
நாம் எல்லோரும் பயன்படுத்தும் ஓர் பொருள் ஓமம் ஆகும். நம் பாரம்பரிய மருத்துவத்தில் ஓமம் ஒரு சிறப்பான மூலிகையாகும்.
நம் வீடுகளில் குழந்தைகள் பிறந்தால் ஓமநீர் உள்ளுக்கு தருவார்கள் அது குழந்தைகளின் வாயு உபாதை, செரியாமை பசியின்மை போன்றவைகளை உடனடியாக சரிசெய்யும்.
இப்படிப்பட்ட ஓமம் நம் இல்லத்தில் இருக்கும் ஓர் அற்புத முதலுதவி மருத்துவர். பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை ஓமத்தை பயன் படுத்தலாம்.
இந்தியாவின் மலைப்பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள தாவரம். விதைகள் ஓமம் எனப்படுகின்றன. இவையே மருத்துவத்தில் பயன்படுபவை. இவை காரச்சுவையுடன் கூடியதாகும். மேலும், ஒரு வித சிறப்பு வாய்ந்த நறுமணமும் இதற்கு உண்டு.
ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.
உணவின் சுவையைக் கூட்டவும் ஓமம் பயன்படுகின்றது. நாட்டு மருந்து கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் ஓமம் கிடைக்கும்.
அகத்தியர் பாடல்:
சீதசுரங் காசஞ் செரியாமந் தப்பொருமல்
பேதியிரைச் சல்கடுப்பு பேராமம்-ஓதிருமல்
பல்லொடுபல் மூலம் பகமிவைநோ யென்செயுமோ?
சொல்லொடுபோம் ஓமமெனச் சொல்
-அகத்தியர் குணபாடம்
அதாவது சீதளத்தால் ஏற்படும் ஜுரம், சளி, இருமல், வயிறு சம்மந்தமான நோய்கள், குடல் இரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள் போன்றவை ஓமம் மூலம் சரி செய்ய முடியும் என்று அகத்திய பெருமான் கூறுகிறார்.
மருந்துவப்பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :
குறிப்பு: இந்தப் பகுதியில் ஓமம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது அனைத்தும் ஓமச் செடியிலிருந்து பெறப்படும் விதைகளையே குறிக்கும்.
ஓமம் கார்ப்புச்சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டது. பசியைத் தூண்டும், வாயுவை அகற்றும், அழுகலகற்றும், வெப்ப முண்டாக்கும், உடலை பலமாக்கும், உமிழ்நீரைப்பெருக்கும், ஓமத்தை உணவில் சேர்த்துக்கொண்டுவர, அஜீரணம், வயிற்று உப்புசம், அதிசாரம், சீத பேதி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஓமம் குழந்தை மருத்துவத்திலும் முக்கிய இடம் வகிக்கின்றது. முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு தொடர்பான நோய்களுக்கு மிகவும் பயன்படுகின்றது.
சளி ஓழுகுதல், மூக்கடைப்பு குணமாக :
ஓமத்தை இலேசாக வறுத்து, இடித்துதூள் செய்து கொள்ள வேண்டும். 5 கிராம் அளவு தூளுடன், சிறிதளவு பச்சைக்கற்பூரப்பொடியுடன் கலக்குமளவிற்கு நன்றாக நசுக்கி பந்து போலத் துணியில் கட்டி, மூக்கால் நுகர வேண்டும்.
அதே போல ஓமப்பொடியை உச்சந்தலையில் தேய்த்தால் ஜலதோஷம் பறந்தோடும்.
வாயு உபாதை குணமாக :
ஓமத்தை வறுத்து, பொடியாக்கி வைத்துக் கொண்டு தேக்கரண்டி அளவு, வெந்நீரில், இரவில் உட்கொள்ள வேண்டும்.
வயிறு மந்தம் குணமாக :
ஓமம், சுக்கு, கடுக்காய்த்தோல் இவற்றைச் சம அளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, சலித்து வைத்துக்கொண்டு, 1/2 தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும்.
வயிறு மந்தமாக இருந்தால் ஜீரணம் சரியாக இருக்காது அதோடு பசியும் எடுக்காது. வயிறு மந்தத்தை போக்க சித்திரமூல வேர்ப்பட்டை, சுக்கு, ஓமம் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து பொடி செய்துகொள்ள வேண்டும். அந்த பொடியில் கடுக்காய் பொடியை கலக்க வேண்டும். எப்போதெல்லாம் வயிறு மந்தம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த பொடியை சிறிதளவு எடுத்து மோரில் கலந்து குடித்தால் வயிறில் ஏற்பட்ட மந்தம் நீங்கும்.
