December 8, 2024, 5:35 AM
25 C
Chennai

திறந்த இல்லம்! அனைவரின் வீடு!

கட்டுரை – ராஜி ரகுநாதன்​,​ ஹைதராபாத்- 62

ஹைதராபாதில் பசியோடு இருக்கும் யார் வேண்டுமானாலும் ஒரு வீட்டிற்குள் வந்து சமைத்து சாப்பிட்டு விட்டுப் போகலாம். இப்படி ஒரு பிரத்தியேகமான வீட்டை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

உங்களுக்குப் பசிக்கிறதா? நேராக இந்த வீட்டிற்குள் வந்து சமைத்து சாப்பிட்டு விட்டுச் செல்லலாம். மனது சரி இல்லையா? வந்து தங்கி விட்டுச் செல்லலாம்.

டாக்டர் சூரியபிரகாஷ் விஞ்சமூரி என்பவர் 2007 ல் ஹைதராபாதில் நடந்த ஒரு சம்பவம் குறித்து  நினைவு கூறுவதை கேட்போம்: காலை 11:40 மணி இருக்கும். ஒருவர் பசியோடு உள்ளே வந்தார். உணவு சமைத்துப் பரிமாறினேன். வேகவேகமாக அந்த சூடான சாதம்​, ​பருப்பு, பொரியலை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டார். நான்கு  பிடி சோறு உள்ளே சென்றதும் அவர் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.  அவரால் அழுகையை அடக்க இயலவில்லை. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். இரண்டு நாட்களாக ஒன்றும்  சாப்பிடவில்லை சார்! என்றார்”.

இது போல் பலருக்கு​ம் ​பசியாற்றி உதவுகிறார் இந்த வள்ளள் சிந்தனையுள்ள டாக்டர்.​ முதலில் அவரே சமைத்து பரிமாறி வந்தார். ஆனால் வருபவர்களின் ருசிக்கேற்ப அவர்களே சமைத்து உண்டால் நல்லது என்பதால் இப்போதெல்லாம் வருபவர்களே சமைத்து உண்ணும்படி வசதி அமைத்துக் கொடுக்கிறார். ​

ஹைதராபாதில் எல்லோருக்குமான ஒரு வீடு உள்ளது. அதுவே இந்த ஓபன் ஹவுஸ்… “அந்தரி இல்லு”.

காலை 5 மணியிலிருந்து இரவு ஒரு மணிவரை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம். எவருடைய அனுமதியும் தேவையில்லை. இங்கு பசியோடு வருபவர்களுக்​கு​ அரிசி, கேஸ் அடுப்பு, சமையல் சாமான்கள் அனைத்தும் தயாராக இருக்கும். எல்லாம் இலவசம். இவற்றைக்கொண்டு யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து அவர்களே சமைத்து சாப்பிட்டு, பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு​ச் ​ செல்லலாம்.

2006 ஜூன் 15ம் தேதி டாக்டர் சூரியபிரகாஷ், டாக்டர் காமேஸ்வரி தம்பதிகள்  திறந்த இல்லமான அனைவரின் வீட்டைத் தொடங்கினார்கள்.

பசித்த வயிற்றுக்கு, “கவலை வேண்டாம்! நான் இருக்கிறேன்” என்று அபயம் அளிக்கிறது இந்த ஓபன் ஹவுஸ். டாக்டர் சூரியபிரகாஷ் சொல்கிறார், “எங்கள் சொந்த வீட்டில் கேஸ் சிலிண்டர் காலியாக இருக்கலாம்…  அரிசி தீர்ந்து போய் இருக்கலாம். ஆனால் இந்த ‘திறந்த இல்லத்தில்’ மட்டும் அரிசி குறையாமல் பார்த்துக் கொள்கிறேன். எங்களுக்கு கிளினிக்கில் மருத்துவத் தொழிலில்  வரும் வருமானத்தில்தான் இந்த ஓபன் ஹவுஸை ‘அனைவரின்  இல்லத்தை’ நடத்துகிறோம்.

ALSO READ:  தாம்பரம்- கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கம்! முன்பதிவு தொடக்கம்!

அதே நேரத்தில் இங்கு பசியாறிப் பயனடைந்த ஒரு சிலர் அரிசி மூட்டைகள், பருப்பு முட்டைகளை வாங்கி வந்து இங்கு வைத்து விட்டுச் செல்வதும் உண்டு. ஆனால் இதில் ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால்… நாங்கள் இதுவரை இவ்வாறு திறந்த இல்லம் நடத்துகிறோம் எங்களுக்கு உதவுங்கள் என்று நன்கொடை கேட்டு யாரிடமும் கையேந்தியதில்லை. பசியோடு இருப்பவர் மட்டுமல்ல… மன நிம்மதிக்காக கூட இங்கு வந்து தங்கி மனது சரியானவுடன் செல்பவர்கள் உள்ளார்கள்.

