சேமியா – சோயா க்ரேவி
தேவையானவை:
சோயா உருண்டைகள் – 10,
வேக வைத்த சேமியா – கால் கப்,
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று (அரைத்துக் கொள்ளவும்), வெங்காயம் – ஒன்று, (பொடியாக நறுக்கியது)
பட்டை – சிறிய துண்டு,
கிராம்பு – 2,
ஏலம், பிரிஞ்சி இலை – தலா ஒன்று,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்,
நறுக்கிய புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
கொதிநீரில் சோயா உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் வைத்து, பிறகு அவற்றை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் போட்டு பிழிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு இஞ்சி-பூண்டு விழுது, அரைத்த தக்காளி, வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறி தண்ணீர் விட்டு சூடாக்கவும். லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் சோயா உருண்டை, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும், வேகவைத்த சேமியா, புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும். இது, பூரி மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்!