ஓமம் மற்றும் பெருஞ்சீரகத்தை கொத்தமல்லி சாறில் ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, சாப்பிடுவதற்கு முன்பு இந்த பொடியை தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால் ஜீரண சக்தி நன்கு அதிகரிக்கும். அதோடு நன்றாக பசி எடுக்கும்.
வீக்கம் கரைய :
ஓமத்தை, தேவையான அளவு நீர்விட்டு, பசை போல அரைத்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி, களிம்புபோலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட வேண்டும்.
வயிற்றுக்கடுப்பு, கழிச்சல் தீர :
ஓமம், மிளகு, வெல்லம் இவை ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து, நன்றாக இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை வேளைகளில், 10 நாட்களுக்கு, வேளைக்கு 1.2 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவர வேண்டும்.
வயிற்றுவலி குணமாக :
ஓமத்தைச் சிறிது நீர்விட்டு அரைத்து, பசை போலச் செய்து, வயிற்றின் மீது பற்றுப் போடவேண்டும்.
பசி எடுப்பதில் கோளாறு இருக்கும். அப்படி இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை ஸ்பூன் ஓமத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் பசியின்மை நீங்கும். அதோடு தினம் ஓமத்தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் வராது என்று கூறப்படுகிறது.
வயிற்றில் ஏதாவது கோளாறு இருந்தாலோ, வயிறில் அடிக்கடி சத்தம் வந்தாலோ, ஓமத்தையும் சீரகத்தையும் தீயாதபடி வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொண்டு தினமும் சாப்பிட்ட பிறகு இருவது நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிறு கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் தீரும்.
ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். உடல் தேறாமல் இருப்பவர்கள் இந்த ஓம நீரை குடித்து வந்தால் உடல் பலமாகும்.

புகைச்சல் இருமல் நீங்க
சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .
ஓமம் – 252 கிராம்
ஆடாதோடைச் சாறு – 136 கிராம்
இஞ்சி ரசம் – 136 கிராம்
பழரசம் – 136 கிராம்
புதினாசாறு – 136 கிராம்
இந்துப்பு – 34 கிராம்
சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.
நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும்.
மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம்.
பல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.
வயிறு “கடமுடா” வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.
ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.
ஓமம், சுக்கு, கருப்பட்டி சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர சாதாரண காய்ச்சல் குணமாகும்.
ஓமத் தண்ணீர் குழந்தைகளுக்கு ஏற்படும் கோலிக் என்னும் கடும் வயிற்று வலியைக் குணமாக்கும்.
ஆரம்பநிலை ஆஸ்துமாவை ஓமம் குணமாக்கும் ஆற்றல் உள்ளது. மத்திமநிலை ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கும்.
ஓமத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வறுத்து பின்னர் மைய அரைத்து குழம்பு தயாரித்து சாதத்தில் ஊற்றி சாப்பிட்டுவர, தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
ஓமத்துடன் சின்ன வெங்காயம் வைத்து விழுதாக அரைத்து பற்றிட, ஒற்றைத் தலைவலி ஓடிவிடும்.
தொப்பையை குறைக்க
தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.
ஓமம், சீரகம் கலவை வயிற்றுக்கு மருந்து”
ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து ‘மிக்சியில்’ போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிடலாம்.
இடுப்பு வலி நீங்க:
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
குரோசாணி ஓமம் -, இமயமலையில் வளர்கின்ற செடி வகை. மணமிக்கது. பூக்கள் இளமஞ்சள் நிறமானவை. திப்பியம், கார்சவை ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. விதைகள், கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை.
இவை, உறக்க முண்டாக்கும்; நடுக்கத்தைக் குறைக்கும்; சுவாச காசத்தைக் குணமாக்கும்; நுரையீரல் அழற்சியைப் போக்கும். சூதகவாயு, சூதகவலி போன்றவற்றுக்கும் உள்ளுக்குள் கொடுக்கலாம். சிறுநீர்த்தாரையைப் பலப்படுத்தும், பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
அசமதா ஓமம் – விதைகளே மருத்துவத்தில் பயன்படுபவை. சாதாரண ஓமத்தைவிட அதிகமான காரச்சுவை கொண்டது. செரியாமல் மலம் கழிவது, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, வறட்டு இருமல், இரைப்பிருமல், இவைகளைக் குணமாக்கும். சிறுநீரைப் பிரிக்கும்; சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்; பசியைத் தூண்டும்; கல்லீரல், மண்ணீரலை உறுதியாக்கும்.