அவர்களுக்காக இந்த வீட்டில் ஒரு மணியை​க் ​ கட்டி தொங்க விட்டுள்ளேன். யாராவது மனம் சரியில்லாதவர்கள் ஏதாவது பிரச்சினையோடு வந்தால் அந்த மணியை அடிக்கலாம். அப்போது நாங்கள் அவர்களிடம் வந்து என்ன விஷயம் என்று கேட்டு அவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்போம். பலருக்கும் அவர்கள் கூறுவதை பொறுமையாக கேட்டாலே மனது ஆறுதலாக இருக்கும். வீட்டில் ஏதாவது சச்சரவு நடந்திருக்கும். அங்கிருக்கப் பிடிக்காமல் மன நிம்மதிக்காக இங்கு வந்து சற்று நேரம் அமர்ந்துவிட்டு செல்லும் பலர் இருக்கிறார்கள். தன்னை யாரும் கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நம்பிக்கையோடு இந்த  திறந்த இல்லத்தில் வந்து தங்கி விட்டுத் திரும்பிச் செல்கிறார்கள்”.

இங்கு சமையலுக்குத் தேவையான வசதிகளோடு கூட சிறிய லைப்ரரி கூட அமைத்துள்ளனர் டாக்டர் தம்பதியினர். இங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு, படித்து, வேலை தேடிக் கொண்ட இளைஞர்கள் பலர் உள்ளனர்.

சமன்லால் என்ற இளைஞர் கூறுகிறார், “நான் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவன். ஹைதராபாத் வந்தபோது இந்த ஓபன் ஹவுஸ் இருப்பதை அறிந்து இங்கேயே தங்கிக்கொண்டு வகுப்புகளுக்குச் சென்று பயின்று  வருகிறேன். இப்போது தேர்வுக்காக தயாராகி வருகிறேன்” என்கிறார்.

இங்கு இதுபோல் தங்கி சமைத்து சாப்பிட்டு பிஹெச்டி பரீட்சையில் தேறியவர்களும், நல்ல வேலையில் சேர்ந்தவர்களும் பலர் உள்ளார்கள். அவர்கள் இந்த ஓபன் ஹவுசுக்கு தேவையான உதவிகளை தாமாகவே முன்வந்து செய்கிறார்கள்.

“நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இதுபோன்றவர்களால் இந்த இலவச இல்லம் ​தொடர்ந்து நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்கிறார் டாக்டர்.

“இந்த திறந்த இல்லம் குறித்து கேட்பவர்களிடம் என் பெருமைக்காக நான் இவற்றையெல்லாம் கூறிக் கொள்ளவில்லை. நீங்கள் வசிக்கும் இடங்களிலும் இது போல் நடத்துங்கள். அதற்கு என் இந்த சிந்தனை பயன்படுமானால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறுகிறார் டாக்டர்.

ALSO READ:  திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! பீதியைக் கிளப்பி.. வானில் வட்டமடித்து.. பத்திரமாகத் தரையிறக்கம்!

உலகிலேயே முதல்முறையாக ஒரு புதுவித சிந்தனையை நடைமுறை படுத்துகிறார்கள் டாக்டர் சூரியபிரகாஷ், டாக்டர் காமேஸ்வரி தம்பதியினர்.

ஹைதராபாத் கொத்தபேட்டையில்  உள்ள இந்த திறந்த இல்லமான ‘அனைவரின் வீடு’, 14 ஆண்டுகளாக​ ​பல லட்சம் பசித்த வயிறுகளை உணவால் நிறைவுறச் செய்திருக்கிறது. மாணவர்கள், வேலை தேடுபவர்கள், ஐதராபாத் நகரத்திற்கு பல்வேறு வேலையாக வந்தவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கு வந்தவர்கள் போன்ற பலருக்கு இந்த திறந்த வீடு ஒரு வரப்பிரசாதம்.  

டாக்டர் காமேஸ்வரியிடம் மருத்துவ சிகிச்சைக்காக தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். தெலங்காணா, ஆந்திரா மட்டுமின்றி​ ​பிற மாநிலங்களிலிருந்து கூட குழந்தை இல்லாத தம்பதியினர் சிகிச்சைக்காக இங்கு வருகிறார்கள். பொருளாதார வசதி இல்லாத நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறார் டாக்டர் காமேஸ்வரி.

அடுத்த ஆண்டு 2021 ஜூன் 15-க்குள் இந்த ஓபன் ஹவுஸ் கான்செப்ட்டை  பல இடங்களில் ஏற்படுத்துவதற்கு திட்டம் தீட்டியுள்ளனர் இந்த தம்பதியினர்.

டாக்டர் சூரியபிரகாஷ்  மனிதாபிமானத்தோடு பொதுமக்களுக்கு தன்னாலான கடமையை நிறைவேற்றுவதாக கூறுகிறார். இங்கு வருபவர்கள் முன்னறையில் வைத்திருக்கும் நோட்டில் பெயர் முகவரி எழுதுகிறார்கள்.

