October 18, 2021, 1:00 pm
More

  ARTICLE - SECTIONS

  செவ்வரளி பூஜைக்கு மட்டுமல்ல புண்களுக்கும் ஏற்றது!

  Nerium
  Nerium

  நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி என இரு வகைகள் உள்ளன. இதன் மலர் மாலைகளைக் கோயில்களில் தெய்வங்களுக்கு மாலையாகப் பயன்படுத்துவதுண்டு.

  திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக அரளிச் செடி இருக்கிறது. செவ்வரளி மலர்கள் இக்கோயில்களில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. சிவத்திருத்தலங்களில் தலமரமாக இருப்பதும் செவ்வரளிதான்.

  சாலைகளில் பலதரப்பட்ட வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் புகைநச்சு, கார்பன் மாசுக்கள் போன்றவை, காற்றை அசுத்தமாக்குவதுடன், சுவாசிப்பவர்களுக்கு, சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். அரளிச் செடிகளின் இலைகள் மற்றும் மலர்கள், காற்றின் மாசுக்களை, கார்பன் துகள்களை காற்றிலிருந்து நீக்கி, காற்றை சுத்தப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. அதன் மூலம், காற்று மாசுக்கள் நீங்கிய சுத்தமான காற்றை, நாம் சுவாசிக்க முடிகிறது.

  காற்றையும் சுவாசத்தையும் நலமாக்கும் வல்லமை நிறைந்தவை. அரளிச் செடிகள். அதனால்தான், நெடுஞ்சாலைகளில், சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில், அரளிச் செடிகளை அதிக அளவில் வளர்க்கின்றனர். மேலும், அரளிச்செடிகள் மண் அரிப்பைத் தடுக்கும் ஆற்றல் மிக்கவை. எனவேதான், சாலைகளின் இருபுறமும், இந்தச் செடிகளை வளர்த்து வருகின்றனர். மேலும் அதிக இரைச்சல் தரும் தொழிற்சாலைகளின் இயந்திர சத்தங்களை கிரகித்துக் கொண்டு, அவற்றின் சத்தத்தை குறைக்கும் ஆற்றல்மிக்கவை அரளிச்செடிகள் என்றால், ஆச்சரியமாகத்தானே இருக்கும்!. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வாகன சத்தத்தையும், குறைக்கும் இயல்புமிக்கவை.

  நம் உள் உறுப்புகளை பலவித நுண்கிருமிகளிலிருந்தும், ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களிடமிருந்தும், கால மாற்றங்களிலிருந்தும் காக்கும் தோலின் உணர் நரம்புகள் செயல்படாமல் போனால் ஆறாத அழுகும் புண்கள் உடல் முழுவதும் தோன்றிவிடும்.

  நமது உடலின் புற அந்தங்களான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள் ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர் நரம்புக்கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர் நரம்புகள் பாதிப்படைந்து விடுகின்றன.

  அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறைய ஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன உணர்ச்சி தோன்றி, ஆறாத புண்களாக மாற ஆரம்பிக்கின்றன.

  சர்க்கரை நோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், தொழுநோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், நரம்புகள், ரத்தக்குழாய்களில் தோன்றும் கிருமித்தொற்று, அடைப்பு காரணமாக விரல்களில் புண்கள் மற்றும் உணர்வற்று படுத்தே கிடப்பதினால் உண்டாகும் படுக்கைப் புண்கள் ஆகியன உண்டாகலாம்.

  மேற்கண்ட நோய்களுக்காக சிகிச்சை பெற்று கட்டுப்பாடுடன் இருந்து வரும் போதிலும், சில நேரங்களில் புண்கள் உண்டாகி, அவை ஆறுவதற்கு பல ஆண்டுகள் ஆவது மட்டுமின்றி, அந்தப் புண்களில் நீர் வடிதல், சீழ் வடிதல் மற்றும் துர்நாற்றம் வீசுதல் ஆகிய துன்பங்கள் ஏற்பட்டு, பிறர் அருகில் வருவதற்கே அருவெறுப்பு அடையும் சூழ்நிலை உண்டாகும்.

