
உலக ஆரோக்கிய தினம் இன்று!
ஆரோக்கிய வாழ்வியல்!
- ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
உடல் ஆரோக்கியத்தை போன்ற விலைமதிப்பற்ற சொத்து ஒருவருக்கு இல்லை- என்பது நாம் அறிந்ததே.
ஒருவர் தன் வாழ்வியலின் மூலமாக ஆரோக்கியத்தை கொடையாகவே பெற முடியும் என நம் முன்னோர்களே நமக்கு முன்னோடிகளாய் இருந்துள்ளனர்.
உண்ணும் உணவு, முறையான உடற்பயிற்சி, முடிந்த உழைப்பு, தேவையான ஓய்வு, அளவான உறக்கம்- இவை அனைத்தும் வளமான வாழ்வின் அஸ்திவாரங்களாய் உள்ளதை நாம் அறிகிறோம்.
‘உழைக்காத உடம்பு ஒரு உளுத்துப்போன உலக்கை’ – என்ற வாசமே உழைப்பின் மகிமையை நமக்கு உணர்த்துகிறது.
உண்ணும் உண்வே சிறந்த மருந்தாகும். உணவு தயாரிக்கும் முறையிலிருந்து, பரிமாறப்படும் முறையிலும், உண்ணும் முறையிலும் ஒரு பாங்கு இருந்தால் தால் உண்ட உணவு செறிக்கிறது. உணவு செறித்தால் தான் ஆரோக்கியம் என அறியப்படுகிறது.
சாப்பிடும்போது தண்ணீரைத் தடை செய்தும், மென்று விழுங்கியும் உண்பதின் பயனை நம் முதல் தலைமுறையினர் நமக்கு வலியுறுத்தினர்.
முடிந்த உடற்பயிற்சியை செய்வதே உடம்புக்கான ஒரு கவசமாகிறது. இளங்காலை வெயிலும் உடலுக்கு சக்தியாகிறது. தேவையான ஓய்வு, அளவான தூக்கம் புத்துணர்ச்சி அளிக்கிறது.
இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவே தீர்வாய் உள்ளது. நாம் வாழும் பிரதேசங்களில் கிடைக்கும் பிராந்திய உணவை உட்கொள்வதே உடலுக்கு நல்லது என்கின்றனர், உணவு ஆராய்ச்சியாளர்கள்.
சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது. அவ்வாறே உடல் ஆரோக்கியத்திற்கு மனநலமும் பெரும் பங்காற்றுவதாக மனநல அறிஞர்கள் கூறுகின்றனர். ஆதலால், மரங்கள் எவ்வாறு காய்ந்த இலைகளை உதிர்த்து விடுகின்றனவோ, அவ்வாறே நாமும் நமக்கு வேண்டாத எண்ணங்களை மனதிலிருந்து விட்டொழித்து ஆரோக்கிய வாழ்வியலை நாடும் நேரமிது.