடி தம் இளமைக்குரிய வகையில் வாழவேண்டிய பிஞ்சுகள். அத்தகைய குழந்தைகளின் உரிமையை காப்பாற்றும் விதமாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் மக்களுக்கு இதுகுறித்து எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.