  பலவகையான கிருமிகள் இந்த புண்களின் வழியாக உடலின் உள்ளே சென்று, பலவித நோய் களை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு என்பதால், நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்தப் புண்களை குணப்படுத்திவிட வேண்டியது அவசியம். உணர்வற்ற நிலையில் தோன்றும் விரல் புண்கள், படுக்கை புண்கள் ஆகியவற்றை நீக்கி, அழுகலை அகற்றி, புண்களை எளிதில் ஆறச்செய்யும் அற்புத மூலிகை செவ்வரளி.

  வீடுகளில் அழகுக்காக வளர்க்கும் தடிமனான இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும் உடைய இந்தச் செடிகள் நஞ்சுத்தன்மை உடையதால் தற்கொலை முயற்சிக்காக கிராமப்புற மக்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  நீரியம் ஓலியாண்டர் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அப்போசினேசியே குடும்பத்தைச் சார்ந்த செவ்வரளிச் செடியின் வேர், பட்டைகளிலுள்ள அலனின், ஆர்ஜினின், அஸ்பார்திக் அமிலம், சிஸ்டின், குளோட்டமின் அமிலம், டிரிப்டோபேன், டைரோசின் ஆகியன எதிர் நுண்ணுயிரிகளாக செயல்பட்டு, அழுகிய புண்களை ஆறச் செய்கின்றன.

  அரளிப் பட்டையை 35 கிராமளவு எடுத்து, ஒன்றிரண்டாக தட்டி, அரளிப்பட்டை கசாயத்தால் அரைத்து, ஒரே உருண்டையாக உருட்டி 250 மி.லி., நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, பதத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

  இதனை அழுகிய புண்கள் உள்ள இடங்களில் தடவி, பருத்தி துணியால் கட்டி வர விரைவில் ஆறும். படுக்கைப்புண்களில் இந்த தைலத்தை தடவி வரலாம். இது நஞ்சுத்தன்மை உடையதாகையால் உள்ளே சாப்பிடக்கூடாது.

  செவ்வரளி மலர்களை கந்தகத்தில் அரைத்து, அந்தச் சாற்றையும், படுக்கைப்புண்கள் உள்ளிட்ட அழுகிய புண்களில் தடவிவர, புண்களிலுள்ள நச்சுக்கள் நீங்கி, புண்கள் விரைவில் குணமாகி, உடல் நலமாகும்.

  செவ்வரளி செடிகளின் வேர்ப் பட்டையை தூளாக்கி, தக்க மருத்துவ ஆலோசனையில் பேரில் சாப்பிட, நெஞ்சு வலி மாயமாக மறையும். இதய கோளாறு உள்ளவர்களுக்கு செவ்வரளி மலர்கள், அருமருந்தாகிறது.

  கைகால் புண்கள், சேற்றுப்புண்
  அரளி மலர்களை அரைத்து, கைகால் காயங்கள் மற்றும் கால்களின் சேற்றுப்புண்கள் மீது தடவிவர, அவை விரைவில் ஆறிவிடும்.

  தலைவலி
  கடுகு, கேரட்,பீட்ரூட் சேர்ந்த சாற்றில், அரளி மலர்களையும் நெல்லிக்காய்களையும் அரைத்த கலவையை இட்டு, நன்கு கலக்கி அதை நெற்றியில் பற்று போல தடவிவர, தலைவலி விலகிவிடும்.

  பேன் தொல்லை
  தலையில் இருக்கும் பேன் தரும் அரிப்பு நீங்க, இரவில் உறங்கும்போது, தலையில் செவ்வரளிப்பூக்களை வைத்துக்கொண்டு உறங்கிவர, பேன்கள் அழிந்துவிடும்.