“நல்ல எண்ணத்தோடு நேர்மையாகச் செய்யும் செயலுக்கு நல்ல உள்ளங்கள் உதவுகின்றன என்பது என் நம்பிக்கை. நான் இதைத் தொடங்கியபோது யாரோ உதவுவார்கள் என்று நினைக்கவில்லை. ஆனால் தாமாகவே முன் வந்து அரிசி மூட்டையை உள்ளே வைத்து விட்டு செல்கிறார்கள் சிலர். பசியோடு வந்து அதிலிருந்து அரிசியை எடுத்து சமைத்து சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள் வேறு சிலர். யாரோ ஒருவர் பிரிட்ஜ் வாங்கி வைத்தார். சிலர் நாற்காலி, மேஜை கொண்டு வைத்தனர். ஹைதராபாதில் இருப்பவர்களில் ஒரு லட்சம் பே​ரை எடுத்துக்கொண்டால் ​அதில் ஒரு 10 பேராவது ஓபன் ஹவுஸில் சாப்பிட்டவர்கள் கட்டாயம் இருப்பார்கள். 14 ஆண்டுகளாக தடையின்றி நடக்கும் இந்த சேவை அற்புதமான கான்செப்ட். வருபவர்கள் அவர்களே சமைத்து உண்பதால் அவரவர் ருசிக்கு ஏற்ப சமைத்துக் கொள்கிறார்கள். எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. 2021 ஜூலை 18 க்குள் தெலங்காணாவில் ஒவ்வொரு நகரத்திலும் இந்த ஓபன் ஹவுஸ் கான்செப்டை ஆரம்பித்து நடத்த இருக்கிறோம்” என்று கூறுகிறார் இந்த சமூக நல ஆர்வலரான டாக்டர் சூரியபிரகாஷ்.​ ​தன்னைப் பார்த்து ஊக்கம் பெற்ற 86 பேர் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கிறார். அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் சுத்தமான காற்று, அனைவருக்கும் நூல்கள், பெண்களின் ஆரோக்கியம் என்ற இந்த நான்கு கான்செப்ட்களைக் கொண்டு இந்த முயற்சியை திட்டமிட்டு வருகிறார்கள்.

ALSO READ:  தமிழகத்தில்... வெளுத்து வாங்கும் கனமழை! தத்தளிக்கும் தலைநகரம்!

“ஸ்ப்ரெடிங் லைட் (Spreading Light)  என்று வாசலில் போர்டு இருக்கும். அந்த வீட்டுக்குள் புகுந்து நீங்கள் சமைத்து உண்ணலாம். நூல்களைப் படிக்கலாம். வேண்டிய உதவியை கோரிப் பெறலாம். ஜாதி இன வேறுபாடின்றி இந்த உதவி தொடர்ந்து நடந்து வருகிறது. அவரவர்கள் வருகிறார்கள்… சமைக்கிறார்கள்… சாப்பிடுகிறார்கள்… பாத்திரங்களை கழுவி வைக்கிறார்கள்.. புத்தகங்களைப் படிக்கின்றார்கள்.. சற்று நேரம் அமர்ந்து விட்டு சென்று விடுகிறார்கள். சிலர் தம் வீட்டில் அதிகமாக இருக்கும் உடைகளைத் துவைத்து எடுத்து  வந்து அடுக்கி வைத்து விட்டுச் செல்கிறார்கள். தேவையானவர்கள் அவற்றை எடுத்துச் செல்கிறார்கள். இங்கு யாரும் யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. இது போன்ற ஒரு கான்செப்ட் உலகிலேயே இதுதான் முதலாவதாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

முன்பெல்லாம் செல்வந்தர்கள் சத்திரம் கட்டிவிடுவார்கள். வழிப்போக்கர்கள் வந்து தங்கிச் செல்வார்கள். அங்கு உணவு உண்ணும் வசதி இருந்தது. சமையல்காரர்கள் இருப்பார்கள். பசியோடு வருபவர்க​ள் ​ உணவுண்டு ​ஓய்வெடுத்துச்​ செல்வதற்கும் படுத்து உறங்கி எழுந்து செல்வதற்கும் வசதி ஏற்படுத்தித் தருவார்கள்.

நாங்களே சமைத்துக் கொள்கிறோம் என்பவர்களுக்கும் அடுப்பு, விறகு, பாத்திரங்கள் எல்லாம் தருவார்கள்.  அதுபோன்ற ஒரு கான்செப்டை ஒரு தனிமனிதராக ஒருவர் நடத்துகிறார் என்றால் அது வியப்பானது அல்லவா?

 நாமும் அந்த டாக்டர் தம்பதியினரை பாராட்டுவோம்.

author avatar
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here