நெல்லி அள்ளித் தரும் அற்புத பலன்கள்!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
amla - 2026

நெல்லிக்கனியில் உள்ள மருத்துவக் குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்று கூறுவதுண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது.

பச்சை நெல்லிக்காய், துளசி, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய்,கறிவேப்பிலை ஆகியவற்றைச் சமவிகிதத்தில் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி, அதைவிட மூன்று மடங்கு அதிகமான அளவுக்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும். இதை தினமும் கேசத்தில் தடவிவந்தால், முடி உதிர்வை தடுக்கும்.

நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.

நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்.

நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கொட்டை நீக்கப்பட்ட நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துப் பருகலாம்.

நரை முடி இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு பெரும் தொல்லை தரும் விஷயமாக ஆகிவிட்டது. உடல்ரீதியாக பிரச்னை எதையும் இது தராது என்றாலும், மனதளவில் சிறு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு ஒரு வழி உண்டு. நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.

தினமும் ஓர் நெல்லிக்கனி எனச் சாப்பிட்டு எளிதாக சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றுள்ளனர். நாமும் நெல்லிக்கனியை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.

உடம்பில் உண்டாகும் வெட்டைச் சுட்டினால் கன்னம் குழி விழுந்து ஒட்டிப் போய், தேகம் வறண்டு, நடை தளர்ந்து நாணலாகிப் போன இளைஞர்கள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் இருபது வயதில் அறுபதை எட்டியவர்கள். இவர்கள் மன்மத அழகுடன் வலம் வர நெல்லிக் கனியைச் சரணடைவதே மிகவும் நல்லது.

நெல்லிக்காயை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு வரவும். அல்லது நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயை துவையல், சட்னி சூப் போன்ற ஏதேனும் ஒரு முறையில் தினசரி சாப்பிட்டு வரலாம்.

இதற்கெல்லாம் நேரமில்லாவிட்டால், நேரே ஆயுர்வேத மருந்து விற்பனைக் கூடத்திற்குச் சென்று, உலகப் பிரசித்தி பெற்ற ‘சயவனபிராச லேகியம்’ அல்லது ‘நெல்லிக்காய் லேகியம்’ எனக் கேட்டு வாங்குங்கள். இதனை தினசரி அதிகாலை, மாலை வருடக் கணக்கில் சாப்பிட்டு வாருங்கள். எண்ணற்ற பலன்களை இந்த ஒரே மருந்தினால் நீங்கள் பெறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.