  மூல நோய்
  அரளி வேரை நீர்விட்டு அரைத்து, அதை, மூலநோய்க் கட்டிமீது தடவி வர, மூல நோய் குணமாகும்.

  முக அழகு
  செவ்வரளிப்பூக்களை அரைத்து, அதை முகத்தில் தடவி வர, முகப்பருக்கள் நீங்கி, முகம் மிருதுவாகும். முகத்தின் கருமையை நீக்கி, முகத்தை பொலிவாக்கும்.

  மூட்டு வலி
  தற்காலத்தில் எல்லோரையும் பாதிக்கும் பிரச்னையாக இருப்பது, கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கைகால் மூட்டுகளில் ஏற்படும் வலிகள். அதிக நேரம் இருக்கையில் அமர்ந்தே இருப்பது, அதிக நேரம் டூ விலரில் சுற்றிக்கொண்டே இருப்பது போன்ற காரணங்களால், மேற்சொன்ன வலிகள் ஏற்படுகின்றன.

  செவ்வரளிப்பூக்களை நீரிட்டு அரைத்து, அந்த விழுதை, வலியுள்ள கைகால் மூட்டுக்களில் தடவிவர, வலிகள் உடனே, மாயமாக மறைந்துவிடும்.

  விஷக்கடி
  தக்க மருத்துவர்களின் மேற்பார்வையில், அரளிவேர் அல்லது அரளிப்பூக்களை அளித்து, பாதிக்கப் பட்டவர்களை வாந்தியெடுக்க வைத்து, பாம்புக்கடி போன்ற விஷக்கடிகளை குணமாக்கலாம்.

  செவ்வரளியின் பக்கவிளைவுகள்.
  நாம் அரளியின் நற்தன்மைகளை இதுவரை பார்த்தோம். இனி அதன் ஒரிஜினல் குணநலன்களை தெரிந்து கொள்வோம்.

  நச்சுத்தன்மை கொண்ட அரளிச்சாறு, அரளி கொதிநீர் உடலுக்கு விஷமாகி, உயிரை மாய்க்கும் தன்மையுடையது.

  அரளிப்பூக்களின் தேன், பல்வேறு அபாயகரமான பக்கவிளைவுகளை தரக்கூடியது.

  அரளி இலைகள் உடலில் பட்டாலே, சிலருக்கு, உடல் தோல் தடித்து, வீங்கிவிடும்.

  மகவை சுமக்கும் கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பாலூட்டும் அன்னையர், அரளிச்செடியின் அருகில் செல்லக்கூட, பெரியோர் அனுமதிக்கமாட்டார்கள்.

  அரளியின் பக்கவிளைவுகளைத் தவிர்க்க, நாம் செய்யவேண்டியவை.

  பச்சையாக அரளியை உபயோகிக்கக் கூடாது. அரளிப்பூக்களின் சாறு, அதிக நச்சுத்தன்மை மிக்கது. தக்க மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அரளியை, மருந்தாக எடுத்துக்கொள்வது, கடுமையான பக்க விளைவுகளில் இருந்து, காப்பாற்றும். மூலிகை மருத்துவரின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும்.

  செடி முழுவதும் நச்சுத்தன்மைமிக்க அரளியில், நம் உடல் நலத்தைக் காக்கும் தன்மைகள் ஓரளவு நிறைந்திருந்தாலும், நாமாகவே அதை மருந்தாக்கி, தினமும் எடுத்துக் கொள்வதோ, அல்லது அடிக்கடி உபயோகிப்பதோ கூடாது.

  அனுபவமிக்க தேர்ந்த மூலிகை மருத்துவர் அல்லது சித்த மருத்துவரிடம் பரிந்துரை பெற்று, அவர்களின் மேற்பார்வையில், அரளியின் பயன்களை அடைவதே, சாலச்சிறந்தாகும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,562FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-